காஷ்மீர் இந்தியாவுடையது என நம்பும் சில வரலாறு தெரியாதவர்களுக்கு......'காஷ்மீர் - ஒரு அழகிய தேசம் ஆக்கிரமிப்பும் வண்மமும் தேசமானது 'வரலாறு கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மயூர பேரரசின் கீழும், கி.பி.16 – 18ம் நூற்றாண்டு காலப்பகுதியில் முகலாய ஆட்சியின் கீழும், பின்னர் 19ம், 20ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழும் காஷ்மீர் இருந்துள்ளது. 1846ல் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் காஷ்மீர் இருந்தது. சீக்கியர்களை ஆங்கிலேயர்கள் தோற்கடித்த போது, காஷ்மீரை அம்றிஸ்ரார் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜம்முவின் மஹாராஜாவான குலாப் சிங்கிற்கு 7.5 மில்லியன் ரூபாய்களுக்கு ஆங்கிலேயர் விற்று விட்டனர். குலாப் சிங் ஜம்முவின் சுதந் மஹாராஜாவாக (Princely Ruler) மாறினார். குலாப் சிங் 1857ல் இறந்தார். ரம்பீர் சிங் மற்றும் பிரதாப் சிங் ஆகிய இரு மஹாராஜாக்கள் அவரையடுத்து ஆட்சிக்கு வந்தனர். இறுதியாக வந்த ஆட்சியாளரே ஹரிசிங் (1925-1947). காஷ்மீர் தேசத்தின் குடிமக்களில் 80%பேர் முஸ்லீம்கள். பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களோ மன்னர் ஹரிசிங்கிற்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சி செய்து வந்தனர். 1931ல் ‘டொக்ரா படுகொலைகள்’ மூலம் முஸ்லிம்களை ஹரிசிங் அடக்கினார்.
பல்வேறு தேசங்களாக இருந்து வந்த இந்தியா என்னும் துணைக்கண்டம், சுதந்திரம் பெற்ற போது, காஷ்மீரும் ஒரு தேசமாக ஒரு மன்னரின் ஆதிக்கத்திலேயே தான் இருந்தது. இந்து மன்னரான மஹாராஜா ஹரிசிங் (தற்போது காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்கும் கரண் சிங்கின் தந்தையார்) கஷ்மீரை அப்போது ஆட்சி செய்து வந்தார். காஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்ற குழப்ப நிலை நீடித்தது. ஆட்சியாளர் இந்தியாவுடனும், மக்கள் பாகிஸ்தானுடனும் சேர வேண்டுமென எதிர்-எதிர் விருப்புக்கள் தோற்றம் பெற்றதே பிரச்சினையின் அடிப்படையாகும். தனது கொடுங்கோண்மையை மேலும் பலப்படுத்த, மக்களின் விருப்புக்கு எதிராக 1947 அக்டோபர் 26ல் ‘சுயாட்சி’ அடிப்படையில் இந்தியாவுடன் ஹரிசிங் சேர்ந்து கொண்டார். இந்தியப் படையினரை அழைத்து காஷ்மீர் மக்கள் மீதான தனது பிடியை இறுக்கிக் கொண்டார்.
அடுத்து இந்தியாவும், பாகிஸ்தானும் யுத்தத்தில் இறங்கின. இந்திய எல்லையிலிருந்து இந்திய இராணுவமும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீருக்குள் ஊடுருவின. கடைசியில், காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் (Azad Kashmir) என்று பாகிஸ்தான் கூறியது. அதனை ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan Occupeid Kashmir-POK) என்று இந்தியா கூறியது. பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக, மற்ற காஷ்மீரின் பகுதிகளை இந்திய இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. இந்தியா கைப்பற்றிய காஷ்மீரை India occupeid Kashmir - IOK என பாகிஸ்தான் கூறுகிறது. சந்தடி சாக்கில் சீனாவும் காஷ்மீரின் ஒரு பகுதியை பிடித்துக்கொண்டது.
காஷ்மீர் மீதான உரிமைக்கு இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் போட்டியிட்டன. 1948 ஜனவரி 1ஆம் தேதி அன்றைய இந்தியப் பிரதமரான ஜவஹர்லால் நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு எடுத்துச்சென்றார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 21-4-1948 அன்று தீர்மானம் (எண் 47) நிறைவேறியது. அதன் படி, இரு நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அவரவர் ஊடுருவிய பகுதியிலிருந்து இரு நாட்டு இராணுவமும் வெளியேற வேண்டுமென அத்தீர்மானம் அமைந்திருந்தது. ஆனால், இது நடக்கவில்லை.
