மதுரை குண்டு வெடிப்பு வழக்குகளும் காவல்துறையும் : உண்மை அறியும் குழு அறிக்கை பதிவு 3
வெடித்ததெல்லாம் பட்டாசுக் குண்டுகள்தான் என்ற போதிலும் பெரும்பாலான முதல் தகவல் அறிக்கைகளில் குற்றவாளிகள் யார் எனப் பெயரிடப்படாத போதும், இந்த வழக்கு விசாரணைகளில் மதுரை முஸ்லிம்கள், குறிப்பாக நெல்பேட்டை வாழ் ஏழை எளிய முஸ்லிம் இளைஞர்கள் மிகக் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்ட தனிப்படை ( Special Team) சுமார் 500 முஸ்லிம் இளைஞர்களைக் கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி விசாரித்தது. நெல்பேட்டை வாழ் பெண்களும் கூட பெண் போலீஸ் அதிகாரிகள் முன்னிலை இல்லாமல் விசாரிக்கப்பட்டனர். சுமார் ஓராண்டுக்கு முன் நெல்பேட்டை மக்கள் மத்தியில் இது தொடர்பாக விசாரித்த எங்கள் குழு முன் இப்படிப் பலரும் வந்து தாங்கள் அப்பாவிகள் எனவும், தங்களைத் துன்புறுத்துவதாகவும் பதிவு செய்தனர். இவர்களின் விசாரணை முறை எத்தனை அநீதியானது, இவர்களது விசாரணையில் எப்படி முஸ்லிம் வெறுப்பு அடிநாதமாக உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லலாம். 2011ல் இந்த மயில்வாகனன் – மாடசாமி ‘டீம்’ பரமக்குடி பா.ஜ.க பிரமுகர் முருகன் என்பவர் கொலையைப் புலனாய்வு செய்தது. பரமக்குடி – இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மதார் சிக்கந்தர் என்பவர் திருச்சி சிறையில் காவலராக இருந்தார். இவரையும் இந்தப் பகுதியைச் சேர்ந்த இத்ரிஸ் என்பவரையும் இந்தக் கொலை வழக்கில் தொடர்பு படுத்த மாடசாமி குழு முடிவெடுத்துக் களத்தில் இறங்கியது. இவர்கள் மதாரையும் இத்ரிசையும் கடத்திச் சென்று திருச்சியில் ஒரு விடுதியில் தங்க வைத்துச் சித்திரவதை செய்தனர். இதே நேரத்தில் இந்த ஊரைச் சேர்ந்த சுந்தரவேலு, பாண்டி என்னும் இரு இளைஞர்கள் வேறொரு வழக்கில் பிணை கிடைத்து திருச்சி நீதிமன்றத்தில் கையெழுத்திட ஆணையிடப்பட்டனர். கையெழுத்திடவந்த இந்த இளைஞர்கள் இருவரையும் மாட்சாமி டீம் கடத்திச் சென்று அவர்களை என்கவுன்டர் செய்வதாக மிரட்டியது. இறுதியில் அந்த மிரட்டலுக்கான காரணத்டை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரும் கையெழுத்துப் போடுவதற்காக திருச்சியில் இருந்த போது அவர்கள் ஊர்க்காரரான மதாரின் அறையில் தங்கி இருந்ததாகவும் அப்போது அவர்களுக்குத் தெரிந்த இத்ரிஸ் அங்கு வந்ததாகவும் மதாரும் இத்ரிசும் சேர்ந்து முருகனைக் கொல்லச் சதித் திட்டம் செய்ததைத் தாங்கள் கண்டதாகவும் சாட்சி சொல்ல அவர்களை மாடசாமி டீம் மிரட்டியது. திருச்சியில் உள்ள குரு லாட்ஜில் தங்கவைத்து அவர்கள் இவ்வாறு மிரட்டப்பட்டனர். அடுத்த நாள் நீதிமன்றத்தில் கையெழுத்திட அவர்கள் வந்தபோதும் கூடவே வந்த மாடசாமி டீம் வாசலில் காத்திருந்தது. அப்போது இந்த இளைஞர்கள் இருவரும் ஓடி அங்கு இருந்த வழக்குரைஞர் கென்னடியிடம் நடந்தவற்றைச் சொன்னார்கள். அவர் உடனடியாக மாஜிஸ்ட்ரேட் முன் (Judicial Magistrate Court No 2, Thiruchirappalli)அழைத்துச் சென்று அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். நீதிபதி ராஜாராம் அவர்கள் மாடசாமி மற்றும் அவரது குழுவில் இருந்த 16 காவலர்கள் மீதும் கொலை செய்வதாக மிரட்டியது, பொய்சாட்சிகளை உருவாக்கியது, மனித உரிமைகளை மீறியது ஆகிய அடிப்படைகளில் விசாரணை நடத்த வேண்டும் என CBCID காவல் பிரிவுக்கு ஆணையிட்டார் (ஆக 1, 2011). இந்த ஒரு சான்று போதும் மயில்வாகனன் – மாடசாமி குழு எவ்வளவு முஸ்லிம் வெறுப்புடன் விசாரணைகளை மேற்கொண்டனர் என்பதற்கு. இந்தக் குழு மீது CBCID விசாரணை தொடங்கிய பின்னும் தொடர்ந்து அந்தக் குழு மதுரை வெடிகுண்டு வழக்கு விசாரணைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டது. தனது அதிகாரிகள் விசாரணை என்கிற பெயரில் மேற்கொள்ளும் கொடும் மனித உரிமை மீறல்களைக் காவல்துறை தண்டித்ததாக வரலாறே இல்லை