ராம்குமார் உயிர் பறிப்பு உண்மைகள்! இது வேற மாதிரி என்கவுண்ட்டர்! :அரசாங்கம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் சிறையில் தள்ளி கதையை முடித்து உண்மையை புதைத்து விடுமோ’ என்கிற பேரச்சத்தை பொதுமக்களிடமும் போலீஸ் மீது பலத்த சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது ஸ்வாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரின் மர்ம மரணம்.

“இது வேற மாதிரி என்கவுண்ட்டர்’ என்கிறார்கள் சட்டம் சார்ந்தவர்கள். ஜூன் -1 ந்தேதி கைது செய்யப்பட்டு, 89 நாட்கள் ஆன நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் 90-வது நாள் தனக்கு ஜாமீன் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்த ராம்குமார், செப்டம்பர் 18-ந் தேதி சிறையில் மின்வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை வெளியிட்ட தகவலை சிறுகுழந்தைகள்கூட நம்பவில்லை.

ராம்குமாரின் கதையை முடித்ததன் மூலம் ஸ்வாதி படுகொலை வழக்கின் உண்மைப் பின்னணியையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டது போலீஸ் என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர்.. புழல் சிறையில் தனது செல்லிலிருந்து தண்ணீர் குடிக்க கிச்சனுக்குப் போனான் ராம்குமார்.
அங்குள்ள, ஹை டென்ஷன் மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை செய்தான் என்று முதலில் சொன்னது சிறைத்துறை போலீஸ். தற்போது அதில் ஒரு ட்விஸ்ட். அதாவது, ராம்குமார் அடைத்து வைக்கப்பட்ட அறைக் கதவின் ஓரத்திலிருந்த குடத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மாலை 4:30 மணிக்கு கேட்டுக் கொண்டதாகவும், அந்த சிறைத் தொகுதியின் காவலர் பேச்சிமுத்து உடனே ராம்குமாரை திறந்து விட்டதாகவும், ராம்குமாரோ சிறைக்கதவின் ஓரத்திலுள்ள ஸ்விட்ச் பொக்ஸை உடைத்து அதிலுள்ள மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டான் என்றும், அதற்கு ஆதாரமாக இரண்டு போட்டோக்களையும் கசிய விட்டி ருக்கிறது சிறைத்துறை.

சிறைவாசிகளாக எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் ஜெயில் படத்தை சிறைத்துறை வெளியிட்டதே இல்லை. ஊழல் வழக்கில் பெங்களூரு, திகார் சிறைகளில் அடைபட்டிருந்தவர்களின் சிறை அறை பற்றிய வரைபடங்கள்தான் வெளியாகியுள்ளனவே தவிர, புகைப் படங்கள் வந்ததில்லை. அதேபோல் யார் கேட்டாலும் கொடுக்காத ஆக்சிடெண்ட் ரெஜிஸ்டர் (ஏ.ஆர்.) காப்பியையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமாரின் சிறை அறையை படம் பிடித்து பரப்ப வேண்டிய அவசியம் என்ன” எனக் கேட்கும் சட்ட வல்லுநர்களும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளும் அந்தப் போட்டோக்கள் செட்டிங் செய்து எடுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.

செட்டிங்-1: ஹெச்.எஸ்.-2 புளொக்கை ஒட்டியுள்ளது டிஸ்பென்ஸரி புளொக். அங்கு மருந்துகள் எதுவும் இருக்காது. 4 அறைகள் மட்டுமே கொண்ட புளொக் அது. சிறைத்துறை கசிய விட்ட அந்த போட்டோவில் ராம்குமாரின் அறைக் கதவின் ஓரத்திலேயே இடது புறத்தில் ஒரு குடம் உள்ளது. அதிலிருந்து தண்ணீர் குடிப்பதற்காகத்தான் ராம்குமார் வெளியில் வந்தார் என்று அந்த போட்டோவை வெளியிட்டுள்ளனர்..
ஆனால், எந்த அறையிலும் வெளியில் தண்ணீர் குடம் இருக்காது. காரணம், கைதியை உள்ளே வைத்து பூட்டிவிட் டால் அருகில் எந்தக் காவலரும் இருக்கமாட்டார். திடீரென்று, நள்ளிரவில் தாகம் எடுத்தால்கூட குடிப்பதற்கு வசதியாக, தண்ணீர் குடத்தை அவரவர்களின் அறைக்குள்தான் வைத்துக்கொள்வார்களே தவிர யாரும் வெளியில் வைத்திருக்க மாட்டார்கள்.

ராம்குமாருக்காக பேச்சிமுத்து கதவைத் திறந்து விடவேண்டிய அவசியமே இல்லை. வெளியில் இருக்கும் குடத்தி லுள்ள தண்ணீரை டம்ப்ளரில் எடுத்து சிறைக்கம்பி வழியாக கொடுத்திருக்க முடியும்.

