அரசை விமர்சிப்பது தேசத் துரோகம் ஆகாது! உச்சநீதிமன்றம் மீண்டும் அதிரடி!!!அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது தேசவிரோத மற்றும்அவதூறு குற்றம் ஆகாது என்றுஉச்சநீதிமன்றம்
தெளிவுபடுத்தியுள்ளது.இதுதொடர்பாக 1962-ஆம் ஆண்டே, 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவான வழிகாட்டுதல்களை அளித்திருக்கும் போது, அதில் மீண்டும் குழப்பம் தேவையில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.காமன் காஸ் என்ற என்.ஜி.ஓ.அமைப்பு அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில்,அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என்று அனைவர் மீதும் தேச விரோதச் சட்டம் (என்எஸ்ஏ) பாய்வதாகவும், அண்மையில் காஷ்மீர் விவகாரத்தை விவாதித்த காரணத்திற்காக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி அமைப்பு மீதும் கூட தேச விரோதவழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டிருந்தது.

2014-ம் ஆண்டில் மட்டும் 47 தேச விரோத வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 58 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்; ஆனால் ஒரே ஒரு வழக்கில் மட்டும்தான் அரசு தனது குற்றச்சாட்டை நிரூபித்துள்ளது என்பதையும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்த காமன்காஸ் அமைப்பு, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124-ஏதவறான முறையில்- மக்களை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப்படுவதாகவும், எனவே, உச்சநீதிமன்றம் இதுதொடர்பான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு, செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. காமன் காஸ் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். தேச விரோத வழக்கு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; ஆனால் அரசை எதிர்த்து விமர்சிப்பவர்கள் மீதெல்லாம் அது பயன்படுத்தப்படுகிறது.

என்று பூஷன் குற்றம் சாட்டினார். உதாரணமாக கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதும், கார்ட்டூனிஸ்ட் அஜீம் திரிவேதி மீதும்தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டியிருப்பதை சுட்டிக்காட்டினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “தேசவிரோதச் சட்டத்தை புதிதாக விளக்க வேண்டிய அவசியமில்லை” என்றும் “1962-ல் கேதார்நாத் சிங் - பீகார் அரசுக்கு இடையிலான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு ‘124-ஏ’யின் கீழ்வழக்கு பதிவு செய்ய தெளிவானவழிகாட்டுதல்களை அளித்துள்ளது” என்பதையும் நினைவுபடுத்தினர்.

ஆனால், கேதார் நாத் சிங் தீர்ப்பின் அடிப்படையில் சட்டம்திருத்தப்படவில்லை என்று கூறிய பிரசாந்த் பூஷன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, வழக்கு தொடரும் இடத்தில் உள்ள காவல்துறையினர் இப்போது வரை புரிந்து கொள்ளவில்லை; அவர்கள் இந்தியத் தண்டனைச் சட்ட பிரிவை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள் என்றார்.அதற்கு பதிலளித்த நீதிபதிகள், “காவல்துறையினர் புரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை; மாஜிஸ்திரேட்தான் தேச விரோதச் சட்டம் என்ன கூறுகிறது, உச்சநீதிமன்றம் இதுபற்றி என்ன வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்” என்றனர்.
மேலும், “அரசை விமர்சிக்கும் பொருட்டு யாராவது ஒருவர் கருத்து தெரிவித்தாலோ அல்லது அறிக்கை அளித்தாலோ அதைஅவதூறு மற்றும் தேச விரோதவகைப்பாட்டிற்குள் கொண்டுவந்து வழக்கு தொடர முடியாது”என்று மீண்டும் தெளிவுபடுத்தினர்.அத்துடன் காமன் காஸ் என்ற அமைப்பு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தேச விரோதச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கும் குறிப்பான சம்பவங்கள் இருந்தால் அதன் பேரில் தனியாக ஒரு வழக்கு தொடருமாறும் அறிவுறுத்தினர்.

Arun Kumar பதிவிலிருந்து..

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.