சுவாதி கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது - கருப்பு முருகானந்தம் பரபரப்பு பேட்டி அமைச்சர்களால் கூட யாரையும் சிறைக்குள் வைத்துக் கொல்ல முடியாது..  அப்படி இருக்க நான் எப்படி  கொல்ல முடியும் என்று தன தரப்பு வாதத்தை விகடன் முன் எடுத்து வைத்து இருக்கிறார் ....

சுவாதி கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. சுவாதியையோ அல்லது அவரது தந்தையையோ எனக்குத் தெரியாது. விட்டால் நான்தான் சிறைக்குள் ராம்குமாரைக் கொன்றேன் என்று கூட கூறுவார்கள் என்று கூறியுள்ளார் சர்ச்சைக்குரிய பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம். கருப்பு முருகானந்தத்தின் பெயர் சுவாதி கொலை வழக்கில் கடந்த பல வாரங்களாக தொடர்ந்து அடிபட்டு வருகிறது. இவர்தான் சுவாதியைக் கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்து கொடுத்தார் என்றும் தீவிரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் போலீஸ் தரப்பில் இதுவரை ஒருமுறை கூட கருப்பு முருகானந்தத்திடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்படவில்லை.
அதேசமயம், கருப்பு முருகானந்தம் மீது புகார் கொடுத்தவர்கள்தான் போலீஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் உங்களைக் குறி வைத்து சுவாதி கொலை வழக்கின் மர்மங்கள் பேசப்படுவது ஏன் என்று விகடன் கேட்ட கேள்விக்கு கருப்பு முருகானந்தம் விரிவாகப் பதிலளித்துள்ளார். அது...

சுவாதி அப்பாவை நான் பார்த்ததே இல்லை
சுவாதி யார் என்று எனக்குத் தெரியாது. அவர் அப்பா யாரென்றும் நான் பார்த்தது இல்லை. அவர் அப்பாவோடு சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தேன் என்று தகவல் பரப்புகிறார்கள். என்னைத் தொடர்புபடுத்திப் பேசுவதற்கு முன்பு குறைந்தபட்ச ஆதாரத்தையாவது அவர்கள் காட்டட்டும். யார் என்றே தெரியாத ஒரு நபரை கற்பனையாகவே உருவாக்குகிறார்கள். இந்த வழக்கில், சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று நானே மனுதாக்கல் செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.
எனக்கு அதுதான் வேலையா
அவர் அப்பா விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. ஏதோ ஒரு பெண்மணி எங்கேயோ உட்கார்ந்து கொண்டு, ஃபேஸ்புக்கில் என்னைப் பற்றி அவதூறாக எழுதிக் கொண்டிருக்கிறார். அதை சிலர் எடுத்து வைத்துக் கொண்டு பேசி வருகிறார்கள். எனக்கு அதுதான் வேலையா?

மதம் மாறுகிறவர்களைக் கொல்வது என்றால்
 மதம் மாறுகிறவர்களை எல்லாம் கொலை செய்ய வேண்டும் என்றால், நாட்டில் எத்தனை பேரைக் கொல்வது? எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. பா.ஜ.கவில் துடிப்போடு செயல்படுபவர்கள் யார் என்பதை பார்த்து வைத்துக் கொண்டு, விமர்சனம் செய்கிறார்கள்.

திலீபன் யார்.. தமிழச்சி யார்
எனக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவுகளைப் போட்ட, திலீபன் யார் என்பதை விசாரித்தபோது, நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. அவரைத் தாக்கினார்கள் என்றால், காயம் இருக்க வேண்டாமா? காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டியதுதானே? தமிழச்சி என்பவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்; பிரான்சில் இருக்கிறார் என்கிறார்கள். என்னை மட்டும் இவர்கள் மையப்படுத்தி பேசுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இதை பா.ஜ.கவுக்கு எதிராகக் கொண்டு செல்லும் முயற்சியாகவே பார்க்கிறேன். கட்சி வேலை பார்க்கவே எங்களுக்கு நேரமில்லை.

ராம்குமார் மரணத்திற்கும் நான்தான் காரணமா
சுவாதி என்ற பெண் மதம் மாறினாரா இல்லையா என்பதுகூட எனக்குத் தெரியாது. ஒரு பெண்ணை பொது இடத்தில் கொல்வது என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒரு செயல். அப்படித்தான் நானும் அதிர்ச்சியடைந்தேன். ஜெயிலில் ராம்குமார் செத்துப் போனதுக்குக்கூட நான்தான் காரணம் என்றுகூட சொல்வார்கள். அவரை சிறைக்குள் கொல்லக் கூடிய அளவுக்கு நான் பெரிய ஆளா?

அமைச்சர்களால் கூட செய்ய முடியாது
ஆளுங்கட்சி அமைச்சர்களால்கூட இப்படிச் செய்ய முடியாது. நான் கஞ்சா விற்பனை செய்பவன் என்றெல்லாம் எழுதுகிறார்கள். அரசியலில் ஆயிரம் சொல்வார்கள். எனக்கு எதிராக ஆதாரம் இருந்தால், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும் என்றார் கருப்பு முருகானந்தம்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.