காந்தி கொலைக்குப் பின்னாள் ஆர்.எஸ்.எஸ்.?ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காந்தியைக் கொலை செய்தது என்று சமீபத்தில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததற்கு உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டது. ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும், மறுத்தால் அவதூறு வழக்கு தொடரும் என்றும் எச்சரித்தது. ராகுல் மன்னிப்பு கேட்க மறுத்ததோடு, காந்தியை ஆர்.எஸ்.எஸ்.தான் கொலை செய்தது என்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருக்கிறது, எனவே வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் கோல்வால்கர், கொலை விடுவதாக காந்திக்கு மிரட்டல் விடுத்திருந்தது தொடர்பாக 1947ஆம் ஆண்டில் டெல்லி சி.ஐ.டி. அறிக்கை ஒன்றைத் தயாரித்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ், காந்தியைக் கொலை செய்யப் போவதாக 1947ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள் கூறியதாக டெல்லி காவல்துறையைச் சேர்ந்த சி.ஐ.டி. அறிக்கை கூறுகிறது. அதுவோல், மத்தியப் பிரதேசம் மதுராவில் 50 ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் 1947, டிசம்பர் 1 அன்று சந்தித்து, காங்கிரஸ் தலைவர்களைக் கொலை செய்வது தொடர்பாக கலந்து பேசியதாக லக்னோவைச் சேர்ந்த சி.ஐ.டி.யின் கடிதம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த அறிக்கைகள் டெல்லி காவல்துறை ஆவணக் காப்பகத்தில் (Delhi Police Archives) பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இவை ரகசியமாக திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும் அறிக்கைகள். காந்தி கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். ரகசிய கூட்டங்கள் தொடர்பாக காவல்துறை அறிக்கைகளில் இருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான தகவல்களும் இங்கு இருக்கின்றன.
சி.ஐ.டி. திரட்டிய தகவல்கள் சேவக் (Sewak) என்று மட்டுமே அறியப்படுகிறது. சேவக் என்பது பொதுவாக ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங் என்பதையே குறிக்கும். இதன் அறிக்கையை டெல்லி சி.ஐ.டி.யின் ஆய்வாளர் கர்தார் சிங் பதிவு செய்திருக்கிறார். ‘ராஷ்ட்ரீய சுவயம் சேவக் சங்’ என்ற தலைப்பில் ஆய்வாளர் கர்தார் சிங் அந்த அறிக்கையைத் தயாரித்திருக்கிறார். அதில்,
"8.12.1947 அன்று, சங் அமைப்பின் தொண்டர்கள் ரோடக் சாலையில் இருக்கும் அவர்களது முகாமில் திரண்டனர். சில பயிற்சிகளில் ஈடுபட்ட பிறகு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர், தொண்டர்கள் மத்தியில் பேசினார். சங் அமைப்பின் நோக்கங்கள் பற்றி அவர்களிடத்தில் கோல்வால்கர் விளக்கிச் சொன்னார். மேலும் அவர்களிடத்தில், எதிர்வரும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு அனைவரும் முழு வீச்சில் தயாராக இருக்க வேண்டும் என்றார். விரைவாகவே முழு அளவிலான திட்டம் அவர்கள் முன்பு வைக்கப்பட்டது. விளையாடுவதற்கான நேரம் கடந்து விட்டிருந்தது.
அரசாங்கத்தைப் பற்றி கோல்வால்கர் குறிப்பிட்டுச் சொல்லும் போது, "இந்தப் படையை சட்டம் எதிர்கொள்ள முடியாது. (மராட்டிய) சிவாஜி கையாண்ட தந்திரங்களை நாமும் கையாள வேண்டும். கொரில்லா முறையிலான தாக்குதலுக்கு நாம் தயாராக வேண்டும். பாகிஸ்தானை ஒழித்துக் கட்டும் வரையில் சங் அமைப்பு ஓயாது. நமது வழியில் யாராவது குறுக்கிட்டால் அது நேரு அரசாகவோ அல்லது வேறு அரசாகவோ இருந்தாலும் அவர்களையும் நாம் ஒழித்துக்கட்ட வேண்டும். சங் அமைப்பை யாராலும் வெல்ல முடியாது. அவர்கள் தங்கள் வேலையைத் தொடர்ச்சியாக செய்து கொண்டிருப்பார்கள்" என்றார்.
