இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு
சென்னையில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் பங்கேற்பு!

சென்னையில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று (ஜூலை 14) காலை சென்னை நிருபர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கை :

பிரபல ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் 2010ல் வெளியிட்ட சக்திவாய்ந்த 100 இந்தியர்களின் பட்டியலில் ஒருவராக இடம் பெற்ற, உலகம் முழுவதும் அறியப்பட்ட இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் மீது மத்திய அரசும், மாராட்டிய மாநில அரசும் களங்கப்படுத்தியும், தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தியும் கட்டவிழ்த்துள்ள அத்துமீறிய அவதூறுகளை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இந்த அத்துமீறிய போக்கை கண்டித்து வரும் ஜீலை 16 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தான் விரும்பும் எந்தவொரு மதத்தை பின்பற்றவும் பரப்புரைச் செய்யவும் கடைபிடிக்கவும் உரிமை அளித்துள்ளது. இந்த அடிப்படையில் அமைதி வழியில் இஸ்லாமிய பரப்புரையை செய்து உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களின் அபிமானத்தைப் பெற்றவர் டாக்டர் ஜாகிர் நாயக். அவர் ஒரு போதும் வன்முறையையோ பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை.

இஸ்லாமிய மார்க்த்தை மட்டுமின்றி, பல்வேறு சமயங்களின் வேத நூற்களையும், கோட்பாடுகளையும், ஆழமாகக் கற்றவர் ஜாகிர் நாயக். சமயக் கோட்பாடுகளுக்கு இடையே இருக்கும் ஒருமைப்பாட்டை, நுண்மான் நுழைபுலத்தோடு பேசக்கூடியவர். இவரது Similarities between Islam and Hinduism (இஸ்லாமிற்கும், இந்து சமயத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள்) என்ற ஆய்வு நூலே இதற்குச் சான்று.

இலட்சக்கணக்கான மக்களைத் தமது அமைதி வழிப் பேச்சின் மூலம் கவர்ந்தவர் ஜாகிர் நாயக். உலகின் பல்வேறு நாடுகளின் அரசு விருந்தினராகவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறப்பிற்குரிய இந்தியராவார், தனது பேச்சாலும், எழுத்தாலும், பயங்கரவாதத்தையும், பயங்கரவாதப் பழியை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சுமத்தும் பாசிச சக்திகளையும் எதிர்த்து வரும் டாக்டர் ஜாகிர் நாயக் மீது, மத்திய அரசும் மராட்டிய மாநில அரசும் காழ்ப்புணர்வு கொண்டு அவரை ஒடுக்கும் முயற்சியல் இறங்கியுள்ளது. வன்மையான கண்டனத்திற்குரியது.

சமீபத்தில் 20க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களை வங்கதேசத்தில் பறித்த பயங்கரவாத தாக்குதல் உட்பட அப்பாவி மக்களை இலக்காக கொள்ளும் எல்லாவகையான பயங்கரவாதங்களையும் தான் எப்போதுமே மிக வலிமையாக கண்டித்துள்ளதாக ஆதாரபூர்வமாக ஜாகிர் நாயக் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

லவ் ஜிகாத், மாட்டிறைச்சி அரசியல், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்ற மிரட்டல் இப்படியாக தொடர்ந்து சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வெறுப்பு அரசியல் செய்து வருகின்றது நாட்டை ஆளும் சங்க பரிவார் அரசு. நாட்டில் மதசார்பின்மையை காட்டிக்காக்க பாடுபடும் தீஸ்தா செடல்வாட் போன்ற மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் அவர்கள் நடத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; கல்புர்க்கி, நாரயன் தபோல்க்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே மீதான கொலைவெறி தாக்குதல்கள்; இந்த வெறுப்புச் செயல்பாடுகளின் தொடர்ச்சியாக தான் டாக்டர் ஜாகிர் நாயக் மீதும் அவரது பீஸ் தொலைக்காட்சியின் மீது தற்போது தொடுத்துள்ள வெறுப்புணர்வு தாக்குதல்களை கருதவேண்டியுள்ளது.

டாக்டர் ஜாகிர் நாயக் மீதான மத்திய அரசு மற்றும் மராட்டிய அரசின் வெறுப்புணர்வு அரசியலைக் கண்டித்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தலைவர்களும், மதசார்பின்மை உணர்வாளர்களும் கண்டன உரை நிகழ்த்துவர் ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் பங்குக் கொள்வர்.

இப்படிக்கு

A.K.முஹம்மது ஹனிபா,
ஒருங்கிணைப்பாளர், தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு,
சென்னை.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.