என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி. இந்தப் பின்னணியில்தான் அப்போது மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த வி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் காவல்துறைத் தலைவருக்கு (DGP) எழுதிய இரு கடிதங்கள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன. 23.08.2013 அன்று எழுதப்பட்ட முதல் கடிதத்தில் மயில்வாகனன் – மாடசாமி டீம் தனது நேரடி வழிகாட்டலில் மிகச் சிறப்பாக மதுரை வெடிகுண்டு வழக்குகளைப் புலனாய்வு செய்து வருகிறது எனவும், ஆனால் குற்றவாளிகளைச் சரியாக அடையாளம் கண்டு கைது செய்ய இருந்த நிலையில் அவர் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும் இந்த இடமாற்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரி இருந்தார். 29.03.2013 அன்று டி.ஜி,பி க்கு பாலகிருஷ்ணன் எழுதிய இரண்டாவது கடிதத்தில் மதுரை வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வந்த பல்வேறு புலனாய்வு மற்றும் உளவுப் பிரிவுகளான மதுரை SID, மதுரை SIT, மதுரை நகர SIC ஆகியவற்றுக்கும் முஸ்லிம் அடிப்படைவாதிகளாகவும் காவல்துறையின் தகவலாளிகளாகவும் (informants) செயல்படும் இஸ்மத், வகாப் ஆகியோருக்கும் இடையே நிலவும் ஆபத்து நிறைந்த இரகசிய உறவுகள் குறித்த தன் கவலைகளைப் பகிர்ந்திருந்தார். அப்படியான ஒரு ‘தீவிரவாதியிடம்’ இருந்து 25,000 ரூபாயை உளவுப் பிரிவைச் சேர்ந்த விஜய பெருமாள் எனும் தலைமைக் காவலர் பெற்றுக் கொண்டதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இருந்தார். அதோடு காவல்துறையைச் சேர்ந்த விஜய பெருமாளும் இந்த முஸ்லிம் ‘தீவிரவாதிகளும்’ சேர்ந்து பரமக்குடியில் சிலரை மிரட்டிப் பணம் பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டிய பாலகிருஷ்ணன் விஜய பெருமாளின் நடவடிக்கைகள் மதுரை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வெடிகுண்டுகள் வைப்பதற்கும் பயன்பட்டுள்ளது என்கிறார். இன்றுவரை விஜயபெருமாள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. மாடசாமியின் இடமாற்றமும் ரத்தாக வில்லை. கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முறையீடு செய்தும் தன் இடமாற்றம் ரத்தாகாததைக் கண்ட மாடசாமி நேரடியாக ஊடகங்களிடம் பேசத் தொடங்கினார். ‘தி இந்து’ நாளிதழிலும் (அக் 23, 26, 2013), ஜூனியர் விகடனிலும் (நவ 03, 2013) அவரது கருத்துக்கள் வெளியாயின. அவற்றில் மதுரைக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான மூன்று பேர்களைத் தான் கண்டுபிடித்து விட்டதாகவும் ஆனால் காவல்துறையின் CBCID பிரிவின் Special Investigation Division ஐச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் மாரிராஜன் என்கிற இரு ADSP கள் தடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். காவல்துறைப் பிரிவுகளுக்கிடையே இருந்த இந்த முரண்கள் அம்பலத்துக்கு வந்ததில் ஒன்று தெளிவாகியது. இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் காவல்துறைக்கும் தொடர்புண்டு அல்லது யார் அதைச்செய்திருப்பார் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதுதான் அது. உண்மைகள் வெளிவந்தால் காவல்துறைக்கே பிரச்சினைகள் வரும் என்பதாலேயே ஐந்து ஆண்டுகள் ஆகியும் இந்தப் புலன் விசாரணைகள் இறுதியை எட்டவில்லை. இந்த அறிக்கைகளை எல்லாம் சுட்டிக்காட்டி SDPI கட்சியின் மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலாளர் அப்துல் காதர் ஒரு ரிட் மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தார் (W.P –MD- No. 4711 of 2014). தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் உண்மைகள் வெளிவராது எனவும் மதுரை வெடிகுண்டு விசாரணை முழுமையையும் CBI க்கு மாற்றுமாறும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.
