உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது SDPI கட்சி!



தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி தனித்துப் போட்டியிடும் என அக் கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
வரும் உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பதவியிடங்களிலும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தனித்துப் போட்டியிடும் வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என்பதை நீதிமன்றங்கள் பல்வேறு தருணத்தில் கூறியுள்ளன. 2008இல் அப்போதைய திமுக ஆட்சியில் 1,405 பேர் விடுதலைக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கும் உயர் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. சிறைக் கைதிகள் விடுதலை குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யலாம் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சிறைக் கைதிகள் விடுதலையாவதில் திமுக ஆட்சியில் புதிதாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து, அனைத்து தரப்பு கைதிகளுக்கும் பொருந்தும் வகையில் கைதிகள் விடுதலையை மாநில அரசு அனுமதிக்க வேண்டும்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மீறும் வகையில் காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் கர்நாடக அரசின் போக்கு கடும் கண்டனத்துக்குரியது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், அம் மாநில முதல்வரின் பேச்சு விதிமீறலாகும். எனவே, கர்நாடக அரசின் திட்டங்களை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.

முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதற்காக, காவல் துறையினர் திட்டமிட்டு புனையும் பொய் வழக்குகளை கைவிட வேண்டும். சிறைக் காவல் மரணங்களை தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். நடப்பு பேரவைக் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும்.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளும் இடம்பெற வேண்டுமெனில், தாற்காலிக நீக்கம் செய்யப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் மீதான உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

மேலப்பாளையத்தில் தொடர்ந்து நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது, கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் முபாரக், மாநில பொதுச் செயலர் நிஜாம் முகைதீன், மண்டலத் தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.