செட்டிங்-2: டைல்ஸ் சுவரில் “ஹலைம் ஷீட்’ ப்ளாஸ்டிக்கால் மோல்டிங் செய்யப்பட்டுள்ளது அந்த ஸ்விட்ச் பொக்ஸ். அதை, ஸ்க்ரூ டிரைவர் இல்லாமல் திறக்க வாய்ப்பே இல்லை. ஆனால், கையால் அடித்து உடைத்து திறந்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டி ருக்கிறது புழல் காவல்நிலைய போலீஸ். ஆனால், அந்தளவுக்கு அடித்து உடைத்தும்கூட ஸ்விட்ச் பாக்சில் எந்த டேமேஜும் இல்லை.

செட்டிங்-3 :’’அதையும் மீறி, கை நகத்தை பயன்படுத்தி மிக லாவகமாக ஸ்விட்ச் பொக்ஸை இழுத்திருந்தாலும் தரையில் படும் அளவுக்கு இவ்வளவு நீளமான வயர்களை எந்த எலக்ட்ரீஷியனும் வைத்திருக்க மாட்டார். அதுவும், 200 லிருந்து 230 ஓல்ட்டேஜ் மின்சாரம் பாயக்கூடிய அளவுக்குத்தான் 5 ஸ்விட்சு கள் உள்ளன. அதில், ஒரே ஒரு ஸ்விட்சில் மட்டும்தான் வயர் கனெக்ட் ஆகியுள்ளது. கனெக்ட் ஆகாத வயர்களை கடித்தால் கரண்ட் ஷாக் அடிக்கவே அடிக்காது.

செட்டிங்-4: மெயின் பாக்சிலிருந்து ஸ்விட்ச் பாக்ஸுக்கு இன்கமிங் வயர் வரும். பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், எல்லா ஸ்விட்ச் பொக்சிலும் சிவப்பு நிறத்தில்தான் இருக்கும் என்று சொல்லமுடி யாது. எலக்ட்ரீஷியனுக்கு எந்த கலர் பிடித்திருக்கிறதோ அந்தக் கலர்கூட இன்கமிங் வயராக இருக்கலாம். அப்படியிருக்க, ஸ்விட்ச் பாக்சிலிருந்த 7 வயர்களில் எது இன்கமிங் வயர் என்பதை தேடிப் பிடித்தா கடித்திருப்பான் ராம்குமார்?

செட்டிங்-5’:’பிடுங்கிய எல்லா வயரையும் சேர்த்துக் கடிக்கும்போது கரண்டு வரும் அந்த இன்கமிங் வயரையும் சேர்த்துக் கடித்திருக்கமாட்டானா? என்றால், கடித்தவுடன் தூக்கி வீசப்பட்டிருப்பான். அதையும் மீறி, ஒருவன் கரண்ட் வயரைத் தொடர்ந்து கடித்து தற் கொலை செய்துகொள்வது சாத்தியமே இல்லை என்கிறார்கள்.
கரண்ட் வயரைக் கடித்து இறந்திருக்க முடியாது என்றால், முன்கூட்டியே கொலை செய் யப்பட்டு மின்சாரம் பாய்ச்சப் பட்டிருக்குமா? என்ற சந்தேகம் ராம்குமாரின் வக்கீல்களிடம் எழுந்துள்ளது.

காவல்துறையின் விசாரணை, பிரேத பரிசோதனை மூலம்தான் உண்மையை அறிந்துகொள்ளமுடியும். சிறையில் மர்ம மரணம் நடந்ததால் காவல்துறை எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதற்கு புழல் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ள ராம்குமாரின் எஃப்.ஐ.ஆரே சாட்சி.

சிறைப் பொறுப்பிலுள்ள ஒருவரை குற்றவாளியாக்கினாலும்கூட அவர் மூலம் உண்மைகள் கசிந்துவிடும் என்பதால் அனைவரையும் காப்பாற்றும் விதமாக எஃப்.ஐ.ஆர் போடப்பட் டுள்ளது. ராம்குமார் தற்கொலையே செய்திருந்தாலும், சிறைக்காவலில் இருந்த அவனை பாதுகாக்கத் தவறியதற்காக சிறைத்துறையினர் மீது எடுக்கப்படவேண்டிய சஸ்பெண்ட் நடவடிக்கைகூட மேற்கொள்ளப்படவில்லை.

