ஷேக் ஜாயித் ஒரு சகாப்தம் – நூல் ஒரு பார்வை.
மக்கள் செல்வத்தின் பலத்தை அறிந்த ஒரு ஆட்சியாளராலேயே அந்த நாட்டை முன்னேற்றத்தின் சிகரத்திற்கு அழைத்து செல்ல முடியும். அதை நன்கு உணர்தவரின் வரலாற்றைத்தான் இந்நூல் அழகு தமிழில் விவரிக்கிறது.
“செல்வம் என்பது பணம் அல்ல, உண்மையான செல்வம் என்பது நாட்டு குடிமக்களே ஆவர். நாட்டை கட்டமைக்க வேண்டிய அரசாங்கத்தின் பணிமட்டுமல்ல நாட்டு மக்களின் ஒத்துழைப்பும்தான்” என்று மக்களையும் நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க செய்தார் ஷேக் ஜாயித்.
மக்கள் நலனே தனது நலனாக ஏற்று செயல்பட்ட ஷேக் ஜாயித் அவர்களின் வரலாற்றையும், அவரின் ஆளுமையையும் இந்நூல் மிக நேர்த்தியாக விவரிக்கிறது. அதோடு அமீரகத்தின் வரலாற்றை சுருக்கமாக பதிவு செய்கிறது.

சிறு சிறு பகுதிகளாக இருந்த பகுதிகளையெல்லாம் ஐக்கிய அமீரகம் என்ற கூட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைத்த ஒரு ஆட்சியாளனின் சிறிய வரலாற்று தொகுப்புதான் இந்நூல். ஷேக் ஜாயித் ஆட்சியில் கல்வி, பொருளாதாரம், மக்களின் முன்னேற்றம், இயற்கையின் எழில்சார்ந்த விவசாய திட்டங்கள், மின்சாரம், சுற்றுச் சூழலை பாதுகாக்க எடுத்த முயற்சிகள் என அவர் ஆட்சி ஒரு அமீரகத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.
மக்களின் அடிப்படை தேவைகளை தன் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற பார்வை கொண்டவர். அவர் ஆட்சிக்கு வரும்போது 2, 3 ஹெக்டராக மட்டுமே இருந்த விவசாய பண்ணைகள் அவரது முயற்சியால் 100 ஆயிரம் ஹெக்டராக மாறியது.
தன் நாடு, தன் மக்கள் என்று தனது பார்வையை எப்ப்போதும் சுருக்கி பார்க்காதவர். பல்வேறு நாடுகளுக்கு உதவி செய்வது, எங்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பது, நாடுகளுக்குள் உண்டான பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும் என்ற அணுகுமுறை போன்றவற்றால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் ஷேக் ஜாயித் அவர்கள்.
“ஒரு உண்மையான ஆட்சியாளன் என்பவர் தனது சொந்த குடும்பத்தாரின் செயல்பாடுகளில் எவ்வாறு அக்கறை கொள்வாரோ, அதேபோன்று நாட்டு மக்களின் செயல்பாடுகளில் தீவிர கவனத்துடன் கண்காணித்து, தேவைகளை புரிந்துகொண்டு, பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்” என்ற மன உறுதியில் ஆட்சி செய்தவர்.
கல்வி முன்னேற்றம் குறித்து இன்றும் நாம் பேசி வருகிற வேளையில் பல வருடங்களுக்கு முன்பாகவே தனது மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல கல்வி நிறுவனங்களை நிறுவினார். அதுமட்டுமல்லாமல் பெண் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுடன், அவர்களின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை கொண்டு செயலாற்றினார்.
“பெண்கள் பிரசவ இயந்திரங்கள் அல்ல. மதமும், மரபும் அவர்களுக்கு வழங்கியுள்ள அனைத்து சுதந்திரங்களும் அவர்களுக்கு கிடைத்தாக வேண்டும். மகளிர் முன்னேற்றத்தின் மூலம் சிறந்த முன்னுதாரணங்கள் உருவாகும்”. என்று சூளுரைத்தார்.
முஸ்லிமாக அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என விருப்பம் கொண்டவாராக இருந்தார். “அரபுகளும், முஸ்லிம்களும் ஒரு குடையின்கீழ் நின்றால்தான் சமூகம் பாதுகாப்பானதாக இருக்கும். அப்படி இல்லையென்றால் அது மோசமானதாக ஆகிவிடும்” என்று எச்சரிக்கை செய்தது மட்டுமில்லாமல் “நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் என்ற சிறந்த எண்ணம் நம்மிடையே இருந்தால்தான் ஒரே தலைமையின்கீழ் நிற்க வேண்டும் என்ற சிந்தனைக்கு நம்மை அழைத்து செல்லும்” என்றும் வலியுறுத்தினார்.
தனது ஆட்சியில் உள்ள குறை, நிறைகளை மக்களை நேரிடையாக சந்தித்து தெரிந்து கொண்டார். அதற்காக எந்நேரமும் என் வீடு திறந்திருக்கும் என்றும் அறிவித்தார்.
தான், தன் குடும்பம் என மட்டுமே சிந்திக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு மத்தியில் மக்களுக்காகவே நான் என வாழ்ந்த ஷேக் ஜாயித் அவர்களின் வரலாற்றை விளக்கும் இந்நூல் இளைய சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
- வி.களத்தூர் பாரூக்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.