திருவாரூர் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட அரசு போக்குவரத்து கழக ஊழியர் நாகராஜனின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. மேலும் டெப்போ மேனேஜர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள செம்படவன்காட்டை சேர்ந்தவர் நாகராஜன். பட்டுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக டெப்போவில் கணக்காளராக பணியாற்றி வந்தார். முன்விரோதம் காரணமாக அரசு பஸ் டெப்போ கிளை மேலாளர் ரங்கராஜன், டிரைவர் பாஸ்கர், கண்டக்டர் சின்னையன் ஆகியோர் நாகராஜனை கடந்த மாதம் தாக்கி கீழே தள்ளிவிட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்வதாக டைரியில் எழுதி வைத்துவிட்டு கடந்த 28ம் தேதி வீட்டில் தூக்கிட்டு நாகராஜன் தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார், நாகராஜனை தற்கொலைக்கு தூண்டியதாக டெப்போ மேனேஜர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை முடிந்து நாகராஜன் உடல் நேற்று முன்தினம் செம்படவன்காடு கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டெப்போ மேனேஜர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து பணிநீக்கம் செய்யும்வரை அடக்கம் செய்யமாட்டோம் என்றனர். முதலில் டிஎஸ்பி (பொ) தினகரன், நள்ளிரவில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் உதயகுமார் மற்றும் வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காண முடியவில்லை.
நேற்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. காலையில் அங்கு வந்த அதிமுக பேரூராட்சி முன்னாள் தலைவர் அருணாசலம், உடலை அடக்கம் செய்ய வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நாகராஜன் தற்கொலைக்கு காரணமான 3 பேரையும் போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் 3 பேரையும் கைது செய்ய வேண்டுமென நாகராஜன் உறவினர்கள் வலியுறுத்தினர். அப்போது ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சிவக்குமாரிடம் போனில் தொடர்பு கொண்டு கலெக்டர் நிர்மல்ராஜ் பேசினார். அதில் நாகராஜன் தற்கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அவரது உடலை அடக்கம் செய்யுங்கள் என்றார். இதையடுத்து நேற்று மாலை நாகராஜன் உடலுக்கு இறுதி சடங்கு செய்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்து சிவக்குமார் மேலும் கூறுகையில், அரசுத்துறையில் பணியாற்றும் பெரும்பாலானோர் உயர் அதிகாரிகளின் நடவடிக்கையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியின அலுவலர்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.