காஷ்மீர் முஸ்லீம்கள் - மார்க்ஸ் அந்தோனிசாமிகாஷ்மீர் குறித்து ஏராளமான கட்டுரைகள் வந்துகொண்டுள்ளன. பல்வேறு கோணங்களில் எழுதப்படும் இக் கட்டுரைகள் முக்கியமானவை. இணைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுரை முன் வைக்கும் கருத்து முற்றிலும் வித்தியாசமானது.

காஷ்மீர் மக்கள் சமயப் பொறை மிக்கவர்கள். 150 ஆண்டுகளுக்கு முன் ஒரு முஸ்லிம் ஆடு மேய்ப்பவர்தான் மலைக் குகை ஒன்றில் உருவாகி இருந்த ஒரு பனிக்கட்டியைப் பற்றி ஊரில் உள்ள தன் இந்து நண்பர்களிடம், "அது உங்கள் லிங்கம் போல இருக்கிறது" எனச் சொல்லி ஆற்றுப் படுத்தினார். பின் அதுவே அமர்நாத் புனிதத் தலம் ஆகியது. இன்று பனி உருவாகும் அந்த சீசன் அமர்நாத் புனித யாத்திரைக்குப் பல இலட்சம் இந்து யாத்ரீகர்கள் வந்து செல்லும் நிகழ்வாகிவிட்டது.

எனது காஷ்மீர் குறித்த நூலில் இது பற்றி விரிவாக எழுதியுள்ளேன். 1989 ல் அங்கு ஆயுதப் போராட்டம் உருவானபோதும் கூட எந்நாளும் அமர்நாத் யாத்திரை தடைபட்டதில்லை. காஷ்மீர்ப் போராட்ட வரலாற்றில் பண்டிட்கள் தாக்கப்பட்டதும் வெளியேற்றப்பட்டதும் ஒரு களங்கம்தான் என்ற போதிலும் அது அந்தப் போராட்ட வரலாற்றில் ஒரு சிறு விலக்குதானே ஒழிய அதுவே பொதுப் போக்கு அல்ல. அப்படி ஆனதில் வேறு சில அரசியலும் உண்டு.

அமர்நாத் யாத்திரையின்போது எத்தனை லட்சம் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி ஆங்காங்கு மிகப் பெரிய அளவில் 'லங்கர்' கள் அமைத்து உணவு தயாரித்து யாத்ரீகர்களுக்கு வழங்குவதும் உண்டு. சுமார் 150 ஆண்டு காலம் காஷ்மீர முஸ்லிம்களின் பொறுப்பிலேயே அமர்நாத் ஆலயம் இருந்து வந்தது. 2000 த்தில் shrine board ஒன்று உருவாக்கபடும் வரை முஸ்லிம்களே அதற்குப் பொறுப்பேற்றிருந்தனர்.

எனினும் படிப்படியாக அதன் நிர்வாகம் இப்படிக் கைமாறியதோடு, சுற்றுச்சூழல் ஆய்வுக் குழுவினரின் எச்சரிக்கைகளையும் மீறி யாத்ரீகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, யாத்திரைக் காலத்தை அதிகப்படுத்துவது ஆகியவற்றை அரசுகள் செய்தன. பா.ஜ.க அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் சின்ஹா இதில் முக்கிய பங்காற்றினார். 2008ல் PDP அரசு 80 ஏக்கர் நிலத்தை ஆலய விரிவாக்கத்திற்கு ஒதுக்கியபோது மிகப் பெரிய போராட்டம் அங்கு வெடித்தது. எனினும் அப்போதும் கூட யாத்ரீகர்களுக்கு முழுப்பாதுகாப்பையும் முஸ்லிம் மக்களே வழங்கினர். ஜம்முவில் பா.ஜ.க மற்றும் இந்துத்துவ சக்திகள் பொருளாதாரத் தடை விதித்து அத்தியாவசிய மருந்துகள் உட்பட பள்ளத்தாக்கு மக்களுக்குச் செல்ல விடாமல் தடுத்தபோதும் அங்கு இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் ஏதும் நிகழவில்லை.

காஷ்மீர் வரலாற்றில் அதற்கு ஒரு புகழ்பெற்ற இந்துப் பழமை உண்டு என்பதில் மறுப்பில்லை. காஷ்மீரச் சைவத்திற்கும் தமிழ்ச் சைவத்திற்கும் உள்ள தொடர்புகளை நாம் அறிவோம். அதே போல அங்கு ஒரு பவுத்தப் பாரம்பரியமும் உண்டு. ராகுல சாங்கிருத்தியாயன் காஷ்மீரிலிருந்து இங்கு அழிந்துபோயிருந்த பல பவுத்த நூல்களைக் கொணர்ந்தார் என்பதையும் நாம் கண்டுள்ளோம். இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுவதுபோல காஷ்மீருக்கு ஒரு புகழ்பெற்ற இந்துப் பாரம்பரியம் உண்டு என்பது போலவே அதற்கு அதே போலப் புகழ்பெற்ற ஒரு முஸ்லிம் நிகழ்காலமும் உயிர்ப்புடன் உள்ளது. அந்த பன்னூற்றாண்டுகால முஸ்லிம் பாரம்பரியத்தை அழிக்க முயலும் முயற்சிகள் சாத்தியமில்லாதவை மட்டுமல்ல அவை மிகவும் ஆபத்தானவை, கொடூரமானவை.

ஆனால் அந்த முயற்சியும் அங்கு தொடர்ந்து நடந்துகொண்டுதான் உள்ளது. அதில் ஒன்று காஷ்மீர் மொழிக்கு கடந்த எண்ணூறு ஆண்டுகளாக இருந்துவரும் பெர்சிய எழுத்து வடிவை மாற்றும் முயற்சி. பதிலாக காஷ்மீர மொழிக்கு தேவநாகிரி அல்லது சமஸ்கிருத எழுத்து வடிவம் தர வேண்டும் என்றொரு கருத்து சமீபத்தில் அங்கு பரவியது. ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க சக்திகள் 90 சதம் முஸ்லிம்களே வாழும் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கை இந்து அடையாளங்களுடன் முன்னிறுத்துவதும் தொடர்ந்தது.

சமீபத்தில் நரேந்திர மோடி அரசு பலஸ்தீன முஸ்லிம்கள் மத்தியில் இஸ்ரேல் அரசு யூதக் குடியிருப்புகளை உருவாக்கிய அதே வடிவில் இங்கு காஸ்மீர்ப் பள்ளத்தாக்கில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பண்டிட்களைக் கொணர்ந்து இடைக் குடியிருப்புகளை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்த போது காஷ்மீர முஸ்லிம்கள் அந்நியமாவது உச்ச நிலையைத் தொட்டது.

காஷ்மீரில் உருவாகியுள்ள இன்றைய எழுச்சியின் பின்னணியில் இதுவும் ஒன்று
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.