முஸ்லிம்கள் பற்றிக் கூறும்போது, "அவர்களை இந்துஸ்தானத்தில் இருக்கச்செய்யும் எந்த சக்தியும் பூமியில் இருக்கக்கூடாது. அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும். முஸ்லிம்களை இந்தியாவில் இருத்திவைக்க காந்தி விரும்புகிறார். தேர்தல் நேரத்தில் அவர்களது வாக்குகளால் காங்கிரஸ் லாபம் அடையலாம். அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமைக் கூட இந்தியாவில் இருக்க அனுமதிக்கக் கூடாது. முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்க நேர்ந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பாகும். இந்து சமூகம் பொறுப்பாகாது.
காந்தியை நீண்ட நாட்களுக்கு தவறாக வழிநடத்திக் கொண்டிருக்க முடியாது. அவ்வாறு நடத்தக்கூடியவர்களை உடனடியாக எங்களால் கொன்றுவிட முடியும். ஆனால் இந்துக்களுக்கு தீங்கிழைப்பது எங்களின் பாரம்பரியத்தில் இல்லை. எங்களை நெருக்கடிக்கு ஆளாக்கினால் அதையும் நாங்கள் செய்ய வேண்டியதிருக்கும்"
என்று அந்த அறிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது. அதன் மூலத்தின் பிரதியைக் காண்க
லக்னோ சி.ஐ.டி. தலைவரின் கடிதங்கள்
லக்னோவின் சி.ஐ.டி.யின் சிறப்புப் பிரிவின் காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.பி.விக்கின்ஸ் (G.B.Wiggins)சுக்கு மதுராவில் இருந்து ஒரு அறிக்கை வந்திருந்தது. அந்த அறிக்கையில் இருந்த தகவலை வைத்து டெல்லியில் நடக்கவிருந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டம் குறித்து விக்கின்ஸ் டெல்லி காவல்துறையை எச்சரித்தார். டெல்லியில் நடக்கவிருந்த அந்த ரகசியக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை அன்றைய அரசாங்கம் நன்றாகவே புரிந்திருந்தது. அந்தக் கூட்டம் 1942, டிசம்பர் 8ஆம் நாள் நடைபெற இருந்தது. விக்கின்ஸ் இரண்டு முறை நினைவூட்டல் கடிதம் எழுதிய பிறகுதான் டெல்லி சி.ஐ.டி.யின் கண்காணிப்பாளர், டெல்லி கூட்டம் பற்றி பதில் அறிக்கை அனுப்பினார்.
மதுராவின் கோபர்தான் பகுதியில் அந்துலால் வைஷ் என்பவரது வீட்டில் வைத்துதான் 1947 டிசம்பர் 1 அன்று ஆர்.எஸ்.எஸ்.ஸின் ரகசியக் கூட்டம் நடந்திருந்தது. இந்த ரகசியக் கூட்டம் குறித்து மதுரா சி.ஐ.டி. கொடுத்த அறிக்கை விக்கின்சுக்கு ஆழமான கவலையை ஏற்படுத்தியிருந்தது. மதுராவில் நடந்த ரகசிய கூட்டத்தில் மதுரா, டெல்லி, அலிகார், ஈட்டா பகுதிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 50 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பங்கேற்றிருந்தனர். அங்கே வந்திருந்தவர்களிடம், "1947 டிசம்பர் 8ஆம் நாள் டெல்லியில் இந்தியா முழுவதிலும் இருந்து வருகைதரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கொண்ட கூட்டம் நடைபெறும். எதிர்காலத் திட்டங்கள் பற்றி அக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும்" என்று கூறப்பட்டிருந்தது. அதனால் தான் டிசம்பர் 8ஆம் நாள் டெல்லி கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி தெரிந்துகொள்ள விக்கின்ஸ் மிகவும் கவலையுடன் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். ஆனால் டெல்லி காவல்துறை அன்று மெத்தனமாக இருந்துவிட்டது அல்லது உடந்தையாக இருந்திருக்கிறது என்ற முடிவுக்கே வரலாம். அதனால் தான் விக்கின்ஸ், டெல்லி கூட்டம் தொடர்பாக அறிக்கைக் கேட்டதற்கு டெல்லி சி.ஐ.டி. கண்காணிப்பாளர் அசட்டையாக நடந்துகொண்டிருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
"1947, டிசம்பர் 1ஆம் நாள் மதுராவில் 50 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூடினார்கள். மக்களை வெறியூட்டுவதற்காக, காங்கிரஸ் தலைவர்களைக் கொலை செய்யப் போவதாகக் கூறினார்கள்" இது மதுரா கூட்டத்தில் சேகரிக்கப்பட்ட தகவல். 1947 டிசம்பர் 8ஆம் நாள் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இதுவும் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு மதுரா ரகசியக் கூட்டம் தொடர்பான இந்த அறிக்கை ஆதாரமாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களைக் கொலை செய்து மக்களை வெறியூட்டுவதன் மூலம் மக்களிடத்தில் ஆர்.எஸ்.எஸ். செல்வாக்கு பெறமுடியும். இதுதான் திட்டம்.
ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிகள் வைத்திருந்ததா?
ஆர்.எஸ்.எஸ்., துப்பாக்கி வாங்க முயற்சிகள் மேற்கொண்டதாக காவல்துறை சந்தேகப்பட்டது என்றும் சி.ஐ.டி. அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 1947 நவம்பர் 13ஆம் நாள் தேதியிட்ட ஒரு அறிக்கை ‘தீவிர தன்மைக் கொண்ட ரகசியம்’ என்று பாதுகாக்கப்பட்டது. டெல்லி சி.ஐ.டி. பிரிவின் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அந்த அறிக்கை கிடைத்திருக்கிறது.
டெல்லியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு டெல்லியின் மோரிகேட் மற்றும் பல்வேறு இதர பகுதிகளில் பணியில் இருந்த காவல்துறையினரைக் கூலி கொடுத்து வசப்படுத்த ஆர்.எஸ்.எஸ். பணியாளர்கள் முயற்சி செய்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
அனைத்து வகையான ஆயுதங்களும் தங்களிடம் உள்ளதாக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் காவல்துறையினரிடம் பெருமையாகக் கூறியிருக்கிறார்கள். "கலவரங்கள் வெடிக்கும் போது நீங்கள் எங்களை நோக்கி சுடக்கூடாது. காரணம் நாங்களும் நீங்களும் இந்துக்கள்" என்று கூறியிருக்கிறார்கள். காவலர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. அரசு அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கருதினார்கள். கலவரச் சூழலில் துப்பாக்கியால் சுட மறுத்தால் அவர்கள் பிரச்சனையை சந்திக்க நேரிடும். மேலும் அவர்கள் சுட்டால் இந்துக்கள் சிலரும் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாக நேரிடும் என்று காவலர்களின் வாதம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரங்களை உருவாக்கவும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திட்டமிட்டிருந்தார்கள். கலவரங்கள் வெடித்தால், அடையாளத்துக்காக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மணிக்கட்டில் வெள்ளைத் துண்டு கைக்குட்டையை கட்டிக்கொள்ள வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்திருந்ததாகவும் சி.ஐ.டி. அறிக்கை கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆயுதங்களை வாங்கியிருந்தார்கள் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. அகாலி சீக்கியர்களுடன் கைகோர்த்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரங்கள் செய்ய ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டதும் அறிக்கை மூலம் தெரியவருகிறது.
சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு ஆய்வாளர் கர்தார் சிங், ஒரு அறிக்கைத் தயாரித்தார். அதில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வாழ்நாள் உறுப்பினர்கள் பியாரிலால் மற்றும் ஹர்பன்ஸ் லால் இருவரும் சியால்கோட்டில் இருந்து டெல்லிக்கு வந்திருந்தார்கள். பிறகு ஹரித்துவாருக்கும் முசூரிக்கும் சென்று மேற்கு பஞ்சாபில் இருந்து வந்திருந்த அகதிகள் மத்தியில் ஆள்சேர்ப்பு வேலையில் வெளிப்படையாகவே ஈடுபட்டார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் இருவரும் ஆயுதம் வாங்கப் போனதாக சந்தேகத்தையும் மூத்த அதிகாரிகளுக்கு எழுதினார். ஆனால் அந்தத் தகவலை அவர் உறுதி செய்யவில்லை.