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது ஆக்கிரமிப்பை சட்ட பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால், காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அவர்களின் கருத்தை அறிந்து முடிவெடுப்பது என்று ஐநா சபையில் ஒப்பந்தமானது.
1. காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா?
2. பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது
3. தனி நாடாகவே இருக்க வேண்டுமென விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும், வாக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹரிசிங் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் ஐ.நா. சபையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்.
இந்நிலையில், காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைய வேண்டுமென்கிற நேருவின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார் மாநில முதல்வரான (அப்போது அதற்கு பிரதமர் பதவி எனப் பெயர்) ஷேக் அப்துல்லாஹ். அவருக்கு ஐ.நா.சபையின் தலையீடு பிடிக்கவில்லை. பொது வாக்கெடுப்பிலும் ஆர்வமில்லை. ஆனால், நேரு தலைமையிலான இந்திய அரசாங்கமோ பொது வாக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டிருந்தது. பாகிஸ்தான் தன்னுடைய இராணுவத்தை விலக்கிக் கொண்டால் தான் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமென இந்தியா கூறியது.
நேருவுடன் ஷேக் அப்துல்லாஹ் நட்பு பாராட்டியதாலும், இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்ததாலும் கஷ்மீர் மக்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாதென பாகிஸ்தான் கூறியது. உலக நாடுகளின் தலையீட்டில் இரு தரப்பு இராணுவத்தையும் வெளியேற்றலாம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், கஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை விரும்பவில்லையெனக்கூறி, பாகிஸ்தானின் யோசனையை நிராகரித்த இந்தியா, பொது வாக்கெடுப்பு என்கிற ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் கை கழுவியது.
அதே நேரத்தில், காஷ்மீரைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொள்வதில் இந்தியா முழுமையாகக் கவனம் செலுத்தியது. கவனஞ்செலுத்தியும் வருகிறது.
1989வரை ஆயுதக்குழுக்கள் இந்தியாவுக்கெதிராக காஷ்மீரில் தோற்றம் பெறவில்லை. ஆயுதப் போராட்டம் வெடித்தது முதல் இன்று வரை 93,379 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய இராணுவப் பாதுகாப்பில் வைத்து கொல்லப்பட்டவர்கள் 6,974 பேர். அழிக்கப்பட்ட, தீ வைக்கப்பட்ட வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகளின் எண்ணிக்கை 1,05,866. விதவைகள் 22,734. அநாதையாக்கப்பட்ட சிறுவர்கள் 1,07,366 பேர். கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு, மானபங்கத்திற்கு உட்பட்ட பெண்கள் 9,946 பேர். காஷ்மீர் மீடியா சேவை இத்தகைய தகவல்களை நாளாந்தம் வழங்கி வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் தற்போது குறிப்பாக ஆறு தரப்பினர் களத்தில் குதித்துள்ளனர்.
1.ஆயுதப் போராட்டக்குழுக்கள்
2.பிரிவினைவாத சுதந்திர ஹுர்ரியத் தலைவர்கள் 3.இந்திய சார்பு காஷ்மீர் அரசியல் கட்சிகள்
4.இந்தியா பாகிஸ்தான மனித உரிமை அமைப்புகள்.
"1989 ஆம் ஆண்டு வரை பொறுமையுடன் நிராயுதபாணியாக எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சர்வ சன வாக்கெடுப்பை நடத்துமாறு கோரி வந்தோம். தேர்தல்களில் மோசடிகளைச் செய்து, இந்தியா தான் விரும்பியோரை பொம்மை ஆட்சியாளர்களாக எம்மீது திணித்து, தனது ஆக்கிரமிப்பை பலப்படுத்தி வருகிறது. எனவே, ஆயுதப் போராட்டமே வழி” என்கின்றன ஆயுதப் போராட்டக்குழுக்கள். இவர்கள் ஏழு இலட்சம் இந்திய இராணுவத்திற்கெஎதிராக சண்டையில் குதித்துள்ளனர்.
