வேலியே பயிரை மேய்ந்தது - ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.83 லட்சம் கொள்ளை: ஊழியர்கள் 3 பேர் கைதுஏ.டி.எம். மையங்களில் செலுத்தப்படும் பணத்தை ஊழியர்களே ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ள சம்பவம் வங்கி அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனங்களே மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் பலத்த பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய காவலர் கள் உதவியுடன் வேன்களில் பணத்தை பத்திரமாக எடுத்துச் சென்று நிரப்புவது வழக்கம். இதற்காக வங்கிகளிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொள்ளும்.

பாதுகாப்பு நிறுவனங்கள், தங்களது வாகனங்களிலேயே இந்த பணத்தை எடுத்துச் சென்று, ஏ.டி.எம். மையங்களுக்கு செல்வார்கள்.

வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தியே வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பது போல, ஏ.டி.எம். எந்திரத்தில் மொத்தமாக பணம் போடுவதற்கும் தனியார் நிறுவனங்கள் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி வருகின்றன.

இந்த ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்தால் மட்டுமே ஏ.டி.எம். எந்திரத்தை திறக்க முடியும். இந்த எண் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தெரிந்திருக்காது.

ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியில் நம்பிக்கையான சில நபர்களை மட்டுமே தனியார் நிறுவனம் பணியில் அமர்த்தி இருக்கும். அவர்களுக்கே ரகசிய குறியீட்டு எண் தெரிந்திருக்கும்.

ஏ.டி.எம். மையங்களுக்கு லட்சக்கணக்கான பணத்தை பாதுகாப்புடன் எடுத்துச் சென்று இவர்களே கவனமுடன் நிரப்புவார்கள்.

இந்நிலையில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இதுபோன்ற பணியில் இருந்த தனியார் நிறுவன ஊழியர்களே லட்சக்கணக்கான பணத்தை சுருட்டியுள்ளனர்.

ஏ.டி.எம். மையங்களில் செலுத்தப்படும் பணத்தை இந்த ஊழியர்களே ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் வங்கி அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

சென்னை ஆவடி டேங்க்பேக்டரி பகுதியில், குறிப்பிட்ட 3 ஏ.டி.எம். எந்திரங்களில், ரூ.42 லட்சம் பணம் அபேஸ் செய்யப்பட்டிருந்தது. இதனை கடந்த ஜூன் மாதம் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் பணியை செய்து வந்த ‘‘ரைட்டர்ஸ் சேப்கார்டு’’ என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதில் தங்களது நிறுவனத்தில் பணியாற்றி வந்த டில்லிகுமார் என்ற வாலிபரே ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி இந்த பணத்தை எடுத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து டில்லி குமாரை போலீசார் தேடி வந்தனர். கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த டில்லிகுமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், டில்லிகுமார் தனியார் நிறுவனம் சார்பில் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வந்தது தெரிய வந்தது.

இதற்கான ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து வைத்திருந்த டில்லிகுமார், ஏ.டி.எம்.மில் பணத்தை போட்டு விட்டு, பின்னர் திரும்பி வந்து ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி ரூ.42 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.

டில்லிகுமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், திருவள்ளூரிலும், 4 ஏ.டி.எம். மையங்களில் ரூ.27 லட்சம் பணத்தை கொள்ளையடித்திருப்பதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் இவர் சென்னை மற்றும் திருவள்ளூரில் ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.69 லட்சம் பணத்தை சுருட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது. கைதான டில்லி குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி ரூ.14 1/2 லட்சத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை தாமரை நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்.பி.ஐ., யூனியன் வங்கி உள்பட 3 வங்கிகளுக்கு சொந்தமான 20 ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது.

போளூர் சேத்துப்பட்டு அருகே உள்ள கண்ணனூரை சேர்ந்த டில்லிபாபு மற்றும் வேலு ஆகியோர் இந்த நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர். ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை இவர்கள் செய்து வந்தனர்.

இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் நிரப்பப்படும் பணம் குறித்து வங்கி ஊழியர்கள் தணிக்கை செய்தனர். அப்போது, ஏ.டி.எம்.களில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

பணம் நிரப்பும் ஊழியர்களே ஏ.டி.எம்.களில் நிரப்பிய பணத்தை ரகசிய குறியீட்டு பயன்படுத்தி கொள்ளையடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், டெல்லிபாபு, வேலு ஆகி யோர் சிக்கினர். இவர்கள் பணத்தை நிரப்பிவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து, ரகசிய எண்ணை பயன்படுத்தி கடந்த 2 மாதங்களாக தங்களது கட்டுப்பாட்டில் இருந்த 20 ஏ.டி.எம்.களிலும் பணத்தை எடுத்து கைவரிசை காட்டி உள்ளனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.களில் தொடர்ந்து அதிகளவு பணத்தை கையாடல் செய்துள்ளனர்.டெல்லிபாபுவும், வேலுவும் இதுவரை சுமார் ரூ.14 லட்சத்தை எடுத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் ஆறுமுகம், திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் சில ஊழியர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிந்த வந்துள்ளது.

இதுதொடர்பாக போலீ சார் டில்லிபாபு, வேலு ஆகியோரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.