1947, நவம்பர் 24ஆம் நாள் ஒரு அறிக்கை, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இருவர் அல்வார் மாகாணத்திற்குச் சென்றார்கள். தொண்டர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிப்பதற்காகவும் அதேநேரம், கலவரச் சம்பவங்களில் தயார் நிலையில் இருப்பதற்காகவும் அவர்கள் 150 துப்பாக்கிகளை வாங்கினார்கள் என்று கூறுகிறது. ஆனால் அந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கிறது. எனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது ஆயுதங்கள் வாங்கியிருக்க வேண்டும். அதை முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்த முயற்சித்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் கொள்கையை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியிருக்க முடியும் என்று கருத இடமிருக்கிறது.
1948 பிப்ரவரி 6ஆம் நாள் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், காந்தியைக் கொலை செய்வதற்கு நாதுராம் கோட்சே பயன்படுத்திய துப்பாக்கியை கோட்சேவுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர் நாக்பூரில் வைத்து கொடுத்தார் என்று எழுதியிருந்தது. 1948 பிப்ரவரி 28 அன்று ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில், நேரு சொன்னவற்றில் சில உண்மைகள் இருப்பதாக சி.ஐ.டி. அறிக்கைகள் கருதுகின்றன. நேரு தனது கடிதத்தில்,
"காந்தியின் படுகொலை ஒரு தனி மனிதனுடைய பிரச்சனை இல்லை. ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய அளவில் நடத்திவந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்றே அதிகமாக நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். டெல்லி காவல்துறையில் ஆர்.எஸ்.எஸ். கொள்கையோடு ஒத்துப்போகக் கூடியவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் மாற்றிவிடுவது அவ்வளவு எளிதான காரியமில்லை" என்று எழுதியிருக்கிறார்.
ஆனால் நேருவின் கருத்தை பட்டேல் ஏற்றுக்கொள்ளவில்லை. நேருக்கு பட்டேல் எழுதிய பதில் கடிதத்தில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நற்சான்று வழங்கியிருந்தார். காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று எழுதியுள்ளார். காந்தி படுகொலை செய்யப்பட்டதை ஆர்.எஸ்.எஸ்.சும் இந்து மகாசபா அமைப்பும் வரவேற்றுக் கொண்டாடின. அதற்கு அவர்கள், காந்தியின் கோட்பாட்டை தீவிரமாக எதிர்த்ததுதான் காரணம் என்றும் பட்டேல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அவர் ஆர்.எஸ்.எஸ்.ஐ பாதுகாக்கும் வகையில் இப்படிக் கூறுகிறார். "ஆர்.எஸ்.எஸ். மாதிரியான ரகசிய அமைப்பில் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் இல்லை, பதிவுகள் இல்லை. அதனால் ஒரு குறிப்பிட்ட நபர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.ஸில் செயல்பாடு கொண்டவராக இல்லையா என்பது பற்றி சரியான தகவலைப் பெறுவது கடினமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலே சொன்ன சி.ஐ.டி. அறிக்கைகள் உண்மையெனில், காந்திக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸின் அச்சுறுத்தல் இருந்தது உண்மை. ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் போன்ற உயர்மட்டத்தில் இருந்தவர்களிடம் இருந்து அந்த அச்சுறுத்தல் வந்திருக்க வேண்டும். காந்தியைக் கொலை செய்ய ஆர்.எஸ்.எஸ்.ஸால் முடிந்திருக்கும். அதுபற்றி டிசம்பர் 8 மதுரா கூட்டத்தில் பேசியிருக்கவும் முடியும். ஆனால் நாதுராம் கோட்சே, காந்தியைப் படுகொலை செய்ததற்கும் மதுரா கூட்டத்திற்கும் சம்பந்தமுண்டா? அல்லது அவர் சொந்தமாக செயல்பட்டாரா? என்பதைத்தான் நாம் இறுதியாக முடிவு செய்ய முடியவில்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.