போலீஸ் எஃப்.ஐ.ஆர். மிக கவனமாக பதிவாகியுள்ள நிலையில், பிரேத பரிசோதனை செய்யும் அரசு மருத்துவர்கள் அரசுக்கு எதி ரான ரிப்போர்ட்டை கொடுப்பதற்கு சாத்திய மில்லை எனக் கருதுகிறது ராம்குமார் தரப்பு.
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் சட்டம் சார்ந்த மருத்துவத்துறையின் பேராசிரியர் டாக்டர் சம்பத் குமாரிடம் கொலையா? தற்கொலை? என்பதை பிரேத பரிசோத னையில் எப்படி கண்டுபிடிப்பீர்கள்? என்று நாம் கேட்டபோது,
ராம்குமார் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு கரண்ட் ஷாக் கொடுக்கப்பட்டிருந்தால் போஸ்ட்மார்ட்டத்தில் ஹிஸ்டோ பெத்தாலஜி பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்றவர், “ராம்குமாரின் பிணத்தை வெறும் -5 டிகிரியில் வைத்து பாதுகாப்பதாக அரசுத்தரப்பில் சொல்கிறார்கள்.

20 டிகிரியில் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 7 லிருந்து 10 டிகிரி செல்சியஸிலாவது வைத்திருக்கவேண்டும். மேலும், தனியாக வைத்து பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால், பிரேத பரிசோதனையில் துல்லியமாக கண்டு பிடிக்கவேண்டிய விஷயங்கள் தடைப் படும்’ என்று முடித்துக் கொண்டார்.
ஹிஸ்டோ பெத்தாலஜி பற்றி சட்டம் சார்ந்த மருத்துவர்களிடம் நாம் கேட்டபோது, “”மின்சாரம் பாய்ந்ததாக சொல்லப்பட்ட இடத்திலிருந்து சிறு பகுதிகளை எடுத்து மைக்ரோஸ்கோப் மூலம் பரிசோதனை செய்யும் முறை. ஒருவருக்கு கரண்ட் ஷாக் அடித்தால் கரண்டானது ஒரு வழியாக உள்ளே பாய்ந்து வேறு வழியாக வெளியேறிவிடும்.
எண்ட்ரி பாயிண்டிலுள்ள சிறு சிறு இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் இரத்த ஓட்டம் தடைப் பட்டிருந்தால் உயிரோடு இருக்கும்போதே அவரது உடம்பில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது என்று அர்த்தம். அதேபோல், எண்ட்ரி பாயிண் டில் இரத்தம் உறைந்து எந்த இடத்திற்கு இரத்தம் செல்லவேண்டுமோ அங்கு செல்லாமல் திசுக்கள் அழிந்திருக்கும்.

உடம்பிலுள்ள உள் வெளித்தோலுக்கு நடுவே பிளவும் இருதய தசைநாரில் பிரிவும் ஏற்பட்டிருக்கும். இருதய வெண்ட்ரிக்கள் பகுதி சுருங்கி விரியாமல் அப்படியே நின்றுவிடும். மின்சாரம் பாயும் போது இதயத்தை நேரடியாக பாதித்தோ அல்லது மூளையில் தண்டுப்பகுதியிலுள்ள இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் பகுதியை பாதித்தோ இதயம் நின்று இறப்பை ஏற்படுத்தும்.
மின்சாரம் செல்லும் பாதையில் செல்லின் உட்கரு (NUCLEUS) இழுக்கப்பட்டு நீண்டு காணப்படும். இதற்கு, NUCLEAR STREAMING என்று பெயர். பல்லால் கடித்ததாக சொல்லப்படுவதால் உதடு, அருகிலுள்ள முடி, தோல் ஆகியவற்றை பல்வேறு பரிசோதனைகள் செய்தால் கரண்ட் ஷாக் அடித்து மரணமா? மரணமான பிறகு கரண்ட் ஷாக் வைக்கப்பட்டதா என்பதை கண்டுபிடித்துவிடலாம்” என்கிறார்கள்.
சம்பவம் குறித்து ராம்குமார் அடைக் கப்பட்டிருந்த புழல்-2 சூப்பிரண்டெண்ட் அன்பழகனை 044-26590350 எண்ணில் பல முறை தொடர்புகொண்டபோதும், நமது செல்நம்பரை குறித்துவைத்துக்கொண்டு… “அவர் பிஸியாக இருக்கிறார்’ என்றே பதில் சொன்னார் கள்.

போனை அட்டெண்ட் பண்ணிய அலெக் ஸாண்டர், கார்த்திக் உள்ளிட்ட காவலர்கள். சிறை மருத்துவர் நவீன்குமாரை பலமுறை தொடர்புகொண்டு எஸ்.எம்.எஸ். போட்ட போதும் நம்மிடம் பேசவில்லை.
ராம்குமாரின் பெற்றோரிடம்கூட அப்போது கரண்ட் ஷாக் என்ற தகவலை சொல்லாமல் புட் பாய்சன் என்று சொன்ன சிறைத்துறை இப்போது ராம்குமாரின் சிறை அறை, அங்குள்ள ஸ்விட்ச் பொக்ஸ் எனப் படம் காட்டுவது, சிறை மரணம் பற்றிய சந்தேகங்களை அதிகரிக்கவே செய்கிறது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.