வெடிகுண்டுகளை கண்டறியும் ‘ரோபோ’ வெட்டுக்கிளி!மனிதன் தனக்கு இல்லாத பிரத்தியேக திறன்களை தன்னைச் சுற்றியுள்ள பிற உயிரினங்களில் கண்டபோது அந்த திறன்களுக்கு காரணமான அடிப்படை அறிவியலைக் கண்டறிந்து பல தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கினான். அதற்கான சிறந்த உதாரணங்களில் ஒன்றாக பறவைகளைக் கண்டு விமானம் உருவாக்கியதைக் கூறலாம்.

ஆனால் உயிரினங்களின் திறன்களின் அடிப்படையில் கருவிகளை உருவாக்க முடியாத சூழ்நிலைகளில் அந்த உயிரினங்களில் சில தொழில்நுட்பங்களை இணைத்து அவற்றையே கருவிகளாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர் தற்போதைய ரோபாட்டிக்ஸ் துறை விஞ்ஞானிகள்.

அத்தகைய உயிரினம் சார்ந்த கருவிகளுக்கு ‘பயோ பாட்’ (உயிரின எந்திரம்) என்று பெயர். இவை ‘சைபார்க்’ என்றும் அழைக்கப்படுகின்றன. உதாரணமாக மனிதர்கள் செல்ல முடியாத விஷவாயு உள்ள (அல்லது அதைப்போன்ற ஆபத்தான) இடங்களுக்கு சென்று அங்குள்ள ஆபத்துகள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகளின் கட்டளைகளின் அடிப்படையில் சேகரித்துக் கொண்டுவரும் விசேஷமான திறன்கொண்ட கரப்பான் பூச்சிகள் கடந்த 2011–ம் ஆண்டு உருவாக்கப்பட்டன.

அந்த வரிசையில், உயிரினங்களிலேயே நாய்களுக்கு அடுத்தபடியாக மிகவும் அதீதமான நுகர்வுத் திறன்கொண்ட ஒருவகை வெட்டுக்கிளிகளை வெடிகுண்டுகளில் உள்ள ரசாயனங்களைக் மோப்பம் பிடிக்கும் சைபார்க் கருவியாக மாற்றி, அவற்றின் செயல்பாடுகளை தங்கள் விருப்பப்படி பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானியான பரணிதரன் ராமன் தலைமையிலான ஆய்வாளர்கள்.

இதற்கு முன்னர் வெட்டுக்கிளிகளின் நுகர்வுத்திறன் தொடர்பான தனது ஆய்வில், ஒரு வாசனையைக் காட்டும்போது வெட்டுக்கிளிகளின் மூளையிலுள்ள எந்த பாகங்கள் செயல்படுகின்றன என்று கண்டறிந்து, அதன்பின்னர் ஒரு குறிப்பிட்ட வாசனையைக் கண்டறியும்படி வெட்டுக்கிளிகளுக்கு பயிற்சி கொடுத்தார் ராமன். பின்னர், அந்த பயிற்சி அளிக்கப்பட்ட வெட்டுக்கிளியை பல வாசனைகள் உள்ள இடத்தில் விட்டு பரிசோதித்தபோது, மிகவும் ஆச்சரியமாக, பல வாசனைகளுக்கு மத்தியில் அந்த ஒரு குறிப்பிட்ட வாசனையை மட்டும் துல்லியமாகக் கண்டறியும் திறன் அந்த வெட்டுக்கிளிக்கு  இருந்தது தெரியவந்தது.  

வெட்டுக்கிளிகளின் இந்த அதீத நுகர்வுத் திறனை வேறெந்த செயற்கை கருவியிலும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று உணர்ந்த ஆய்வாளர் ராமன், வெட்டுக்கிளிகள் எந்த வகையான ரசாயனங்களை கண்டறிகின்றன என்பது தொடர்பான தகவல்களை அவற்றின் மூளையிலுள்ள நரம்புகளின் செயல்பாடுகளின் மூலமாகக் கண்டறியும் திறன்கொண்ட நுண்ணிய மின்னணு சென்சார் கருவிகளை வெட்டுக்கிளிகளின் உடலில் பொருத்த திட்டமிட்டுள்ளார்.

ஏனென்றால், செயற்கையான நுகர்வுக் கருவிகளில் நுகர்வுத் திறனுக்கான சில சென்சார்களே இருக்கும். ஆனால் அதீத நுகர்வுத் திறன்கொண்ட வெட்டுக்கிளிகளின் மூக்கில் பல லட்சம் சென்சார்கள் மற்றும் பல வகையான சென்சார்கள் இருக்கும் என்கிறார் ராமன்.  

வெட்டுக்கிளிகள் மீதான இதற்கு முந்தைய ஆய்வுகளில், சூடான பகுதிகள் வெட்டுக்கிளிகளை திசை மாறி பயணிக்கத் தூண்டும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், விஞ்ஞானிகளின் கட்டளைக்கு ஏற்ப வெப்பத்தை உருவாக்கும் ஒருவகையான மின்னணு டாட்டூக்களை வெட்டுக்கிளிகளின் இறக்கைகளில் பொருத்துவதன் மூலமாக, தங்களின் கட்டளைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட திசைகளுக்கு பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்ட வெட்டுக்கிளி சைபார்குகளை உருவாக்கி வெடிகுண்டுகள் உள்ள இடங்களை துல்லியமாக மோப்பம் பிடிக்கும் வெட்டுக்கிளி பயோபாட்களை உருவாக்கி வருகிறது ராமனின் ஆய்வுக்குழு.

மிகவும் சுவாரசியமாக, வெட்டுக்கிளிகளின் இறக்கைகளில் பொருத்தப்படும் டாட்டூக்கள் மக்கும் தன்மைகொண்ட பட்டால் ஆனவை என்பதும், அவற்றில் ஆபத்தான இடங்களில் உள்ள ரசாயனங்களை மேலதிக ஆய்வுக்காக மாதிரிகளாக சேகரித்துக் கொண்டுவரும் நானோ அமைப்புகளும் இருக்கும் என்கிறார் ராமன்.

இதன்மூலம், மிகவும் அதீத நுகர்வுத் திறன் நாய்களுக்கு பயிற்சி கொடுப்பது மற்றும் நாய்கள் நுகர்ந்து சேகரிக்கும் தகவல்களை அவற்றின் மூளையில் இருந்து சேகரிப்பதில் உள்ள சிரமங்கள் ஆகியவை இல்லாமல், வெட்டுக்கிளி சைபார்குகளைக்  கொண்டே வெடிமருந்துகள் அல்லது வெடிகுண்டுகள் இருக்குமிடத்தை சுலபமாக மோப்பம் பிடித்துவிடலாம் என்று ஆச்சரியப்படுத்துகிறார் ஆய்வாளர் பரணிதரன் ராமன்.

வாழ்க வெட்டுக்கிளிகள், வளர்க வெட்டுக்கிளி சைபார்குகளின் தொண்டுகள்!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.