முத்துப்பேட்டையை தனி தாலுகா ஆக்க வேண்டும்முத்துப்பேட்டையை தனி தாலுகா ஆக்க வேண்டும் என்று சட்டசபையில் ஆடலரசன் பேசினார். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ஆடலரசன்  சட்டமன்றத்தில் பேசியது: மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டங்களை பிரித்து முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். அங்கு கடைவீதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திட ஏதுவாக சாலையோரங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். அங்கு ஸ்கேன் கருவி நிறுவப்பட்டிருந்தும், அதை இயக்குபவர் பணியிடம் காலியாக இருப்பதால் ஏழை நோயாளிகள் தனியார் ஸ்கேன் மையங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. மேலும் எனது தொகுதிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் மகப்பேறு பார்க்க முடியாத நிலையும் உள்ளது. எனவே மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு பல்லாயிரக்கணக்கான டன் வைக்கோல் வீணாவதை தவிர்க்கும் பொருட்டு திருத்துறைப்பூண்டி தாலுகாவில் காகித ஆலை தொடங்க வேண்டும். உலக புகழ்பெற்ற தர்கா முத்துப்பேட்டையில்  அமைந்துள்ளது. இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினந்தோறும் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தங்கி செல்வதற்கான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.

ஆகவே பயணிகள் தங்கும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும். கோட்டூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து பெருகவாழ்ந்தானை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும். முத்துப்பேட்டை பகுதியில் செல்லும் கோரையாற்றில் கடலுக்கு 8 முதல் 10 கி.மீ. இடைவெளியில் உள்ள லகூன் என்று அழைக்கப்படும் சதுப்பு நிலப்பகுதி வரை உள்ள பகுதியில் ஆறுகள் தூர்ந்து உள்ளது. இதை மிதவை இயந்திரம் கொண்டு தூர்வார வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.