பக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு அவசியம்: நரம்பியல் நிபுணர் கருத்து!பக்கவாதத்துக்கான அறிகுறிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் என்று நரம்பியல் நிபுணர் அ.வேணி தெரிவித்தார்.

உலக பக்கவாத தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 29-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாதத்தை குணப்படுத்த முடியும் என்பதே நிகழாண்டு பக்கவாத தினத்தின் கருவாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்கவாத பாதிப்பு குறித்து திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நரம்பியல் துறை உதவிப் பேராசிரியரும் நரம்பியல் நிபுணருமான வேணி கூறியதாவது:

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டாலோ அல்லது ரத்தக் குழாய் வெடித்து ரத்தம் மூளைக்குள் கசிந்தாலோ பக்கவாதம் ஏற்படுகிறது. ஒரு பக்கமாக கை, கால் செயலிழத்தல், ஒரு பக்கமாக வாய் கோணல் ஏற்படுதல், பேச முடியாமல் போதல், பேச்சில் தடுமாற்றம், திடீரென ஒரு பக்கமாக கை, கால்களில் உணர்ச்சி குறைதல், ஒரு கண்ணில் பார்வை மறைதல், முற்றிலும் பார்க்க முடியாமல் போதல் அல்லது இரட்டையாக தெரிதல், நடையில் திடீர் தள்ளாட்டம், திடீர் விக்கல் ஏற்பட்டு சாப்பிடும்போது புரை ஏறுவது, திடீர் தலைசுற்றல் ஏற்பட்டு நினைவு இழப்பது ஆகிய அறிகுறிகளில் எது தென்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல், உடனடி யாக நரம்பியல் நிபுணரின் ஆலோச னையைப் பெறுவது அவசியம்.

இந்த அறிகுறிகளை அலட்சி யப்படுத்துவதால், இந்தியாவில் ஆண்டுதோறும் 48 லட்சம் பேர் பக்க வாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். 15 சதவீதத்தினர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், 88 சதவீதம் பேர் ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும் பக்கவாதத்துக்கு ஆளாகின்றனர்.

காரணங்கள் என்ன?
பக்கவாதம் ஏற்பட உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், நீரிழிவு நோய், இதய நோய்கள், புகைப் பழக்கம், மது அருந்துதல், உடல் பருமன், உடலளவில் குறைவாக வேலை பார்த்தல், தூக்கமின்மை ஆகியவை பிரதான காரணம். இவற்றுடன் வயது அதிகமாகும்போது பக்கவாத பாதிப்பு நேரிடுவதற்கான வாய்ப்பும் அதிகம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை 3 மணி நேரத்தில் இருந்து நான்கரை மணி நேரத்துக்குள் மூளை நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

சிகிச்சைக்குப் பிறகு
பக்கவாத சிகிச்சைக்குப் பிறகு, மது, புகைப் பழக்கம் இருக்கக்கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். இறைச்சிகளை தவிர்த்து காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் அப்பளம், ஊறுகாய் ஆகியற்றைத் தவிர்க்க வேண்டும். உணவிலும் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தி இந்து தமிழ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.