துபாயில் மறைந்த கராச்சி தர்பார் உணவகங்களின் உரிமையாளர் ஒரு தமிழர் !துபாய், ஷார்ஜா, அஜ்மான் ஆகிய எமிரேட்டுகளில் செயல்படும் புகழ்பெற்ற 28 சங்கிலித் தொடர் கராச்சி தர்பார் உணவகங்களின் உரிமையாளர் 'ஹாஜி சாப்' என்று அழைக்கப்பட்ட ஹாஜி முஹம்மது பாருக் அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று தனது 70 வயதில் வஃபாத்தானார்கள்.

தனது இளம் வயதில் பழ வியாபாரியாக, ஆட்டோ ரிக்ஷா டிரைவராக, கல்யாண வைபவ சமையல்காரராக ஏழ்மையுடன் போராடியவருக்கு எதிர்பாராதவிதமாக 1967 ஆம் ஆண்டு துபை வழியாக ஐரோப்பா செல்லும் ஒரு கப்பலில் தலைமை சமையல் கலைஞராக வேலைக்கு சேரும் நிலை எற்பட்டது என்றாலும் கப்பல் கேப்டனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் துபையிலேயே தரையிறங்க வேண்டியதாயிற்று.

துபை தேரா பகுதியில் 'திப்பு சுல்தான்' என்ற பெயரில் இயங்கிய இந்தியருக்கு சொந்தமானதொரு உணவகத்தில் பணியாற்றத் துவங்கியதுடன் தனது வருமானத்தில் இயன்றளவு சேமிக்கவும் துவங்கினார். இறுதியில் 'திப்பு சுல்தான் உணவகம்' நஷ்டமைந்து இழுத்துப்பூட்டப்படவிருந்த நிலையில் 60,000 திர்ஹத்திற்கு அதே உணவகத்தை 1973 ஆம் ஆண்டு விலைபேசி வாங்கினார் என்றாலும் அவரிடமிருந்த சேமிப்பு 20,000 மட்டுமே. மீதத்தொகையை சிறிது சிறிதாக செலுத்தி கடனை அடைத்தார்.


திப்பு சுல்தான் உணவகத்தை கராச்சி தர்பார் என பெயர் மாற்றி தொடர்ந்து நடத்தத் துவங்கிய பின் அவருடைய வாழ்க்கை சக்கரம் ஏற்றம் பெற கடந்த 43 ஆண்டுகளில் 28 உணவகங்களாக வளர்ச்சியடைந்து இயங்கி வரும் நிலையில் 29 வது உணவகமாக கராச்சி கிரில்ஸ்' எனும் உயர்தர உணவகத்தை ஜூமைரா மெர்கட்டோ மால் அருகில் எதிர்வரும் அமீரக தேசிய தினமான டிசம்பர் 2 ஆம் நாள் துவக்கவிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவருடைய உழைப்பால் உயர்ந்த இந்நிறுவனம் தினமும் ஒரு விமான நிறுவனத்திற்கு 2000 'நான் ரொட்டிகளை' தயாரித்து வழங்கி வருகிறது. மேலும் லண்டன் நகரில் ஒரு உணவகம் துவங்கிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும் அல் கிஸஸ் பகுதியில் இந்நிறுவனத்திற்கு சொந்தமாக 12 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றும் உணவகம் சார்ந்த பணிகளுக்காகவே கட்டப்பட்டு வருகிறது.

மேலும் தனது தினசரி வருமானத்தில் 1 சதவிகிதத்தை தினமும் தர்ம காரியங்களுக்காக தனியாக எடுத்து வைத்து செலவிட்டு வந்தவர் தனது ஒரே மகன் அயாஸ் அவர்களையும் இப்பழக்கத்தை தொடர்ந்திட செய்துள்ளார். மேலும் கராச்சி நகரில் 14 மில்லியன் திர்ஹம் செலவில் 300 படுக்கை வசதியுடன் 12 மாடி  'கிட்னி' சிறப்பு சிகிச்சை மருத்துவமனை ஒன்றும் கட்டுமானத்தில் உள்ளது.

மேற்படி வரலாற்றுச் சுருக்கத்தின் சொந்தக்காரர் நமது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகரை பூர்வீகமாக கொண்ட தமிழர் என்பதும், 1947 ஆம் ஆண்டு நடந்த நமது தேசப்பிரிவினையின் போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிலிருந்து தவறான புரிதலின் காரணமாக பல்லாயிரக்கணக்காக மக்கள் படும் சிரமங்களுடன் அங்குமிங்கும் புலம்பெயர்ந்தார்கள் அல்லவா அந்த தூயரத்தில் கைக்குழந்தை ஹாஜி முஹம்மது பாருக் அவர்களையும் உடன் தூக்கிச் சென்ற அவரது பெற்றோரும் அடங்குவர்.

பாகிஸ்தானை தேசமாகக் கொண்டபோதும் அவரது குடும்பத்தினரில் பலர் சுமார் 70 வது வருடத்தை தொட்டுவிட்ட நிலையிலும் இன்றும் தமிழ் பேசக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.