தமிழ் நாட்டில் உருது பேசும் முஸ்லீம்கள் அந்நியர்களா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உருது பேசும் முஸ்லீம்கள் சுமார் 15 லட்சம் பேர்கள்வரை இருக்கிறார்கள். இஸ்லாத்தில் ஜாதி பிரிவினைகள் கிடையாது. இவன் தீண்டத்தாகாதவன், இவன் கீழ்சாதியினன் என்ற பாகுபாடுகள் கிடையாது. ஆண்டான், அடிமை என்ற வேறுபாடுகளின்று ஒரே வரிசையில் நின்று தொழுவதற்கு காட்டித் தந்ததுதான் இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறை.
ஆனால் அனைத்து சமுதாயத்திலும் இருப்பதைப்போன்று பல்வேறு சமூகங்கள் உண்டு. குலம், கோத்திரங்கள் உண்டு. அது நபிகள் நாயகம் காலத்திலும் இருந்தது.அதற்கு முன்னரும் இருந்தது. இப்பொழுதும் உள்ளது.
மரைக்காயர் ராவுத்தர், மாலுமியார், லெப்பை, சாயபுமார்கள், தக்னி முஸ்லீம்கள் என்று பல்வேறு பிரிவுகள் தமிழ் நாட்டில் உண்டு. இப்பெயர்கள் யாவும் தொழில் அடிப்படையில் அமைந்ததே.
உருது மொழி பேசுபவர்களை தக்னி (Dakhni or Deccani) என்று அழைக்கிறார்கள். தெக்கண பகுதியினர் என்று பொருள்படும் வகையில் இக்காரணப்பெயர் ஏற்பட்டது.
தமிழ் நாட்டில் உள்ள முஸ்லீம்களின் பூர்வீகத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1.)அரேபியா, எகிப்து, ஏமன், ஈராக், பாரசீகம் ஆகிய நாடுகளிலிருந்து தமிழகம் புலம் பெயர்ந்தவர்களின் சந்ததியினர்.
2.)வட இந்தியாவிலிருந்தும், தக்கண பூமியிலிருந்தும் ராணுவப் படையினராகவும் ஏனைய தொழில் நிமித்தமாகவும் வந்து இடம் பெயர்ந்தவர்களின் சந்ததியினர்.
3.)தமிழகத்தில் சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடிய காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சன்மார்க்கம் போதிக்கவந்த இஸ்லாமியர்களின் நன்னடத்தையாலும், அவர்கள் காட்டிய சகோதரத்துவ அன்பாலும் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்தை தழுவிய பூர்வீக தமிழ்க்குடிமக்களின் சந்ததியினர்.
ஹைதராபாத்தில் நிஜாம்கள் ஆட்சி செய்துக் கொண்டிருந்த காலத்தில் அரண் காவலாளிகள், வாயிற்காப்போன், கருவூலப் பாதுகாவலர்கள், அரண்மனை வேலையாட்கள் போன்ற பணிகளுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டனர். விசுவாசமான பேர்வழிகள் என்று பெயரெடுத்திருந்த தமிழ் முஸ்லீம்கள் தமிழ் மாநிலத்திலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அரண்மனை பணிகளுக்குச் சென்ற இவர்கள் அங்கு பல்வேறு கைத்தொழில்களையும் கற்றுத்தேர்ந்து அந்தந்த பணியில் சிறந்தனர்.
படைகலன்களுக்கு தேவையான தோல் கருவிகள், தோலால் ஆன உடைகள், மற்றும் காலணிகள் தயாரிக்கவும் கற்றுத் தேர்ந்திருந்த இவர்கள் ஒரு சில தலைமுறைகளுக்குப்பின் திரும்பவும் தாயகம் வந்து குடியேறியபோது இவர்களின் தாய்மொழியும், செய்தொழிலும் அடியோடு மாறிப் போயிருந்தன.
