மதுரை குண்டு வெடிப்பு வழக்குகளும் காவல்துறையும் : உண்மை அறியும் குழு அறிக்கை பதிவு 2
இந்த நிலை சமூக ஒற்றுமைக்கும் அடிப்படை நீதிவழங்கு நெறிமுறைகளுக்கும் எதிரானது என்கிற வகையில் இது குறித்து ஆய்வு செய்து உண்மைகளையும், ஐயங்களையும் பொது வெளியில் வைப்பதற்கென கீழ்க்கண்ட சமூக ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்
1. பேரா.அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை, 2. ரஜினி, மூத்த வழக்குரைஞர், உயர்நீதிமன்றக் கிளை, மதுரை, 3. வழக்குரைஞர் என்.எம்.ஷாஜஹான், மாநிலச் செயலர், NCHRO, மதுரை, 4. வழக்குரைஞர், ஏ.ராஜா, உயர்நீதிமன்றக் கிளை, மதுரை, 5. வழக்குரைஞர் எம். முஹம்மது அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர், NCHRO, சென்னை 6. வழக்குரைஞர் எஸ்.ஏ.எஸ்.அல்லாவுதீன்,உயர்நீதிமன்றக் கிளை, மதுரை,

இக்குழுவினர் இந்தப் 17 வெடிகுண்டு வழக்கு விவரங்களையும் முழுமையாக ஆராய்ந்தபின் சென்ற ஆக 5, 2016 அன்று மதுரை நகர காவல்துறை ஆணையர் ஷைலேஷ் குமார் யாதவ் ஐ.பி.எஸ், உளவுத்துறை உதவி ஆணையர் முத்து சங்கரலிங்கம், ஏ.டி.எஸ்.பி மாரிராஜன் ஆகிய காவல்துறை அதிகாரிகளையும் குற்ற வழக்குகளில் தொடர்பு படுத்தப்பட்டுள்ள மதுரை புதுராமநாதபுரம் சாலை முகமது முபாரக் எனப்படும் உமர் ஃபாரூக்(35) த/பெ மீரான் கனி, தற்போது கைது செய்யப்படுச் சிறையில் இருக்கும் நெல்பேட்டையில் செல்போன் கடை உரிமையாளர் அபூபக்கர் சித்திக்கின் தாய் ஜரீனா பேகம் க/பெ பீர் முகம்மது, நெல்பேட்டை பாண்டலி எனப்படும் முகமது அலி (39) த.பெ முகமது சுல்தான், நெல்பேட்டையில் பீடா கடை வைத்துள்ள சகோதரர்கள் ஃபரீத்கான் மற்றும் மன்சூர் கான் த/பெ அப்துல் ரீதிஃப் கான், நெல்பேட்டை வழக்குரைஞர் உ.முகமது அலி ஜின்னா த.பெ உமர் பாய், நெல்பேட்டை வழக்குரைஞர் சௌகத் அலி, காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனின் புகார்க்கடிதம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரிட் மனு தாக்கல் செய்துள்ள வழக்குரைஞரும் SDPI கட்சியின் மதுரை மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவருமான சையது அப்துல் காதர் த.பெ அப்துல் ரஷீது ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசினர். மீண்டும் இவர்களில் சிலரைப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர். மேலூரில் பள்ளிவாசல் முன்பு வாசனைத் திரவியங்கள் விற்கும் அப்பாஸ் மைதீன் த/பெ ஷேக்தாவூத், மேலூரில் தற்போது ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்துவரும் முபாரக் த.பெ ஷேக் என்கிற மீரா மைதீன், ஆட்டோ ஓட்டுநர் யாசின் த.பெ காதர் மைதீன் மற்றும் பிரியாணி மைதீன் த.பெ பக்ருதீன் ஆகியோரை நேரில் சந்திக்காவிட்டாலும் தொலை பேசியில் அவர்களுடன் விரிவாகப் பேச முடிந்தது. இந்த வழக்குகள் சிலவற்றை தற்போது விசாரித்து வரும் ஆய்வாளர் சீனிவாசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். 17
வெடிகுண்டு வழக்குகளின் சுருக்கமான விவரங்கள்

