தமிழக முதல்–அமைச்சர் உடல் நிலை பற்றி வதந்தி பரப்பிய சதீஷ்குமார், மாடசாமி ஆகியோர் கைதுமுதல்–அமைச்சர் உடல் நிலை பற்றி வதந்தி பரப்பிய 2 பேர் கைது சமூக வலைதளங்களை பயன்படுத்துவோருக்கு போலீஸ் எச்சரிக்கை

ஒருவர் தாடி வைத்து இருப்பதால் முஸ்லீம் வாலிபர் என்று என்னவேண்டாம்

முதல்–அமைச்சர் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்பவேண்டாம் என்று பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

வதந்திகள்
தமிழக முதல்–அமைச்சரின் உடல் நலம் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களும், கெட்ட நோக்கத்துடன் கூடிய வதந்திகளும் பரப்பப்படுகின்றன. இதுகுறித்து ஏராளமான புகார்கள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுக்கப்பட்டன. அந்த புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன்விசாரணை நடந்து வருகின்றன.

இதற்காக போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவின்படி, உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள், சைபர் கிரைம் நிபுணர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த தனிப்படை பிரிவுகளின் போலீஸ் அதிகாரிகள், வதந்திகளை பரப்பும் குற்றவாளிகளை தேடிக்கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர்.

அ.தி.மு.க. புகார்
இந்த தனிப்படை அதிகாரிகள், தொடர்ந்து சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர். கெட்ட நோக்கத்துடன் வதந்திகளை பரப்பும் நபர்களின் வலைதளங்களையும் கண்காணிக்கின்றனர்.

இந்தவகையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜி.கோவிந்தராஜ் புகார் மனு ஒன்றை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தார். அதில், சதீஷ்சர்மா என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து வதந்திகளை பரப்புவதாக கூறியிருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முகநூலில் வதந்தியை பரப்பியவர், நாமக்கல் மாவட்டம், தேவனாங்குறிச்சி, காந்திநகரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் சதீஷ்குமார் என்று கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். எம்.சி.ஏ. பட்டதாரியான அவர், ஐ.டி. நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

மாடசாமி
அதேபோல, நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்கமல் என்பவர் கடந்த 8–ந்தேதி போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை, பாண்டியன் நகரை சேர்ந்த பிச்சைகனி என்பவரது மகன் மாடசாமி, தன் பெயரில் ஒரு வலைதளம் தொடங்கி முதல்–அமைச்சர் உடல் நலம் குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டதை கண்டுபிடித்தனர்.

அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவரும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்டுள்ள சதீஷ்குமார், மாடசாமி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (இரு பிரிவினர்களிடையே கலவரம் ஏற்படும் என்று நன்கு தெரிந்திருந்தும் வேண்டுமென்றே இருபிரிவினர்களிடையே ஆத்திரமூட்டும் வதந்திகளை பரப்பி கலவரத்தை உருவாக்குதல்), 505(1)(பி) (பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களை குற்றச் செயல்களை செய்ய தூண்டும் விதமாக உள்நோக்கத்துடன் செயல்படுதல்) 505(1)(சி) (இருபிரிவினரிடையே மோதலை உருவாக்குதல்), 505(2) (இருபிரிவினரிடையே பகையை ஏற்படுத்தும் விதமாக வதந்திகளை பரப்புதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர், சம்பந்தப்பட்ட குற்றவியல் கோர்ட்டில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

7 ஆண்டு ஜெயில்
முதல்–அமைச்சர் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பியதாக மொத்தம் 43 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளையெல்லாம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். சமூக வலைதளங்களில் வதந்திகள், பொய்யான தகவல்கள் வெளியிடும் குற்றச்செயல்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

எனவே சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் முதல்–அமைச்சரின் உடல் நலம் குறித்து தவறான, உண்மையில்லாத, கெட்ட எண்ணத்துடன் கூடிய வதந்திகளை பரப்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதையும் மீறி இந்த குற்றத்தை செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.