மதுரை குண்டு வெடிப்பு வழக்குகளும் காவல்துறையும் : உண்மை அறியும் குழு அறிக்கை பதிவு 5

முகமது முபாரக் எனப்படும் உமர் ஃபாரூக் (35), புது ராமநாதபுரம் : “தற்போது 13 வழக்குகள்ல என்னைச் சேர்த்துள்ளதாக நேற்று கூட ஆய்வாளர் சீனிவாசன் சொன்னார். இப்டி பொய் வழக்கு போடுறீங்களே, நீங்க நல்லா இருப்பீங்களா, என் பெண்டாட்டி பிள்ளைங்க மாதிரி உங்க பெண்டாட்டி புள்ளைங்க கஷ்டப்பட மாட்டாங்களான்னு கேட்டேன். ‘என்ன சபிச்சிராதப்பா. நான் என்ன பண்றது. எனக்கு எல்லாம் தெரியும். என்ன செய்யிறது Q பிராஞ்ச் ஏற்கனவே உன்னை இந்த வழக்குகள்ல சேர்த்துருக்கதால ஒண்ணுமே பண்ண முடியல. நீ 13 வழக்குலயும் AB (முன் ஜாமீன்) வாங்கிடு’ என்றார். நான் இமாம் அலிக்கு அடைக்கலம் கொடுத்தது அப்படி இப்படின்னு 2004 முதல் 2007 வரை மூணரை வருஷம் ஜெயில்ல இருந்தேன். ஹை கோர்ட்ல எல்லா வழக்கிலயும் விடுதலை ஆனேன். இப்ப மீன் வியாபாரமும் ரியல் எஸ்டேட்டும் பண்றேன். விஜய பெருமாள் என்கிற ஏட்டு என்னிடம் வந்து ஒரு ரியல் எஸ்டேட் டீல்ல அவருக்கு வேண்டிய ஒரு மூணாவது நபருக்குச் சலுகை பண்ணச் சொன்னார். என்னால முடியல. இப்ப என்னைப் பழி வாங்குறாங்க. இமாம் அலி வழக்குபோது நான் தலைமறைவா இருந்தப்போ போலீஸ் தொல்லை தாங்காம எங்க அப்பா மீரான் கனி மனித உரிமை செல்பாட்டாளரான ஹென்றி டிபேனிடம் உதவி கேட்டதுக்காக வங்கிக் கொள்ளை வழக்கு ஒண்ணுல அவரையும் என் அக்கா மாப்பிளையையும் பொய் வழக்கு போட்டு உள்ள தள்ளினாங்க. அதிலேயும் அவங்களை நீதிமன்றம் விடுதலை பண்ணிச்சு” பாண்டு அலி என்கிற முகமது அலி (39), த.பெ முகமது சுல்தான் நெல்பேட்டை: “என்னையும் 13 வழக்குகள்ல சேர்த்திருக்காங்க. அந்த வழக்குகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இந்த வழக்குகள் எதுலயும் நான் இதுவரை கைது செய்யப்படல. உமர் ஃபாரூக் என்னோட மைத்துனர். இமாம் அலி தொடர்பான வழக்குல 10 வருஷம் ஜெயில்ல இருந்துருக்கேன். அதுக்குப் பிறகு நான் எந்த தீவிர நடவடிக்கையிலயும் இல்ல. ADSP மாரிராஜன் என்கிட்ட நல்லா பேசுவாரு. தேனி வெடிகுண்டு வெடிப்புக்கு முதல் நாள் நெல்பேட்டை பக்கம் வந்தாரு. நான் தேசிய லீக் கட்சியில இருந்து செயல்படுறேன். அவங்க 2012, செப் 29 அன்னிக்கு கம்பத்தில இமாம் அலி நினைவுநாள்னு அறிவிச்சிருந்தாங்க. அதுக்குப் போகலியான்னு மாரிராஜன் என்னைக் கேட்டாரு. ‘அவசியம் போப்பா. கட்சியில் பொறுப்புல இருக்கிறவங்க நிகழ்ச்சிகள புறக்கணிக்கக் கூடாதுல்ல’ என்றார். அதுல ஏதோ சூது இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. அதே மாதிரி அன்னிக்கு தேனியில குண்டு வெடிச்சுது…”

வழக்குரைஞர் சவுக்கத் அலி (36), த.பெ அப்துல் அஜீஸ், நெல்பேட்டை: “நான் ஹைகோர்ட்ல வழக்குரைஞரா இருக்கேன். என்னையும் 13 வழக்கில சேர்த்திருக்காங்க. ஒரு வழக்கில named accused. மற்ற வழக்குகள்ல confession ல கொண்டு வந்திருக்காங்க. நான் இதுக்கு முன்னாடி எந்த வழக்குலையும் சம்பந்தப்பட்டதோ விசாரிக்கப்பட்டதோ இல்லை. உமர் ஃபாரூக்கிற்கு நான் வழக்குரைஞர். அவரோட ரியல் எஸ்டேட் பார்ட்னர். அதனால என்னைப் பழி வாங்குறாங்க” ஜரீனா பேகம் க/பெ பீர் முகம்மது, நெல்பேட்டை (ராமர் கோவில் குண்டு வழக்கில் இரண்டு வாரங்களுக்கு முன் கைதாகிச் சிறையில் உள்ள அபூபக்கர் சித்திக்கின் அம்மா): “என் மகன் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான். அரசியலுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்ல. அவன் ஒரு செல்போன் கடை வச்சிருக்கான். அதுல ஏதாவது திருட்டுபோன் பிரச்சினையில ரெண்டொரு தடவை கூப்பிட்டு விசாரிச்சுருக்காங்க. மத்தபடி இந்த குண்டு வழக்குகள் எதுலையும் அவனை விசாரிச்சது இல்ல. பெருநாள் முடிஞ்சு டூர் போய்ட்டு வந்தான். இப்டி அவனைப் புடிச்சுட்டுப் போயி ராமர் கோவில் வழக்குல சேர்த்துட்டாங்க…” ஜரீனா பேகம் அழுதுகொண்டே இதைச் சொன்னபோது அங்கிருந்தவர்கள் அதோடு இன்னொரு சம்பவத்தைச் சொன்னார்கள். ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் ஒரு குழு வந்து சித்திக்கைக் கைது செய்தபோது அவரது கடையில் வேலை செய்யும் சையது முகமது அதை வீடியோ எடுத்துள்ளார். உடனே அவர் செல்போனை சீனிவாசன் டீம் பிடுங்கிச் சென்றுள்ளது. அதைத் திரும்பப் பெறக் காவல் நிலையம் சென்றபோது சையது முகமதுவை ஒரு நாள் முழுக்க ஸ்டேஷனிலேயே காக்க வைத்து விசாரித்துள்ளனர். விசாரணை முடிந்து வந்த சையது மிகவும் மனம் சோர்ந்து காணப்பட்டுப் பின் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையின் மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். சையதுவின் உடல் அடக்கம் செய்யப்படும்போது தேவை இல்லாமல் ஆய்வாளர் சீனிவாசன் அந்த இடத்தில் ரொம்ப நேரம் சுற்றிச் சுற்றி வந்தார் எனவும் கூறுகின்றனர்.

