சூயஸ் கால்வாய் பற்றிய ரகசியத் தகவல்கள்!உலகின் பெரும்பகுதி சரக்கு போக்குவரத்து கப்பல்கள் மூலமாகவே நடத்தப்படுகிறது. அதேநேரத்தில், நில அமைப்பு காரணமாக, அருகில் உள்ள நாடுகளை கூட பல ஆயிரம் கிமீ தூரம் சுற்றிக் கொண்டு வரும் நிலை கப்பல்களுக்கு இருக்கிறது. இதற்கு தீர்வு காணும் விதத்தில், இரு கடல்களுக்கு இடையிலான நிலப்பகுதி வழியாக நீர் வழித்தடத்தை அமைப்பது சிறந்த தீர்வாக கருதப்பட்டது. அவ்வாறு, ஆசியாவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்துக்காக செயற்கையாக அமைக்கப்பட்டதுதான் சூயஸ் கால்வாய்.

இந்த கால்வாய் அமைக்கப்பட்ட பின்னர், ஆசியாவிலிருந்து பல ஆயிரம் கிமீ தூரம் ஆப்பிரிக்காவை சுற்றிக்கொண்டு ஐரோப்பாவிற்கு செல்லும் அவஸ்தை தவிர்க்கப்பட்டது. கப்பல் போக்குவரத்திலும், உலக வர்த்தகத்திலும் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கும் சூயஸ் கால்வாய் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை இங்கே படிக்கலாம்.

மத்திய தரைக் கடல்பகுதியிலிருந்து செங்கடலை இணைக்கும் விதத்தில் எகிப்து நாட்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. 1896ம் ஆண்டு நவம்பர் 17ந் தேதி எகிப்து போர்ட் செட் துறைமுகத்தில் கோலாகலமாக இதன் திறப்பு விழா நடந்தது. கிட்டத்தட்ட 147 ஆண்டு கால வரலாறு கொண்ட இந்த பொறியியல் அதிசயம் குறித்த சுவாரஸ்யங்களை தொடர்ந்து காணலாம்.

இந்த கால்வாய் 163 கிமீ நீளமும், 300 மீட்டர் அகலமும், 75 முதல் 79 அடி ஆழம் கொண்டது. இந்த கால்வாயை அமைப்பதற்கு 10 ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் நடந்தன. அரசியல் பிரச்னைகள், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் காலரா போன்ற தொற்றுநோய்களால் ஏற்பட்ட மரணங்களால் இந்த கால்வாய் வெட்டும் பணி அவ்வப்போது தடை பட்டது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்டினானட் டி லெஸிப்ஸ் என்ற அரசு அதிகாரிதான் இந்த கால்வாயை அமைப்பதற்கான முயற்சி எடுத்து எகிப்து நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். பிரிட்டனின் கடும் எதிர்ப்பையும் மீறி, 1854ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் துவங்கின. ஆனால், பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் சமரசங்களுக்கு பின்னர் 1859ல் கால்வாய் வெட்டும் பணி சூடுபிடித்தது.

இதற்கான ஒப்பந்தத்தின்படி, 99 ஆண்டுகளுக்கு சூயஸ் கால்வாயை நிர்வகிக்கும் பொறுப்பு பிரான்ஸ் நாட்டிற்கு கிடைத்தது. இதற்காக, 13 நிபுணர் குழுவுடன் சிறப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. கால்வாய் அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் இந்த அமைப்பு நிர்வகித்தது.

ஆனால், தொடர்ந்து இந்த கால்வாய் கட்டுமானத்தை பிரிட்டன் எதிர்த்து வந்தது. கால்வாய் பயன்பாட்டுக்கு வந்து 6 ஆண்டுளில் சூயஸ் கால்வாய் நிறுவனம் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, பங்குகளை விற்க முடிவு செய்தது. அப்போது, ஓடிச் சென்று 44 சதவீத பங்குகளை வாங்கியது பிரிட்டன்.

சூயஸ் கால்வாய் அமைப்பதற்கு அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இதனால், குறைந்த ஊதியத்தை தந்து ஏழைகளை வலுக்கட்டாயமாக இந்த பணியில் எகிப்து அரசு ஈடுபடுத்தியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மண்வெட்டி மூலமாகவே கால்வாயை தோண்டினர். இதனால், மிகுந்த தாமதம் ஏற்பட்டது.


1863ம் ஆண்டு எகிப்து அரசர் இஸ்மாயில் பாஷா இந்த கால்வாய் கட்டுமானத் திட்டத்தில் வலுக்கட்டாயமாக பணிக்கு ஈடுபடுத்துவதை தடை செய்தார். இதனால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, லெஸிப்ஸ் மற்றும் சூயஸ் கால்வாய் நிறுவனமும், கால்வாய் அமைக்கும் பணிகளில் நீராவி எந்திரங்களை பயன்படுத்த துவங்கின.

சூயஸ் கால்வாய் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் இருந்தபோது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல சிற்பியான பெடரிக் ஆகஸ்டே பர்தோல்டி என்பவர் சூயஸ் கால்வாய் நுழைவாயிலில் பிரம்மாண்ட சிலை ஒன்றை நிறுவினால் சிறப்பாக இருக்கும் என்று லெஸ்ப்ஸ் மற்றும் சூயஸ் கால்வாய் நிறுவனத்திடம் விருப்பதை தெரிவித்தார்.

