தமிழகத்தில் தொடரும் காவல் கஸ்டடி மரணங்கள்! அனைத்து காவல்நிலையம் மற்றும் சிறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் செய்யது முஹம்மது என்ற அப்பாவி இளைஞரை, விசாரணைக்கு அழைத்து சென்று, காவல் நிலையத்தில் வைத்து அநியாயமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தார் காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ். ஆனால் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வலுவான எதிர்ப்பு தெரிவிக்காததன் விளைவாக அவர் விடுவிக்கப்பட்டார். போலீசார் மீதான இதுபோன்ற கரிசணைகள் மேலும் இதுபோன்ற குற்றங்கள் பெருக வழிவகுக்கும் என்பதற்கு உதாரணம் தான், நேற்று முன் தினம் இராமநாதபுரம் பெரிய மாயாகுளம் இளைஞர் சேக் அலாவுதீன் மரணமும், திருவள்ளூர் பொன்னேரி விசாரணைக் கைதியான செல்வத்தின் மரணமும்.
நேற்று முன்தினம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரிய மாயாகுளம் என்ற ஊரைச் சேர்ந்த ஹாஜா நஜ்முதீன் என்பவரின் மகன் சேவுலா (எ) சேக் அலாவுதீன் என்பவர் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். இறந்து போன சேக் அலாவுதீன் என்பவர் குற்றப்பிண்ணனி கொண்ட நபர் எனவும், அவர் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பித்தபோது மரணமடைந்தார் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டாலும், அவர் காவல்நிலையத்தில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக அடித்ததன் விளைவாகவே இறந்து போயுள்ளார் என்கிற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.
அதேப்போன்று, திருவள்ளுர் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான செல்வம் என்பவரை வழக்கு ஒன்றிற்காக அழைத்துச் சென்ற சோழவரம் போலீசார் அவரை நீதிமன்ற காவலுக்காக பொன்னேரி கிளை சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், பொன்னேரி கிளைச் சிறையில் செல்வம் திடிரென உயிரிழந்துள்ளார். செல்வத்திற்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் தொழிலாளி செல்வத்தின் மீது பொய்வழக்கு போட்டு அவரை அழைத்து சென்ற சோழவரம் காவல்துறையினர் அவரை அடித்துக் கொன்றதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் செல்லும் நபர்கள் இவ்வாறு மரணமடையும் போது போலீசார் இதுபோன்ற காரணங்களை தெரிவிப்பது என்பது, தங்களை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் முதல் தற்காப்பு நடவடிக்கைகள் என்பது பல வழக்குகள் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் இது போன்ற காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து நடப்பது காவல்துறையின் பலவீனத்தை காட்டுகிறது. காவல்துறையானது தமது கடமையிலிருந்து தடம் மாறி செல்கிறது என்பதை உணர்த்துகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையானது தமது கடமையை கைவிட்டு விட்டு நீதித்துறை செய்ய வேண்டிய தண்டிக்கும் வேலையை தன் கையில் எடுத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையின் இது போன்ற செயல்கள் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
ஆகவே, காவல்துறையின் அத்துமீறலால் இறந்துபோன சேக் அலாவுதீன் மற்றும் செல்வத்தின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூபாய் 10 இலட்சம் வழங்க வேண்டும். முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் காவல் நிலைய குற்றங்களை கண்டறியவும், சட்டத்தை மீறுகின்ற காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து காவல்நிலையங்களிலும், சிறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அனைத்து காவல்நிலையம் மற்றும் சிறைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.