வழக்குரைஞர் முகமது அலி ஜின்னா த.பெ கே.ஏ. உமர் பாய், நெல்பேட்டை: “என்னையும் 13 வழக்குகளில் சேர்த்துள்ளனர். எனது 17 வயதில் போலீசை அடித்ததாக என் மீது ஒரு வழக்கு. அதன் பின் 2005 வரை ஏழு வழக்குகள் போட்டார்கள். அதில் ஆறு வழக்குகளில் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். மற்ற ஒரு வழக்கும் ரத்தாகி விட்டது. தமிழ்வீரன் எனும் ஒரு இந்துமுன்னணித் தலைவரைக் கொலை செய்ய முயன்றேன் என ஒரு வழக்குத் தொடர்ந்து குண்டர் சட்டமும் போட்டார்கள். அந்தத் தமிழ்வீரனே அது பொய் வழக்கு என நீதிமன்றத்தில் வாதாடி எனக்கு விடுதலை வாங்கித் தந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி 25 ந்தேதி ஒரு 30 போலீஸ்காரகள் வந்து என் வீட்டில் ‘சர்ச் வாரன்ட்’ காட்டித் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். என்னை மரியாதைக் குறைவாகப் பேசவும் செய்தார்கள். கடைசியில் ஒன்றும் கிடைக்கவில்லை என எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்கள். இமாம் அலியைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பழி வாங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் ‘அல் முத்தகீம் ஃபோர்ஸ்’ என்கிற தீவிர அமைப்பிற்கு நான் தலைவன் என அபாண்டமாகப் பழி சுமத்துகிரார்கள். அது அப்பட்டமான பொய். நான் கவுரவமாக வக்கீல் தொழில் நடத்துகிறேன். நான் எந்த வழக்கில் வக்கீலாக ஆஜர் ஆனேனோ அதே வழக்கிலும் என்னைக் குற்றவாளியாகச் சேர்த்தார்கள். குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு ஒரு வழக்குரைஞர் என்கிற முறையில் பழகுவதே தவறா? நான் மன நிம்மதி இன்றித் தவிக்கிறேன்,….”
அம்சவல்லி ஓட்டல் அருகில் பீடா கடை வைத்துள்ள ஃபரீத்கான் அவரது சகோதரர் மன்சூர்கான் இருவரையும் நாங்கள் சந்தித்தபோது அவர்கள், தங்கள் கடையில் சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இரவு 11 மணி வாக்கில் வந்து 10 இனிப்பு பீடா ஆர்டர் செய்துவிட்டு, “தயாரித்து வையுங்கள். வருகிறேன்” எனச் சொல்லி ஒரு பையையும் கொடுத்து விட்டுச் சென்றதாகவும் பின் வரவே இல்லை என்பதால் அடுத்த நாள் அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது அது வெடிகுண்டு போலத் தெரிந்ததால் காவல்துறைக்குச் சொன்னதாகவும், அவர்கள் வந்து சோதனையிட்டு அதை எடுத்துச் சென்றதாகவும் கூறினர்.
ஆட்டோ யாசின் த.பெ காதர் மைதீன், நெல்பேட்டை மீன்மார்கெட் அருகில்: ”எந்த வழக்குன்னு தெரியல. ஆனா வழக்கில சேர்த்துருக்காங்களாம். வக்கீல் சொன்னாரு. இதுக்கு முன்னாடி எந்த வழக்கும் என்மீது கிடையாது. 2013ல் மயில்வாகனன், மாடசாமி டீம் நிறைய நெல்பேட்டைப் பையன்கள அழைச்சிட்டுப் போயி அடிச்சு சித்திரவதை பண்ணினாங்க. என்னையும் எந்தத் தப்பும் பண்ணாமலேயே ADSP ஆபீசில் வச்சு அடிச்சாங்க. நான் வெளியே வந்து அமானுல்லா என்கிற வழக்குரைஞர் மூலமா இன்ஸ்பெக்டர் மாடசாமி மேல ஒரு பிரைவேட் கம்ப்ளெயின்ட் கொடுத்தேன். அந்த கோவத்துல இப்ப என் மேல பொய் வழக்கு போடுறாங்க. எனக்கு இந்த ஆட்டோ தொழில் தவிர வேற வருமானம் இல்ல..”
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.