மதுரை குண்டு வெடிப்பு வழக்குகளும் காவல்துறையும் : உண்மை அறியும் குழு அறிக்கை
தீவிரவாதிகளின் ‘ஹிட்லிஸ்டில்’ மதுரை முக்கிய இடத்தில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துக் கொண்டே இருக்கிறது” என்பது அக்டோபர் 22, 2013 அன்றைய தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளி வந்துள்ள செய்தி. இப்படித் தமிழகத்திலேயே மதுரை முஸ்லிம் தீவிரவாதத்தின் மையமாக உள்ளது என்றொரு கருத்தைப் பொதுப் புத்தியில் பதிப்பதில் தமிழக் காவல்துறை வெற்றி பெற்றுள்ளது. 2011 லிருந்து இன்று (2016) வரை மதுரை மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரங்களில் மட்டும் காவல்துறையினர் 17 வெடிகுண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அனைத்தும் டாஸ்மாக் கடைகள் பேருந்துகள், பொதுக்கூட்ட மேடைகள் முதலான மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு வெடித்த மட்டும் வெடிக்காத குண்டுகள். இவற்றில் இரண்டு பார்சல் குண்டுகள்.

இப்படியான வெடிகுண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளால் அப்பாவிப் பொதுமக்கள் பெரிய அளவில் கொல்லப்படுவது என்பது உலகையே அச்சத்தில் உறைய வைத்துள்ள நேரத்தில் இப்படி மதுரை மாவட்டப் போலீஸ் 17 வெடிகுண்டு வழக்குகளைப் புலன் விசாரித்து வருவது என்பது இங்கு பொது மக்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் இந்த தீவிரவாதத் தாக்குதல் முயற்சிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் செய்யப்படுவதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் பெரிய அளவில் அந்தச் சமூகத்தையே “சந்தேகத்திற்குரிய சமூகமாகவும்”, “பயங்கரவாதச் சமூகமாகவும்” பார்க்கக் கூடிய நிலைக்கும் இட்டுச் செல்கிறது.

எப்படி இருந்த போதிலும் இப்படியான பயங்கரவாதத் தாக்குதல்கள் கவனமாகப் புலன் விசாரித்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் பிரச்சினை என்னவெனில் ஆண்டுகள் ஐந்தாகியும் பெரிய அளவில் யாரும் இதில் கைது செய்ய்ப்படவில்லை. கைது செய்யப்பட்ட சுமார் பத்து பேர்களில் ஒன்பது பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றவரும் இரண்டொரு நாளில் பிணையில் வெளிவருவார் எனச் சொல்லப்படுகிறது. தவிரவும் பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகளாக இவை காவல்துறையாலும் ஊடகங்களாலும் பிரமாதப் படுத்தப்பட்டாலும் இந்தப் 17 பயங்கரவாததாக்குதல் முயற்சிகளிலும் யாரும் ஒரு சிறிய அளவில் கூட பாதிக்கப்படவில்லை; சொத்திழப்புகளும் இல்லை.

இந்த வழக்கு விசாரணைகளில் குறைந்த பட்சம் மூன்று புலன் விசாரணை அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டபோதும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் ஏன் இந்த மெத்தனம்? குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் தறுவாயில் இதை முறியடிக்கும் நோக்கில் ஆய்வாளர் மாடசாமி எனும் புலன் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என ஒரு குற்றச்சாட்டை மதுரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் வைத்துள்ள ஒரு செய்தியும் பத்திரிகைகளில் பெரிதாய் வந்தது. வேறொரு புலன் விசாரணைக் குழுவில் உள்ள ஒருதலைமைக் காவலர் தீவிரவாதி ஒருவருடன் தொடர்பில் உள்ளார் எனவும் அவரிடமிருந்து பணம் பெற்றுள்ளார் எனவும் ஆதாரத்துடன் அதே கண்காணிப்பாளர் முன்வைத்துள்ள இன்னொரு புகார் பற்றிய செய்தியும் பத்திரிகைகளில் வந்தது. இது குறித்தெல்லாம் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரியவில்லை. ஆனால் வெடிகுண்டுகள் “வைக்கப்படுவதும்”, முஸ்லிம்கள் வழக்குகளில் சிக்க வைக்கப்படுவதும் தொடர்கின்றன. இது தொடர்பான வழக்கு விவரங்களை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது எங்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. பல்வேறு புலன் விசாரணை முகமைகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஒரே குற்றம் குறித்து இரண்டு முகமைகளும் வெவ்வேறு நபட்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கின்றன. இதெல்லாம் காவல்துறையினருக்கு இடையே யார் விரைவாகப் பதவி உயர்வு பெறுவது, பணப் பரிசுகளைப் பெறுவது என நடக்கும் போட்டி என நாம் வாளாவிருந்துவிட முடியாது. ஏனெனில் இந்தப் போட்டிகளுக்கிடையில் பல அப்பாவிகள் பாதிக்கப் படுகின்றனர். ஒரு சமூகத்தையே பயங்கரவாதிகளாக மற்றவர்கள் பார்க்கும் நிலை ஏற்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.