மதுரை காவல்துறை மேற்கொண்டுள்ள சமாளிப்பு நடவடிக்கைகளும் அதன் மூலம் வெளிப்படும் முரண்களும் இந்த வெடிகுண்டு வழக்குகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக CBI விசாரணைக்கு மாற்றப்படும் வாய்ப்புள்ளது என்பதை அறிந்த மதுரை காவல்துறையினர் விரைந்து இந்த வழக்கு விசாரணைகளில் சில் மாற்றங்களைச் செய்தனர். இதன் முதற் கட்டமாக ஒரு புதிய ஆணையை வெளியிட்டனர் (மாநகர் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் செயல்முறை ஆணை C.No.66/ Camp/ DC/ L&O/ M.C. 2015 dated 25.01.2015). இதன்படி மதுரை மாநகர் எல்லைக்குட்பட்ட வெடிகுண்டு வழக்கு விசாரணைகளை விசாரிக்க அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த “மார்ச் 01, 2015 அன்று தனக்குக் கிடைத்த இரகசிய தகவல்” ஒன்றின் அடிப்படையில் அண்ணா நகர் இராமர் கோவில் சைக்கிள் குண்டு வெடிப்பு வழகில் (குற்ற எண் 404/2012) தொடர்புடைய சம்சுதீன் என்பவரைக் கைது செய்துள்ளதாக அறிவித்தார். அந்த சம்சுதீன் மீது அவனியாபுரம் காவல் நிலையத்தில் புதிய வழக்கொன்றைப் (262/2015) பதிவு செய்து, அவரது “ஒப்புதல் வாக்குமூலம்” நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி மதுரையைச் சுற்றி நடந்த குண்டு வெடிப்புகள் பலவற்றை இந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்டுள்ள நபர்கள்தான் செய்தனர் எனக் கூறப்பட்டது. இத்தகைய ஒப்புதல் வாக்குமூலங்கள் பலவும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வாக்குமூலம் அளிப்பவரிடம் படித்துக் கூடக் காட்டாமல் கையொப்பம் பெறப்படுபவை என்பது குறிப்பிடத் தக்கது. மதுரை காவல்துறை இந்த வழக்குகளின் விசாரணையில் ஏற்படுத்தும் இடியாப்பச் சிக்கல் இத்தோடு முடியவில்லை. சிவகுமாரின் இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே இந்த குண்டு வெடிப்புகள் குறித்து மார்ச் 21, 2015 அன்று மதுரை Q பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை இன்னொரு வழக்கைப் பதிவு செய்தது. இந்தப் புதிய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் நாம் தொடக்கத்தில் குறிப்பிட்ட 2011 முதல் 2015 வரையிலான அனைத்து வெடிகுண்டு வழக்குகளையும் கொண்டுவந்தனர். இந்த வழக்குகள் அனைத்திலும் 1908 ம் ஆண்டு Explosive Substances Act பிரிவுகள் 3,4,5 மற்றும் 120 (B) and 34 of IPC ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றங்கள் சுமத்தப்பட்டன. இதில் 11 பேர்கள் பெயர் குறிப்பிட்டும் மற்றும் சிலர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்திற்கும் ஏற்கனவே அந்தந்தக் காவல் நிலையங்களில் தனித்தனியே வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் பழைய முதல் தகவல் அறிக்கைகளுக்கும் இன்றைய அறிக்கைக்கும் இடையில் பல முரண்கள் உள்ளன. இந்த முரண்கள் அவை அனைத்தும் அப்பட்டமாக ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குகள் என்பதைக் காட்டுகின்றன். எமது வழக்குரைஞர் குழு சுட்டிக்காட்டியுள்ள அப்படியான முரண்களில் சில இங்கே: 1. 2011 மாட்டுத்தாவணி டாஸ்மாக் குண்டு வெடிப்பு வழக்கு: ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான விசாரணையில் குண்டு வைத்தது உமர் ஃபாரூக் எனப் பதிவாகியுள்ளது. இன்றைய Q பிரிவு முன்வைக்கும் வாக்குமூலத்தின்படி அதைச் செய்தது ஹாரூன் எனச் சொல்லப் படுகிறது. 2. 2011 கே. புதூர் அரசு டிப்போ பேருந்து குண்டு வழக்கு: பழைய வாக்குமூலப்படி குண்டு வைத்தது இஸ்மத்; Q பிரிவு விசாரணையின்படி இது ஹாரூன். 3. 2012 இராமர் கோவில் சைக்கிள் குண்டு
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.