உஷாரய்யா உஷாரு... அடுக்கு மாடிக்குடியிருப்பில் தங்கியிருக்கும் இளம் தம்பதிகள் உஷாரு..அந்த இளைஞரும், இளம் பெண்ணும் ஒரே தனியார் பள்ளியில் கல்வி போதிக்கும் பணியில் இருந்தார்கள். அப்போது அவர்களுக்குள் காதல் அரும்பியது. அவர்களது காதலுக்கு அந்த பள்ளி நிர்வாகத்தால் பல விதங்களில் நெருக்கடி ஏற்பட்டதால் காதலர் முதலில் அந்த பணியில் இருந்து விலகினார்.

தனக்கு வேறு பள்ளியில் வேலை கிடைத்ததும், திருமணம் செய்துகொள்ளலாம் என்று காதலர் சொன்னார். ஆனால் காதலியோ வேலைக்காக திருமணத்தை தள்ளிவைக்கவேண்டாம் என்றாள்.

‘நான் பள்ளியில் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறேன். நான் படித்திருக்கும் சப்ஜெக்ட்டிற்கு அதிக மவுசு இருப்பதால், வீட்டில் டியூஷன் சொல்லிக்கொடுத்தும் பணம் சம்பாதிக்கலாம். அதனால் முதலில் திருமணம் நடக்கட்டும். அதன் பின்பு நீங்கள் வேலை தேடுங்கள்’ என்றாள். அவள் பார்க்க அழகாக இருப்பாள். அவர் சுமாரான தோற்றம் கொண்டவர்.

காதலரும் அதற்கு ஒப்புக்கொள்ள, அவர்கள் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்தோடு நடந்தது. அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு தனிக்குடித்தனம் சென்றார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பு வித்தியாசமானது. பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்லாத குடும்பத்தலைவிகள். சிலர் திருமணத்திற்கு பிறகு வேலையைவிட்டு விலகியவர்கள். அதனால் காலையில் தங்கள் வீட்டு வேலைகளை பார்த்துவிட்டு, பின்பு அடுத்த வீட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று நோட்டமிடுவார்கள். அவர்கள் அனைவரின் பார்வையுமே புதிதாக குடி வந்த அந்த ஆசிரியை வீட்டையே மேய்ந்தது.

கணவருக்கு வேறு பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. மனைவியும் ‘நீங்கள் அவசரப்பட்டு வேலை தேட வேண்டியதில்லை’ என்று கூறியதால், அவர் பொறுப்பான கணவராக வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தார். அவருக்கு நன்றாக சமைக்கத் தெரியும். வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, மனைவியை தினமும் பள்ளிக்கு ‘பைக்’கில் கொண்டு விடுவது, மீண்டும் அழைத்து வருவது போன்ற வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். மாலையில் மனைவியை அழைக்க செல்வதற்கு முன்னால், அவளுக்காக சுவையான சிற்றுண்டியும் தயாரித்துவிடுவார். அவர் சமைக்கும்போது சில நேரங்களில் மணம் பக்கத்து வீடு வரை பரவும்.

விஷயத்திற்கு வருவோம்! கணவர் இத்தனை வீட்டு வேலைகளை முகம் சுளிக்காமல் செய்வதை பக்கத்து வீட்டு பெண்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கற்பனை குதிரையை தட்டிவிட்டு கண்டபடி பேசத் தொடங்கினார்கள்.

‘அவள் அழகாக இருப்பதால், கணவரை அடிமையாக்கிவிட்டாள். நல்லா படித்தவரை வேலைக்கு போகவிடாமல் வீட்டிலே சமையல்காரர் ஆக்கிவிட்டாள்’ என்று முதல் திரியை கொழுத்திப்போட்டார்கள். ‘இப்படி ஒரு ஆள் நமக்கும் கணவராக வாய்த்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். வீட்டு வேலை எல்லாவற்றையும் அவரே கவனித்துக்கொள்வார்!’ என்று அடுத்த திரியை பற்ற வைத்தார்கள்.

அந்த நேரம் பார்த்து ஆசிரியையின் கணவருக்கு இரண்டு மூன்று நாட்கள் உடல்நலம் சரியில்லாமல் போனது. அப்போது அந்த ஆசிரியையை அழைத்து, ‘பாரு.. எப்போ பார்த்தாலும் வீட்ல ஏதாவது வேலையை செஞ்சுக்கிட்டே இருப்பார். ஓய்வில்லாமல் எல்லா வேலைகளையும் அவரே செய்ததால் உடல்பலகீனமாகி இப்படி ஆயிட்டார்..’ என்று அவளை குற்றம் சாட்டுவதுபோல் பேசினார்கள். அதோடு விடாமல், ‘கணவர் என்றால் ஆம்பிள்ளை மாதிரி இருக்கணும். வீட்டு வேலைக்காரன் மாதிரி இருந்தால் எந்த பொண்டாட்டி மதிப்பாள். பாவம், எதிர்காலத்தில் இந்த ஆள் கதி என்ன ஆகப்போகுதோ!’ என்று அவர் காதுபடவே பேசினார்கள்.

அந்த குடியிருப்பில் தொடர்ந்து வசித்தால், இரண்டு பேருக்குள்ளும் சண்டையை உருவாக்கி, விவாகரத்து வரை கொண்டு போய் விட்டுவிடுவார்கள் என்று பயந்த அந்த புதுமணத்தம்பதிகள், அதிரடியாய் இப்போது தனி வீடு தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் மனைவிக்கு ஒத்தாசையாக இருக்கும் கணவர் என்றால், பலர் கண்படாமல் பார்த்துக்குங்க!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.