முத்துப்பேட்டையில் தூர்ந்துபோய் மணல்திட்டாக காட்சியளிக்கும் கோரையாறுமுத்துப்பேட்டையில் உள்ள கோரையாறு தூர்ந்துபோய் உள்ளதால் மீனவர்கள் படகுகளை 2 கிமீ தூரம் வரை தள்ளிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரிலிருந்து கடல் முகத்துவாரம் வரை 7 கிமீ தூரம் வரை கோரையாறு உள்ளது. இது 500 மீட்டர் அகலம் கொண்டதாகும். இதன்மூலம் கடற்கரையை ஒட்டி உள்ள முத்துப்பேட்டை நகரத்தில் நிலத்தடியிலிருந்து நல்ல தண்ணீர் கிடைக்கிறது. தற்பொழுது இந்த கோரையாறு முழுவதும் தூர்ந்து விட்டதால் ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கோரையாற்றின் இரு புறமும் சுமார் 100 மீட்டர் அளவில் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதேபோல் சுமார் 50 மீட்டர் அளவில் ஆற்றில் ஒரு பகுதியில் ஆற்றுக்குள் ஒரு மினி ஆறாக தண்ணீர் சென்று வருகிறது. மீதம் 350 மீட்டர் அளவில் தூர்ந்துபோய் ஆற்றுக்குள் திடலாக காட்சி அளிக்கிறது. இதனால் ஆசாத்நகர் பாலம்வரை வரும் படகுகள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் உள்ள ஜாம்புவானோடை படகு துறையிலிருந்து படகுகளை மீனவர்கள் தினமும் தள்ளிக்கொண்டு வருகின்றனர். இதனால் மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்புவதற்கு 2 மணிநேரம் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே பிடித்த மீன்களை சரியான விலைக்கு விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஆசாத்நகர் வழியாக கடலுக்கு கோரையாற்றில் செல்லும் ஆசாத்நகர், உப்பூர், ஆலங்காடு, காரைதிடல், வீரன்வயல் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்து உள்ளது. இந்த பிரச்னை சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதால் ஆசாத் நகரிலிருந்து முகத்துவாரம் வரை 7 கிலோ மீட்டர் கோரையாற்றை தூர்வார வேண்டும். அல்லது ஆசாத்நகர் முதல் ஜாம்புவானோடை படகுத்துறை வரை உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் ஆற்றையாவது தூர்வார வேண்டும். ஆசாத்நகரில் மீன்பிடி இறங்குதளம் (துறைமுகம்) அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
மீனவர்களின் சோகம் இப்படி ஒருபுறம் இருக்க இந்நிலையில் தமிழக அரசு ஆசாத்நகரிலிருந்து 2கிமீ தூரத்தில் உள்ள ஜாம்புவானோடை படகு துறையில் மீன்பிடிதளம் அமைத்து கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக சட்ட மன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அதிருப்தியடைந்த இப்பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.
இந்த நிலையில் தகவலறிந்த திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ஆடலரசன் ஆசாத்நகர் மீனவர்களையும், மீனவர் சங்க பிரதிநிதிகளையும் நேற்றுமுன்தினம் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது எம்எல்ஏவிடம் பொதுமக்கள் உங்கள் முயற்சியில் 2 கிமீ தூரம் கோரையாற்றை தூர்வார வேண்டும். முக்கியமாக இப்பகுதியில் மீன்பிடி இறங்குதளம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து எம்எல்ஏ ஆடலரசன், மீனவர் சங்க பிரதிநிதிகள் மீராமுகைதீன், ஹாஜா அலாவுதீன், அப்துல்ஹமீது, ஜின்னா, சேக்முஹம்மது, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் உள்ளிட்டோருடன் படகில் சென்று தூர்ந்துபோன கோரையாற்றை பார்வையிட்டார். மேலும் ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

நன்றி  தினகரன்- 30.08.2016


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.