சந்தேகம் சரியா - மார்பில் வலி வந்தால் மாரடைப்பா?மார்பில் வலி ஏற்பட்டால் அது மாரடைப்பாகத்தான் இருக்கும் என்கிறார்கள். உடனே இ.சி.ஜி. எடுத்துப்பார்த்துவிடுவது நல்லது என்றும் சொல்கிறார்கள். இது உண்மையா?

உண்மையில்லை.

மார்பில் வலி வந்தால் அது மாரடைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மார்பு வலிக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மார்புக்கூட்டில் ஒரு டஜன் விலா எலும்புகள் உள்ளன. இவை அனைத்தும் மைய மார்பு எலும்போடு இணைகின்றன. விலா எலும்புகளுக்கு இடையில் தசைகள் உள்ளன.

மார்புக்கூட்டுக்குள் நுரையீரல்கள், நுரையீரல் உறைகள், சுவாசக்குழாய்கள், இதயம், இதய உறை, ரத்தக்குழாய்கள், உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, உதரவிதானம் எனப் பல உறுப்புகள் உள்ளன. இவற்றில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் மார்பில் வலி ஏற்படும்.

இதயம் உயிர் காக்கும் உறுப்பு. இதயத்தில் வலி ஏற்பட்டால், உயிருக்கு ஆபத்து நேரிடலாம். இதயவலியையும் மார்பில் ஏற்படும் மற்ற வலிகளையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்துகொண்டால், மார்பில் வலி வரும்போது மிரட்சி அடையத் தேவையில்லை.

இதயவலியில் இரண்டு நிலைகள் உண்டு. நடக்கும்போது, மாடிப்படிகளில் ஏறும்போது, ஓடும்போது மார்பில் வலிப்பது, சிறிது ஓய்வுக்குப் பின் வலி குறைவது இதயவலியில் முதல் வகை. இதற்குப் பெயர் ‘ஆஞ்சைனா’. மாரடைப்புக்கு முந்தைய நிலை இது. நடு மார்பில் கயிறு கட்டி அழுத்துவது போல் வலிவந்து கழுத்து, தாடை, இடது கைக்கு அது பரவினால் மாரடைப்பு. இது இதயவலியின் இரண்டாம் நிலை. இந்த வலியின்போது உடல் கடுமையாக வியர்க்கும், மூச்சுத் திணறும், மயக்கம் வரும். இதுதான் உயிருக்கு ஆபத்து தரும்.

நுரையீரலில் நிமோனியா, காசநோய், சுவாசக்குழாய் அழற்சி காரணமாகச் சளி கட்டும். இதனால் மார்பில் வலி வரும். அப்போது காய்ச்சல், இருமல், சளி, சளியில் ரத்தம் போன்ற துணை அறிகுறிகளும் காணப்படும். நுரையீரல் உறையில் பாதிப்பு இருந்தால், மார்பின் பக்கவாட்டுப் பகுதிகளில் வலி கடுமையாக இருக்கும். தும்மும்போதும் இருமும்போதும் வலி அதிகரிக்கும்.

பெரும்பாலான நேரம் மார்புவலிக்கு இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்சினைகள்தான் காரணமாக இருக்கும். இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் பிதுக்கம், உணவுக்குழாய் அழற்சி போன்றவை ஏற்பட்டிருந்தால், மார்பில் வலிவரும். இந்த வலியை எளிதில் இனம் கண்டுகொள்ளலாம். நடு மார்பில் வலி அல்லது எரிச்சல் தோன்றும். வாந்தி, ஏப்பம் வரும். நாம் சாப்பிடும் உணவுக்கும் மார்பில் வலி ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதை உணரமுடியும்.

கல்லீரல் அழற்சி காரண மாகவும் மார்பில் வலி வரலாம். அப்போது காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்திருக்கும். பித்தப்பைக் கோளாறுகள் காரணமாக இருந்தால், மார்பில் ஏற்படும் வலி வலது தோள்பட்டைக்குப் பரவும். உதரவிதானத்தில் பிரச்சினை இருந்தாலும் மார்பு வலியானது தோள்பட்டைக்குப் பரவும்.

மார்பில் அடிபடுவது, எலும்பு முறிவு, ரத்த உறைவு, தசைப்பிடிப்பு போன்றவற்றாலும் மார்பில் வலி வரலாம். அப்போது மார்பைத் தொட்டாலோ, அசைத்தாலோ வலி அதிகரிக்கும். மார்பின் மேல்பகுதியான சருமத்தில் அக்கி அம்மை ஏற்பட்டால், ஆரம்பத்தில் மார்பில் கடுமையாக வலிக்கும். அதற்குப் பிறகுதான் அம்மைக் கொப்புளங்கள் தோன்றும். மனம் சார்ந்த பிரச்சினை, ரத்தச் சோகை போன்றவையும் மார்பில் வலியைத் தோற்றுவிக்கும்.

அடிக்கடி மார்பில் வலி ஏற்படுபவர்கள் மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி., இரைப்பை எண்டாஸ்கோப்பி பரிசோதனைகளை மேற்கொண்டு காரணம் தெரிந்துகொண்டால், மார்பில் வலி வரும்போதெல்லாம் மாரடைப்பாக இருக்குமோ எனப் பதற வேண்டியதில்லை.

டாக்டர் கு. கணேசன் பொதுநல மருத்துவர்

நன்றி : தினகரன்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.