வயிற்றுப் பிழைப்புக்காக அண்டை மாநிலம் வேலை தேடிப்போன “லெப்பை” வகுப்பாரின் முந்தைய பிரதானத் தொழில் மதரஸாக்களில் மார்க்கக் கல்வியை போதிக்கும் பணியாக இருந்து வந்தது. இப்போது அது முழுவதுமாகவே மாறிப் போயிருந்தது.
உருது பேசும் முஸ்லீம்களின் பூர்விகத்தை அறிய முதலில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதியிலிருந்து தொடங்குவோம். தோல் பதனிடும் முறையையும் நுட்பத்தையும் கற்றுத்தேர்ந்த இவர்கள் நாளடைவில் தோல் வர்த்தகத்தில் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண அவர்களது அனுபவம் பெரிதும் கைகொடுத்தது என்றால் அது மிகையாகாது.
ஐரோப்பிய சர்வதேச சந்தையில் புகழ்க்கொடி நாட்டிவரும் “Clarks”, “Ecco”, “Gabor”, “Florshiem”, “Espirit”, “Sears”, “JC Penny”, “Pierre Cardin” போன்ற நிறுவனங்களின் தயாரிப்புக்கள் வேலூர் மாவட்டத்தின் சின்னஞ்சிறு ஊர்களிலிருந்துதான் உற்பத்தியாகின்றன.. 2009-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இங்கிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியான தோல் பொருட்கள் மட்டும் ரூபாய் 1,524 கோடியைத் தாண்டுகின்றது
உருது மொழியை தங்கள் தாய்மொழியாக கருதும் இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் தமிழை தாய்மொழியாகக் கொண்ட லெப்பைகள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. உருது மொழி ஆதிக்கமுள்ள பகுதிகளில் இவர்கள் குடியேறியதால்தான் நாளடைவில் அம்மொழியே இவர்களின் பிரதான மொழியானது.
யார் இந்த லெப்பைகள். இவர்கள் வரலாறுதான் என்ன?
பண்டைய தமிழிலக்கியங்களில் “யவனர்” என்றும் “சோனகர்” என்றும் அழைக்கப்பட்ட முஸ்லீம்கள்தான் இந்த லெப்பைகள். ஆங்கில வரலாற்று நூல்களில் “Serandib muslims”, “Arwi Muslims” , “Moors” என்று பல்வேறு பெயர்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகளை நாம் காண முடிகின்றது.
லெப்பைகள் என்று அறியப்படும் இந்த முஸ்லீம் சமூகத்தினர் தமிழகம் வந்து சேர்ந்த வரலாறு முறையே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
1.கி.பி. 642-ஆம் வருடம் கலீபா உமர் அவர்களுடைய காலத்தில் நான்கு கப்பல்களில் அரேபியக் குழுக்கள் பாக்சந்தி வழியே இலங்கையிலுள்ள பெருவலா (Beruwala) என்ற இடத்தை வந்தடைந்தது. அங்கிருந்து வந்து தமிழகத்தை தங்கள் இருப்பிடமாக்கி கொண்டவர்கள்.
2.கி.பி.687-ஆம் ஈராக்கிலிருந்து கொடுங்கோலன் முக்தாருஸ் சகஃபி இப்னு அபு உபைத் (கி.பி. 622 – 687) என்ற நபரின் ஆட்சியின் அட்டூழியத்திற்கு பயந்து ஈராக்கிலிருந்து ஒரு பெரும் குழுவாய் காயல்பட்டினம் வந்து சேர்ந்தவர்கள்.
3.கி.பி. 866 – ஆம் ஆண்டு கால்ஜி என்ற அராபியர் தலைமையில் எகிப்து நாட்டில் “கரஃபத்துக் குப்ரா” என்ற இடத்திலிருந்து வியாபார நிமித்தமாகவும், இஸ்லாமிய சன்மார்க்கத்தை எடுத்துரைப்பதற்காகவும் புலம் பெயர்ந்து தமிழகம் வந்து சேர்ந்தவர்கள் .
