ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்வுஉத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தீவிரவாதிகள் செய்த சதியா? என முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது.

ரயில் விபத்து:

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள புக்ரயான் என்கிற இடத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். சுமார் 100 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கான்பூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

மீட்பு பணிகள்:

விபத்து நிகழ்ந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 300 பேர் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் விபத்தில் சிதறிக்கிடந்த ரயில்பெட்டிகளுக்கு இடையே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்பு பணி நிறைவடைந்துள்ளதாகவும் விபத்தில் சிக்கிய அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி அனில் சக்சேனா தெரிவித்தார். விபத்துக்கு மனித தவறுகள் காரணம் என்று தெரிய வந்தால் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் இரங்கல் - நிதியுதவி:

விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர், ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணி துரிதகதியில் நடந்ததாகவும் அவர் கூறினார்.

உத்தரபிரதேச அரசு நியுதவி:

விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச அரசு சார்பில் 5 லட்ச ரூபாயும், ரயில்வே நிர்வாகம் சார்பில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீட்டுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு  ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்கா நேரில் சென்று மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நாளை நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வார் எனவும் அவர் தெரிவித்தார்.

விபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், கான்பூருக்குச் சென்று விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

விபத்தா? சதிச் செயலா?

இதற்கிடையே, இந்தூர் - பாட்னா ரயில் விபத்துக்கு பின்னர் சதிச்செயல் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் விரிசலை ஏற்படுத்தி தீவிரவாதிகள் நிகழ்த்திய சதிச் செயலாக இருக்கலாம் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்வேத்துறைக்கும் மத்திய அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சதிச் செயல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.