ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிப்பு துருக்கி ராணுவம் அதிரடி
துருக்கி நாட்டு ராணுவ டாங்கிகள் சிரியாவுக்குள் நுழைந்தன: ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிப்பு

சிரியா-துருக்கி எல்லைப்பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் மீது நேற்று முன்தினம் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி ஐ.எஸ். தீவிரவாதிகள் இருமுறை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக சிரியாவுக்குள் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களின்மீது துருக்கி படைகள் 40 முறை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனுடன் சமீபத்தில் கூட்டாக பேட்டியளித்த துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன், சிரியாவில் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தி அவர்களையும் அங்கே முகாமிட்டுள்ள இதர போராளி குழுக்களையும் விரட்டியடிப்போம் என்று அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, துருக்கி - சிரியா எல்லையோரம் உள்ள சிரியாவுக்கு சொந்தமான ஜராப்லஸ் நகருக்குள் துருக்கி ராணுவத்துக்கு சொந்தமான 9 பீரங்கி டாங்கி வாகனங்கள் நேற்று அதிரடியாக நுழைந்தன. ராணுவத்தினரும், துருக்கியை சேர்ந்த போராளி குழுவினரும் இயந்திர துப்பாக்கிகளுடன் டாங்கி வாகனங்களை பின்தொடர்ந்து சென்றனர்.

ஜராப்லஸ் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மற்றும் சிரியாவில் உள்ள போராளிகள் தங்கியிருக்கும் பகுதிகள்மீது துருக்கி நாட்டின் பீரங்கி படைகள் குண்டுகளை வீசி ஆவேசமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

சமீபத்தில் துருக்கியில் நடந்த ஒரு திருமண விழாவில் நடத்தப்பட்ட மனிதகுண்டு தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட நிலையில் துருக்கி தற்போது நடத்திவரும் அதிரடி தாக்குதலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் போர் விமானங்களும் சிரியாவுக்குள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துருக்கி பிரதமர் பினாலி இட்ரிம், சிரியாவில் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், ஹவுத்தி போராளிகள் மற்றும் இதர போராளி குழுக்களை யூப்ரட்டஸ் நதிக்கரையோர பகுதிகளில் இருந்து விரட்டியடிக்கும் வரையில் இந்த தாக்குதல் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி அரசின் இந்த அதிரடி நடவடிக்கை தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறும் வகையில் அமைந்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ள சிரியா அரசு, ஐ.எஸ். தீவிரவாதிகளை விரட்டியடிப்பதாக கூறிக்கொண்டு வேறு குழுக்களை சேர்ந்த தீவிரவாதிகளை தங்கள் நாட்டுக்குள் விதைக்க துருக்கி முயன்று வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.

துருக்கியின் நடவடிக்கையால் கவலை அடைந்துள்ளதாக சிரியாவின் நட்பு நாடான ரஷியாவும் தெரிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.