மதுரை குண்டு வெடிப்பு வழக்குகளும் காவல்துறையும் : உண்மை அறியும் குழு அறிக்கை பதிவு 6

பிரியாணி மைதீன் த.பெ பக்ருதீன், நெல்பேட்டை: “கல்யாண ஆர்டர்க்கு பிரியாணி செஞ்சு கொடுப்பது என் தொழில். 2002ல் இமாம் அலி வழக்கில என்னை சேர்த்திருந்தாங்க. அதுல எனக்கு 2 வருஷம் தண்டனை. அதுக்கு அப்புறம் எட்டு வழக்கு போட்டாங்க. ஒரு கொலை கேஸ் உட்பட. எல்லாத்துலையும் நான் விடுதலை ஆயிட்டேன். இப்ப பிரியாணி தொழில்தான் செய்றேன். அன்னிக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வந்து என்னை வழக்கில் சேர்த்துள்ளதா சொன்னாரு. எந்த வழக்குன்னு தெரியல.
அப்பாஸ் மைதீன் (43) த.பெ ஷேக் தாவூது, மேலூர்: “நான் ரொம்ப சாதாரண குடும்பம். எனக்கு இரண்டு மனைவி. முதல் மனைவிக்குக் குழந்தை இல்ல. இரண்டாவது மனைவிக்கு நாலு பிள்ளைகள். ஒரு கூரியர் ஏஜன்சி எடுத்திருந்தேன். எனக்கு எந்த அரசியல் தொடர்பும் கிடையாது. மார்ச் 21, 2015 அன்னிக்கு யாரோ வந்து நூறு தேங்கா கூரியர் அனுப்பனும்னு கூப்பிட்டாங்க. கீழே இறங்கிப் போனா ஒரு வேன்ல ஏற்றிக் கொண்டு போய்ட்டாங்க. இரவு வரை என்னை என்னென்னவோ கேட்டாங்க. யார் யாரோ வந்து ஏதேதோ விசாரிச்சாங்க. ஒண்ணும் எனக்குப் புரியல. பயந்து போனேன். சாயந்திரம் என்னை பிரான் மலைக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அங்கே நிறைய பத்திரிகையாளருங்க இருந்தாங்க. மேலே கொண்டுபோனாங்க. ஏராளமாக அங்கே போலீஸ் அதிகாரிங்க இருந்தாங்க. அங்கே தூரத்தில ஒரு வாளியில என்னமோ இருந்துச்சு.. அதைக் கையை நீட்டி காமிக்கச் சொன்னாங்க. “ஏன்” ன்னேன். “என்னடா எதிர்த்தா பேசுறேன்னு அடிச்சாங்க. நான் கையை நீட்டினேன் போட்டோ பிடிச்சுட்டாங்க. அந்த வாளியில என்ன இருந்துச்சுன்னு கூட எனக்கு முழுசா தெரியாது. அப்ப அங்கே எங்க ஊரு முபாரக்கையும் கொண்டு வந்து அடிச்சு அதே மாதிரி கையை நீட்டச் சொல்லி போட்டோ எடுத்தாங்க. சார், அவன் என்னைவிட ரொம்ப அப்பாவி, என் சொந்தக்காரந்தான். ஆனாலும் அவன் கிட்ட நான் அதிகமாப் பேசுனது கூடக் கிடையாது. எங்க இரண்டு பேருக்கும் எந்த இயக்கத் தொடர்பும் கிடையாது. நானாவது தாடி வச்சிருக்கேன். தொழுகைக்குப் போவேன். இஸ்லாமிய ஒழுக்கங்களைக் கடை பிடிப்பேன். அவன் அதையும் செய்யுறது கிடையாது. அப்புறம் எங்களை தனித்தனியா கொண்டு போயி அடுத்த நாள் Q பிராஞ் போலீஸ் எதையோ கொண்டு வந்து என் கிட்ட கையெழுத்து வாங்கினாங்க. படிச்சு கூட காட்டல. பத்து நாளைக்கப்புறம் கஸ்டடியில் எடுத்து மாரிராஜன் டீம் மறுபடியும் ஒரு வாக்கு மூலத்தை அவங்களாவே எழுதி கையெழுத்து வாங்கினாங்க. சார். இது ரொம்ப அநியாயம். என் பழைய தொழில் போச்சு. இப்ப ஒரு செருப்புக் கடையில் வேலை செய்றேன். எனக்கு இது தாங்க முடியாத அனுபவம். என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாங்கன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல. படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது சார்…”