ரோட்ஸ் நகரில் கிரேக்க கடவுள் ஹீலியோஸ்க்கு அமைக்கப்பட்டிருப்பது போன்ற 90 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட சிலையாக அதனை நிறுவுவதற்கு அவர் யோசனை தெரிவித்தார். அந்த சிலையின் கையில் விளக்கை பொருத்திவிட்டால், கலங்கரை விளக்கமாகவும் பயன்படுத்த முடியும் என்று கூறினார்.

ஆசியாவுக்கு ஒளியை தந்த எகிப்து என்ற தாத்பரியத்துடன் அந்த சிலையை நிறுவவும் விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து, தனது சிலை கனவை எப்படியும் நிறைவேற்றிட பல முயற்சிகளை மேற்கொண்டார். அதன்பயனாக, அதுபோன்ற ஒரு சிலையை நிறுவுவதற்கு அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்தது. 1886ம் ஆண்டு அந்த பிரம்மாண்ட சிலையை நியூயார்க் துறைமுகத்தில் உள்ள லிபர்டி தீவில் நிறுவப்பட்டது.

தற்போது சுதந்திர தேவி சிலை என அழைக்கப்படும் அந்த பிரம்மாண்ட சிலை முதல்முதலில் சூயஸ் கால்வாய்க்காக அதன் சிற்பி உருவாக்க முனைந்தார் என்பதுதான் இதில் முக்கிய விஷயம். ஒருவழியாக கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்று பிரம்மாண்டமாக திறப்பு விழாவும் கண்டது

தற்போது இந்த கால்வாயில் 254 அடி அகலமும், 77.5 மீட்டர் உயரமும் கொண்ட கப்பல்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன. மேலும், அதிக பாரத்துடன் கப்பல்கள் செல்வதை தவிர்க்கும் வகையில், கால்வாய் நுழைவுப்பகுதியில் சிறிய கப்பல்களில் சரக்குகள் மாற்றப்பட்டு பெரிய கப்பல்கள் எடை குறைக்கப்பட்டு பயணிக்கின்றன.

மணிக்கு 15 கிமீ வேகத்தில் கப்பல்கள் பயணிக்கின்றன. ஆசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் கப்பல்கள் சூயஸ் கால்வாயை பயன்படுத்தாமல் சென்றால் சுமார் 4,350 கிமீ தூரம் கூடுதலாக பயணிக்க வேண்டும். அதேபோன்று, 9,600 கிமீ தூரம் கூடுதலாக பயணிக்க வேண்டியிருக்கும்.

ஒரு கப்பல் இந்த கால்வாயை கடந்து செல்வதற்கு 11 மணிநேரம் முதல் 16 மணிநேரம் பிடிக்குமாம். கடந்த 2014ம் ஆண்டில் 17,148 கப்பல்கள் சூயஸ் கால்வாயை பயன்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு சுமார் 35 கிமீ தூரத்திற்கு புதிய கால்வாய் வெட்டப்பட்ட விஸ்தீரணம் செய்யப்பட்டது. இதனால், இந்த பகுதியில் இருவழித்தடமாக மாறியிருக்கிறது.

மேலும், முற்றிலுமாக இருவழித்தடமாக மாற்றும் பணிகளும் நடந்து வருகிறது. இதன்மூலமாக, 18 மணிநேரம் வரை கப்பல்கள் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும். தற்போது அதிகபட்சமாக 49 கப்பல்கள் வரை இந்த கால்வாயில் பயணிக்க முடியும்.

1956ம் ஆண்டு இந்த கால்வாய் பகுதிகளை இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகியவை போர் தொடுத்து, கால்வாயை கைப்பற்ற முனைந்ததால், அந்த கால்வாய் அமைப்பை எகிப்து அதிபர் நாசர் தேசியமாக்கிவிட்டார்

மேலும், இந்த போரின்போது, கால்வாயை எகிப்து அடைத்தததுடன், அதில் சென்ற 40 பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் கப்பல்களை நீரில் மூழ்கடித்தது. இதையடுத்து, ஐ.நா. சபை தலையீட்டுக்குப் பின் பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனாலும், 1967ல் எகிப்து மீது இஸ்ரேல் மீண்டும் போர் தொடுத்தது. இதனால், கால்வாய் கடுமையாக சேதமடைந்தது.

பின்னர், 1975ம் ஆண்டில் கால்வாய் சீரமைக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து துவங்கியது. இந்த கால்வாய் திட்டத்தால், பல நன்மைகளை எகிப்தும், உலக நாடுகளும் பெற்று வருகின்றன. ஆனால், இந்த கால்வாய் திட்டம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த அரசர்களால் அமைக்கப்பட்டதற்கான வரலாற்று சான்றுகளும் உண்டு.

இதனை உருவாக்கிய பிரான்ஸ் அரசு அதிகாரி லெஸிப்ஸ்தான் பனாமா கால்வாய் அமைக்கும் திட்டத்தையும் கையிலெடுத்து தோல்வியுற்றார் என்பதும் நினைவுக்கூறத்தக்கது. பனாமா கால்வாயைவிட சூயஸ் கால்வாயில் பெரிய கப்பல்களும் பயணிக்கலாம் என்பது விசேஷ செய்தி.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.