1. 30.04.11 – மதுரை மாட்டுத்தாவணி அருகில் ‘டாஸ்மாக்’ பாரில் குண்டு வெடிப்பு (கே.புதூர் காவல்நிலையக் குற்ற எண் 788/2011). பள்ளிவாசலுக்கு அருகில் டாஸ்மாக் இருந்ததால் குண்டு வைக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டது. 2. 30.09.2011 – கே.புதூர் பஸ் டெப்போவில் நின்றிருந்த அரசு பேருந்தில் வெடிக்காத குண்டு ஒன்று காணப்பட்டது (கே.புதூர் கா.நி.கு.எண் 1302/2011). 3. 07-12,2011 – திருவாதவூர் அருகே சித்தரடிகள் குளத்தில் குண்டு வெடிப்பு (மே.லூர் கா.நி.கு.எண் 757/2011) – பாபர் மசூதி தகர்ப்புக்கு எதிர்வினை எனக் காரணம் சொல்லப்பட்டது). 4. 01.05.2012 – மதுரை அண்ணா நகர் ஶ்ரீராமர் கோவில் கம்பி கேட் அருகில் சைகிள் குண்டு வெடிப்பு. (அண்ணா நகர் கா.நி.கு.எண் 404/2012) –பா.ஜ.க வின் தாமரை சங்கமம் நிகழ்ச்சிக்கு அத்வானி வருகையை எதிர்த்து எனச் சொல்லப்பட்டது). 5. 03.08.2012 – உமர் ஃபாரூக் என்பவர் கடைக்கு ஒரு பார்சல் குண்டு வந்தது (தெற்குவாசல் கா.நி.கு.எண் 736/2012) –சௌராஷ்டிர மாநாட்டுக்கு மோடி வருவதாகக் கேள்விப்பட்டு வைத்ததாகச் சொல்லப்பட்டது). இருவர் கைது. 6. 29.09.2012 – தேனி டாஸ்மாக் கடை அருகில் ஒரு வெடிகுண்டு (தேனி கா.நி.கு.எண் 692/2012) – இமாம்அலி நினைவாக எனச் சொல்லப்பட்டது. 7. 01.11.2012 – திருப்பரங்குன்றம் தர்ஹா அருகில் ஒரு வெடிக்காத குண்டு (திருப்பரங்குன்றம் கா.நி.கு.எண் 362/2012) 8. 20.11.2013 வழக்குரைஞர் அக்பர் அலி காரில் குண்டு வெடிப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 120/2014). 9. 09.02.2014 – தினமணி தியேட்டர் அருகில் அ.தி.மு.க சாதனை விளக்கப் பொதுக்கூட்ட மேடை பின்புறம் குண்டு வெடிப்பு (தெப்பக்குளம் கா.நி.கு.எண் 88/2014). 10. 05.02.2014 – ராஜலிங்கம் வெங்காயக் கடை அருகில் ஒரு குண்டு கண்டெடுப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 120/2014) 11. 14.03.2014 – நெல்பேட்டை ஜமாத் செயலர் காஜா மைதீன் பைக்கில் குண்டு வெடிப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 196/2014). 12. 02.01.2015 – சிவகங்கை டாஸ்மார்க் பாரில் குண்டு வெடிப்பு (சிவகங்கை கா.நி.கு.எண் 02/2016) – பள்ளிவாசலுக்கு அருகில் டாஸ்மாக் இருந்ததால் எனச் சொல்லப்பட்டது. 13. 01.03.2015 – வில்லாபுரம் சம்சுதீன் என்பவரது வீட்டில் கத்தி மற்றும் குண்டு செய்வதற்குத் தேவையான பொருட்கள் சோதனையில் கண்டெடுக்கப் பட்டது (அவனியாபுரம் கா.நி.கு.எண் 262/2015 u/s 25(1)(a) of arms act r/w 201, 153 (A), 187, 120(B), 341 IPC). 14. 21.03.2015 – சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் குண்டு வைக்க மூலப் பொருட்கள் வைத்திருந்ததாக Q பிரிவு போலீஸ் வழக்கு குற்ற எண் 01/2015. 11 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். மூன்று வழக்குரைஞர்கள் உட்பட. இமாம் அலியைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பழிவாங்க உருவாக்கப்பட்ட ‘அல் முத்தஹீம் ஃபோர்ஸ்’ அமைப்பினர் செய்தது எனக் குற்றச்சாட்டு. 15. 29.09.2015 – ஆரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இரண்டு பஸ்களில் குண்டு வெடிப்பு (கரிமேடு கா.நி.கு.எண் 859/2015). ஏழுபேர் குற்றம்சாட்டப்பட்டு ஐவர் பிணையில் உள்ளனர் இருவர் தலைமறைவு. 16. நெல்பேட்டை கல்பாலம் குண்டு வெடிப்பு – (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 769/21016). 17. .