அடுத்து ஹுர்ரியத் சுதந்திரக் கட்சிகளே காஷ்மீர் விவகாரம் மீண்டும் சர்வதேச அரங்கில் முன்னணிக்கு வர பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். “ஐ.நா. சபையும் முன்னாள் இந்தியப் பிரதமர் நேருவும் எமக்கு வாக்களித்த, எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய சுய நிர்ணய உரிமை எமது பிறப்புரிமை. இந்தியா வழங்கும் பொருளாதார பொதிகளுக்காக, கண் துடைப்புகளுக்காக எமது பிறப்புரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். சுய நிர்ணய உரிமைக்கான சர்வ சன வாக்கெடுப்பு நேர்மையாக நீதியாக இடம் பெறும் வரை ஆயுதமின்றி அமைதியான போராட்டத்தைத் தொடர்வோம். இப்பணியில் இது வரை கொல்லப்பட்டு, ஷஹீதானவர்களின் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வோம்” என்பது ஹுர்ரியத் தலைவர்களின் நிலைப்பாடாகும்.
நிலவரம் அபாயமான கட்டத்தை அடையும் போது மாத்திரம் இந்தியா பேச்சுவார்த்தைக்கு வரும். அந்த இடைவெளியில் தனக்குரிய இலாபங்களை எட்டிக் கொள்ளும். பின்னர் கஷ்மீரிகள் மீது பழைய ஆக்கிரப்புக் கொள்கைகளையே தொடரும் என்பதும் இவர்களது வாதமாகும்.
காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வின்றி இந்தியாவுடன் உறவுகள் வழமைக்கு வரமாட்டாது என்பது பாகிஸ்தானின் நிலைப்பாடு.
முன்னாள் பகிஸ்தான் ஜனாதிபதி முஷாரஃப்– முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பேயி தலமையிலான சமாதானப் பேச்சுக்கள் 2004 ஜனவரியில் ஆரம்பித்தன. காஷ்மீர் ஹுர்ரியத் பிரதிநிதிகளை மூன்றாம் தரப்பாக பேச்சுக்களில் பங்கு பெற இந்தியா அனுமதிக்கவில்லை. 2008 நவம்பர் மும்பை தாக்குதலையடுத்து, நிறுத்தப்பட்ட பேச்சுக்கள் இன்னும் உரிய முறையில் துவக்கப்படவில்லை. அந்த மண்ணுக்கு சொந்தக்காரர்களான காஷ்மீரிகள் உண்மையில் பாதிக்கப்பட்டே உள்ளனர்.
ஐ.நா. சபையும் இந்தியாவும் அவர்களுக்கு வாக்களித்துள்ள நிலையில், அவர்களுடன் பேசி அவர்களுக்குரிய உரிமையைக் கொடுக்க வேண்டும். பிராந்தியத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் காஷ்மீரிகளுக்குரிய சுய நிர்ணய உரிமையை அலைக்கழித்து வருகிறது. 1947 ஆகஸ்ட் 14 இந்திய துணை கண்டம் பிரிக்கப்பட்ட தினம். பாகிஸ்தான் – இந்தியா என இரு நாடுகளாகப் பிரிவதற்கான உண்மையான அடிப்படை ஒழுங்கே சர்வ சன வாக்கெடுப்பாகும்.
இதனை ஆழ்ந்து நோக்கும் எவரும் ஓர் உண்மையைப் புரிந்து கொள்வார். மக்களின் விருப்பினடிப்படையிலேயே இப்பிரிவினை ஏற்பட்டது என்பதே அவ்வுண்மை. சிற்றரசர்கள் (Princely States) எடுக்கும் தீர்மானமானது, நடைமுறையில் பெரும்பான்மை மக்களை வைத்தே மேற்கொள்ளப்பட்டது. ஹைதராபாத் சமஸ்தான மக்களுள் பெரும்பான்மையினர் இந்துக்கள். ஆட்சியாளர்கள் முஸ்லிம் நிஜாம்கள். மக்கள் இந்தியாவுடன் சேர்ந்து கொண்டனர். இதே நடைமுறை கஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 80% பெரும்பான்மை முஸ்லிம்களின் விருப்பை சிறுபான்மை ஆட்சியாளரான ஒருவர் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?
காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கும் , ஹைதராபாத் நிஜாமும் தத்தமது மக்களின் விருப்பத்திற்கு எதிராக முடிவெடுத்தவர்கள். ஆனால் அதிகாரம் ஹரிசிங் பக்கமே நின்றது. தோற்றது காஷ்மீரிகள்.

Thanks To: Abdul Wahab
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.