அடுத்து அப்பாஸ் மைதீனுடன் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள முபாரக்கிடம் (வயது 24, த.பெ ஷேக் என்கிற மீரான் மைதீன்,
மேலூர்) பேசினோம். சின்னப் பையன் என்பதும் மிகவும் பயந்துபோயுள்ளான் என்பதும் குரலிலேயே தெரிந்தது. அப்பாஸ் சொன்ன அதே கதையை அவனும் திருப்பிச் சொன்னான். இந்தச் சின்ன வயதில் அந்தக் கோடூரமான அனுபவத்தை அவன் சந்தித்தபோது குணாளன் என்பவரது செருப்புக் கடையில் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறான். ஆறு மாதம் கழித்து பிணையில் அவன் வெளியே வந்தபோது யாரும் அவனுக்கு வேலை கொடுக்கத் தயாராக இல்லை. கடந்த ஆறு மாதமாக ஏதோ ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்கிறான். தினம் 170 ரூ ஊதியமாம். அதை வைத்துத்தான் குடும்பம் நடக்கிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. இதை எழுதும்போது ஏதோ ஒரு தகவலை உறுதி செய்ய போனில் தொடர்பு கொண்டோம். அவன் அம்மா பேசினார்கள். வேலைக்குப் போவிட்டானாம். “ஐயா, நாங்க எல்லாம் ஏழைங்க அய்யா, எங்களுக்கு யாரும் ஆதரவு இல்லைங்க அய்யா. இது ரொம்ப அநியாயம் அய்யா. அவன் ரொம்பச் சின்னப் பையன் அய்யா.. அவனுக்கு யாரும் இப்ப வேலை கூடக் குடுக்க மாட்டெங்குறாங்க அய்யா..” என அந்த அம்மா புலம்பி அழுதார்.
அதிகாரிகள் சந்திப்பு
சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ADSP மாரி ராஜனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். மிக்க பொறுமையாகவும் விரிவாகவும் அவர் எங்களுடன் பேசினார். இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் மிகச் சாதாரணமான பட்டாசுக் குண்டுகள் என அவர் சொல்லியதை வேறோர் இடத்தில் பதிவு செய்துள்ளோம். இந்த வெடிகுண்டு வழக்கு விசாரணையைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “நான் இப்ப அதிலேருந்து விலகிட்டேன். இந்த வழக்குகளை நாங்க விசாரிக்கக் கூடாதுன்னு ரிட் மனு ஒன்னு போட்ருக்காங்க அதனால நான் அந்த விசாரணையில இப்ப ஈடுபடுவதில்லை” என்றார். கைது செய்யப்படுகிறவர்கள் பலரும் அப்பாவிகள் எனக் கேள்விப்படுகிறோமே என நாங்கள் கேட்டபோது அவர் அதை மறுக்கவில்லை. “அப்பாவிகளும் இருக்கலாம். முஸ்லிம்களுக்குள் பல உட் பிரிவுகள் இருக்கு. இவங்களுக்குள்ளேயே போட்டி பகைமைகள் இருக்கு. ஒருவர் மேல ஒருவர் புகார் கொடுத்துக்கிறாங்க. அதனாலதான் இப்படிக் கைதுகள் நடக்குது. அப்புறம் இந்த முஸ்லீம்கள்கிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் இவங்க எல்லாம் போலீசுடன் நெருக்கமா இருக்கிறதை ஒரு பெருமையா நினைக்கிறாங்க. அதனாலயும் சில பிரச்சினைகள் ஏற்படுது….”
“ஆய்வாளர் மாடசாமி என்பவர் உங்கள் மீதெல்லாம் கொடுத்துள்ள புகார் விசாரிக்கப்பட்டதா, ஏட்டு விஜயபெருமாள் ஒரு தீவிரவாதியிடமிருந்து பணம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு உள்ளதே அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?” எனக் கேட்டோம். “மாடசாமியிடம் விளக்கம் கேட்டு இருக்காங்க. அது குறித்து மேலதிகாரிங்களைத்தான் கேட்கணும் .விஜயபெருமாளிடம் விளக்கம் கேட்டதுக்கு அவர் தனக்கு அந்த நபர் கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார்னு பதில் சொல்லி இருக்கார்” என்றார்.

நாங்கள் புறப்படும்போது, “ஆண்டவன் செயலால் உண்மைக் குற்றவாளிகள் கன்டுபிடிக்கப்பட்டால் அப்பாவிகளை விடுதலை செய்வதில் தடையில்லை. என் மீதுள்ள ரிட் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டால் நானே இந்த வழக்குகளை விசாரித்து நல்லபடியாய் முடித்து வைப்பேன்” என்றார்.

அடுத்து நாங்கள் உளவுத் துறை உதவி ஆணையர் முத்துராமலிங்கம் அவர்களைச் சந்தித்தோம். “ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கு, பீடா கடை பார்சல் குண்டு வழக்கு இந்த இரண்டையும்தான் நகர காவல்துறை (city police) விசாரிக்குது. மற்றதெல்லாம் Q பிராஞ், CBCID இவங்க கிட்ட கொடுத்தாச்சு. இந்த இரண்டையும் கூட அவங்க கிட்ட மாத்தலாம்னு இருக்கோம். மற்ற வழக்குகளைப் பற்றித் தெரியணும்னா அந்த வழக்குகளை இப்போ விசாரிக்கிற ஆய்வாளர் சீனிவாசனைத்தான் நீங்க கேட்கணும்” எனச் சொல்லி அவரது தொடர்பு எண்ணையும் எங்களுக்குத் தந்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.