லெப்பை என்ற பெயர் மருவி “லெவ்வை” என்றும் ஆனது. இவர்களின் தாய்மொழி தமிழ் மொழி. உருதுமொழி பேசும் இந்த லெப்பைகள் வடஆற்காடு மாவட்டத்தில்தான் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். வீட்டில் இவர்கள் பேசும் மொழி உருது மொழி. வெளியில் பிறசகோதர மதத்தினருடன் இவர்கள் பேசும் மொழி தமிழ்.
வடஆற்காடு மாவட்டத்தில் வசிக்கும் உருது பேசும் மக்கள் பெரும்பாலோருடைய பூர்வீகமும் சோழநாட்டின் தஞ்சை தரணி என்பது சுவராஸ்யமான தகவல். இவர்கள் ராவுத்தர் வகுப்பை சார்ந்தவர்கள். உருது மொழியை தாய்மொழியாக்கிக் கொண்ட இவர்கள் பூர்வீக தமிழ் மக்கள் என்பது கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர், பேரணாம்பட்டு, வல்லத்தூர், மேலப்பட்டி, விஷாரம், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் லெப்பைகள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதற்கு பற்பல ஆதாரங்களை எடுத்து வைக்க முடியும்.
தங்கள் தந்தையின் பெயரை இனிஷியலாக கொள்ளாமல் தங்களின் ஊர்ப்பெயர் அல்லது வீட்டுப் பெயர்களை தங்களின் பெயரோடு இணைத்துக் கொண்டவர்கள் இவர்கள். இப்பழக்கம் கேரள மக்களிடம் பரவலாக நாம் காண முடியும்.
ஆனைக்கார் (ஆனைக்காரர் – மாவுத்தர்), நாட்டாமைக்கார் (நாட்டாமைக்காரர்), கந்திரிக்கார், (கந்தக பொடிக்காரார் – பட்டாசு தயாரிப்பவர்), வாணக்கார் (வாணவேடிக்கை பட்டாசு தயாரிப்பவர், ஜல்லடைக்கார் (ஜல்லடை தயாரிப்பவர்), கட்லுகார் (கட்டில் தயாரிப்பவர்), வளையல்கார் (வளையல் காரர்) , அய்யாப்பிள்ளை, அப்பாப்பிள்ளை, பாம்புக்கண்ணு, ஏ.பா. வீடு (ஏழுபானை விடு), கண்ணீயம்பாடி, சோழாவரம், ஊசி வீடு, நெய்வாசல், கோட்டாவால் போன்ற குடும்பத்தின் பெயர்கள் இவர்களைத் தமிழ் பூர்வீகம் என்று காட்டிக் கொடுத்துவிடும்.
உருவ அமைப்பை வைத்து பெயர் சூட்டப்பட்ட குடும்பப் பெயர்களும் உண்டு. நெட்டை செய்யது, மூக்கண்ணன், சித்தண்ணன், குள்ள மீரான் போன்ற பெயர்களும் இதில் அடங்கும்
இவர்கள் வடநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்களாக இருந்திருந்தால் இவர்களின் குடும்பப் பெயர் இப்படி இருந்திருக்காது. மாறாக வடநாட்டில் இருப்பதைப்போன்று சாய்வாலா, கிலிட்வாலா, மட்காவாலா, கான்ச்வாலா என்று இருந்திருக்கும்.
உருது மொழியின் ஆதிக்கத்தினால் இவர்கள் தங்கள் தமிழ் முகத்தை தொலைத்தார்களேத் தவிர இவர்களின் பூர்வீகம் தமிழ் மொழிதான் என்பது ஊர்ஜிதமாகிறது. இவ்வட்டாரத்தில் வசிக்கும் முஸ்லீம்கள் மட்டுமல்ல,. இந்து சகோதரர்களும் இதே உச்சரிப்புடன் வட்டார வாசனையோடு உருது மொழியில் சரளமாக உரையாடுவதை இங்கு சர்வசாதரணமாக காண முடிகிறது.
எப்படி பணிநிமித்தம் இலங்கையில் குடியேறிய தமிழ் முஸ்லீம்கள் சிங்கள மொழியை கற்று தேர்ச்சி பெற்றார்களோ, எப்படி மலேசியாவில் குடியேறிய தமிழ்மக்கள் மலாய் மொழியில் தேர்ச்சி பெற்றார்களோ அதேபோன்றுதான் இவர்களும்.