நெல்பேட்டை அம்சவல்லி ஓட்டல் அருகில் ஃபரீத்கான் என்பவர் பீடா கடையில் பார்சல் குண்டு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 900/2016). மேலே உள்ள குண்டு வெடிப்பு வழக்குகள் எதிலும் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த ‘வெடிகுண்டுகள்’ யாவும் பட்டாசுவகைக் குண்டுகள் எனவும் low intensity explosion எனவும் தான் காவல்துறையினரால் குறிப்பிடப்படுகிறது. இந்த வழக்குகள் பலவற்றின் குற்றப்புலனாய்வு அதிகாரியான ஏ.டி.எஸ்.பி மாரிராஜன் எங்களிடம் இக்குண்டுகள் பற்றிச் சொன்னது: “இந்த explosives எல்லாம் சும்மா சின்ன பட்டாசு வெடிங்கதான். உங்க பக்கத்தில இதை வச்சு வெடிச்சா பக்கத்துல இருக்கிற பேப்பர், துணி இதுதான் லேசா நெருப்பு பத்தி அணையும். வேற எந்த ஆபத்தும் இருக்காது. இந்தக் குண்டுகள் ஒவ்வொண்ணுக்கும் ஆகிற மொத்தத் தயாரிப்புச் செலவே ஒரு 150 ரூபாய்தான் இருக்கும்” பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் மதுரை காவல்துறை ஆணையரும் இவை சாதாரண பட்டாசுக் குண்டுகள்தான் என ஏற்றுக் கொண்டார். இந்த 17 வழக்குகளில் இதுவரை திருவாதவூர் பஸ் குண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு, அ.தி.மு.க பிரச்சாரக் கூட்ட மேடைக்குப் பின் குண்டு வெடித்த வழக்கு, கவுன்சிலார் ராஜலிங்கம் அலுவலகம் அருகில் குண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு, பிரான் மலை குண்டு தயாரிப்பு மூலப் பொருட்கள் வைக்கப்படிருந்தது என்கிற வழக்கு ஆகிய நான்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2011 முதல் 2014 வரையுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் கல்பாலம் வழக்கு ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி காவல் பிரிவின் சிறப்புப் புலனாய்வுத் துறை (SIT) விசாரித்து வருகிறது. ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கு, சமீபத்திய நெல்பேட்டை பீடா கடை பார்சல் குண்டு வழக்கு ஆகிய இரண்டும் நகர காவல்துறையால் புலன் விசாரிக்கப்படுகிறது. இந்தப் 17 வழக்குகளில் முதல் வழக்கு பதிவாகி ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. நம் தமிழகக் காவல்துறை தன்னை ஸ்காட்லன்ட் யார்டுடன் ஒப்பிட்டுக் கொள்ளத் தயங்குவதில்லை. சுவாதி வழக்கில் ஒரு வார காலத்தில் குற்றவாளியைக் கண்டு பிடித்த பெருமையும் அதற்குண்டு. ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த 17 வழக்குகளில் நான்கில் மட்டுந்தான் அதனால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடிந்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தும் பயங்கரவாதம் தொடர்பான இவ்வழக்குகளில் இத்தனை மெத்தனம் ஏன்? இத்தனை வழக்குகளிலும் சுமார் 22 பேர்கள்தான் இதுவரை குற்றம் சாட்டப்பட்டு, அதிலும் 10 பேர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிலும் 9 பேர் இன்று பிணையில் வெளி வந்துள்ளனர். தமிழகக் காவல்துறையினர் வெடிகுண்டு வழக்குகளிலும் கூட இத்தனை இரக்கத்துடன் செயல்படக்கூடியவர்களாக இருக்கிறார்களே என வியப்பதா? இல்லை இவ்வளவுதான் இவர்களின் திறமை என நகைப்பதா? இல்லை இதற்கெல்லாம் பின் ஏதோ கரணங்கள் உள்ளன என சந்தேகப்படுவதா? இதற்கு விடை காண இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்ட முறைகளையும் அதனூடாக இன்று மேலெழுந்துள்ள சில பிரச்சினைகளையும் ஆராய வேண்டும்..

காவல்துறை மீது காவல்துறையே வைக்கும் குற்றச்சாட்டு
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.