வட ஆற்காடு தமிழ் முஸ்லீம்களுக்கு உருதுமொழி மீது அபார மோகம் ஏற்பட்டதற்கு காரணங்கள் பலவுண்டு. சந்தா சாஹிப், ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் ஆற்காடு நவாப்களின் ஆளுமையில் வடஆற்காடு மாநிலம் இருந்தபோது உத்தியோகபூர்வ மொழியாக பாரசீகம் மற்றும் உருது மொழி கையாளப்பட்டது. திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் கோட்டைகளும் இராணுவ முகாம்களும் நிர்மாணிக்கப்பட்டன.
இச்சமயத்தில் பீஜப்பூர், உத்திர பிரதேசம், தில்லி போன்ற இடங்களிலிருந்து இஸ்லாத்தை எடுத்துரைக்க வந்த மார்க்க அறிஞர்களும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்து குடியமர்ந்தனர்.
சுமார் 150 ஆண்டுகட்கு முன்னர் வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் பகுதிகளில் இஸ்லாமிய மார்க்கக் கல்வி பாடசாலைகள நிறுவப்பட்டன. உருது மற்றும் பாரசீக மொழிகளில் மார்க்க சம்மந்தமான நூல்கள் ஏராளமாக இருந்தமையால் மார்க்க அறிவு பெற்றுக்கொள்ள உருதுமொழி அவர்களுக்கு பெருந்துணையாக இருந்தது. அதன் காரணமாக உருது மொழி மீது அவர்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது.
உருது மொழியானது இசைக்கும், கவிதைக்கும் இலகுவான மொழி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. “காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பதைப்போல ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது என்பதை பரந்த மனப்பான்மையோடு ஆராய்பவர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்வார்கள்.
ஒரு மொழி மீது மற்றொரு மொழியின் ஆதிக்கம் மேலோங்குவது இங்கு ஒன்றும் புதிதல்ல. நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள் தமிழைத் புறந் தள்ளிவிட்டு தாங்கள் தமிழர்கள் என்று காட்டிக்கொள்ள வெட்கப்படும் நடப்புகளையெல்லாம் நாம் காணவில்லையா? ஒரு காலத்தில் சமஸ்கிருதம் தமிழ்மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கியபோது தமிழ்நாட்டில் தனித்தமிழ் இயக்கம் தொடங்கிய தமிழ் தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் பணியை நாம் இங்கு நினைவு கூறுதல் அவசியம்..
தென்மாவட்டங்களில் இருக்கும் லெப்பைகளுக்கு உருது மொழி அறவே தெரியாது. முஸ்லீம்கள் என்றாலே உருதுமொழி தெரிந்து வைத்திருப்பார்கள் என்று நினைப்பவர்களும் ஆம்பூர் பகுதியில் உண்டு. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள்” என்றுதான் அவர்களின் அறியாமையை விமர்சிக்க வேண்டும்.
உருதுமொழி பேசும் இவர்கள் தங்களை தமிழர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்வது கிடையாது என்ற வாதம் வைக்கப்படுவதையும் காண்கிறோம். லெப்பை வகுப்பாரின் தாய்மொழி தமிழ்மொழி என்ற வரலாறு அவர்களில் பலருக்கே தெரியாத காரணம்தான் இது.
அதேசமயம் மேற்கத்திய கவிவாணர்களின் தாக்கத்திற்கு உட்பட்ட புதுமை விரும்பிகள், மரபுப் பிடியில் சிக்கியிருந்த தமிழ்க் கவிதையை மீட்டு வெற்றிகண்ட “வானம்பாடி” இயக்கத்துக் கவிஞர்களும் இந்த மண்ணிலிருந்து உதித்தவர்கள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
உருது முஸ்லீம்களை தமிழகத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்களைப் போன்று சிலர் சித்தரித்து அவர்களை அந்நியப்படுத்த முயல்வதை அரசியல் சூழ்ச்சி என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.