கருப்புப்பணத்தை அரசே உருவாக்கிறது.நாட்டில் கருப்புப் பணத்தை தனிமனிதர்கள் மட்டும்தான் உண்டாக்குகிறார்களா ? இதில் அரசுக்குப் பங்கு இல்லையா?
நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கருப்புப் பணத்தை உருவாக்குவதில் அல்லது உருவாக்கும்படி மக்களைத் தூண்டுவதில் அல்லது அந்த வழியை நோக்கி மக்களைத் திருப்பி விடுவதில் அரசுக்கும் பங்கு இருக்கிறது.

சிந்தனைக்காக , சுருக்கமாக ஒரு சில வரிகளில்...

ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பணம் அதிகமாக ஈடுபடுத்தப்படுகிறது அல்லது ரியல் எஸ்டேட் கறுப்புப் பணம் உருவாவதை ஊக்குவிக்கிறது ( Generating Black Money) என்றெல்லாம் குற்றம் சாட்டப்படுகிறது. உண்மைதான். ஆனால் மனிதர்களின் இந்த செயலுக்கு அடிப்படைக் காரணம் யார்? மனிதர்களா? அரசாங்கமா? இந்த செயலில் அரசாங்கத்துக்குப் பங்கே இல்லையா? நிச்சயம் இதற்கு முழுமுதல் காரணமே அரசுதான்.

உதாரணமாக , வழிகாட்டும் மதிப்பு என்றும் சந்தை மதிப்பு என்றும் நிலங்களுக்கு விலைகளை வித்தியாசப்படுத்தி இருப்பது யார்? தனிமனிதனா? அரசாங்கமா? இவ்வாறு நிலைமை இருப்பது அரசுக்குத் தெரியுமா தெரியாதா? அப்படியானால் விலைகளை குறைத்துப் போட்டு பத்திரப் பதிவு செய்துகொள்ளும்படி மனிதர்களுக்கு வழிவகை செய்திருப்பதின் உண்மைக் குற்றவாளியார்?

ஒரு குறிப்பிட்ட இடத்தின் சந்தை விலையை சரியாகத் தெரிந்துகொள்ளாமல் கண்மூடித்தனமாக வழிகாட்டும் மதிப்பு என்கிற ஓட்டையை உருவாக்கி வைத்திருப்பதன் காரணமாகவும் கருப்புப்பணம் உருவாகிறது என்பதை அரசு அறியவேண்டாமா? அதை சீர்திருத்த நடவடிக்கை எடுக்கவேண்டாமா? பத்திரப் பதிவுத் துறையில் ஊழல் என்கிற ஊற்று உருவாகும் இடமே இந்த மதிப்பீட்டுக் குறைபாடுதான் என்பது அரசுக்குத் தெரியாதா?

ஒரே சர்வே நம்பருக்கு ஒரே விலை என்ற கண்மூடித்தனமான நிலமதிப்பீடுகளில் நியாயம் இருக்கிறதா? உதாரணாமாக இசிஆர் சாலையில் அதை ஒட்டி இருக்கும் ஒரு சர்வே எண்ணில் உள்ள இடம் அதே சர்வே நம்பரில் இருக்கும் ஒரு பரந்த அளவு நிலத்தின் மூலை முடுக்கு நிலத்தின் மதிப்புக்கு பத்திரப்பதிவு  மதிப்பீட்டு முறையில் சமமாகுமா? இது நியாயமா?

இதை சரி செய்யவேண்டியது அரசின் பணி அல்லவா? இவ்வாறுள்ள நிலையில் இந்த நிலைமைகளில் இருந்து தப்பிக்க தனி மனிதர்கள் மதிப்புகளைக் குறைத்து அல்லது கருப்பு வெள்ளை என்ற  முறையில் கொடுக்கல் வாங்கல் செய்துகொள்வதால் கருப்புப் பணம் உருவாகிறதே. அவ்வாறானால் கருப்புப் பணத்தை உருவாக்குவதில் அரசுக்கும் பங்கு இருக்கிறது என்றுதானே பொருள்?

அடுத்ததாக, அரசால் கருப்புப்பணம் உருவாக்கப்படுவது  மிகவும் அநியாயமான நேர்முக மறைமுக வரிவிகிதங்களால் என்ற கருத்தின் அடிப்படையில் தொழில் வரி, உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, விற்பனை வரி, வருமான வரி , மாநில நுழைவு வரி, வாட்  என்று பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. இவற்றில் மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து வரி விதிப்பதற்காக பெரும் அல்லல்களுக்கிடையே இப்போதுதான் ஜி எஸ் டி வரி மசோதா நிறைவேறி இருக்கிறது. ஜிஎஸ்டி வரியிலும் முதலில் கூறப்பட்ட வரி விகிதங்கள் இப்போது கூடுதலாக மாற்றங்கள் செய்யப்பட விவாதங்கள் நடை பெறுகின்றன. அவை அமுலுக்கு வரும்போது அவற்றின் சாதக பாதகங்களை அலசலாம்.

வருமானம் ஈட்டுகிறவர்களுக்கு வரி போட வரிந்து கட்டும் அரசு,  சில தொழில்கள் செய்யும்போது வருமானத்துக்கு பதிலாக எதிர்பாராத  நஷ்டம் வருகிறதே அவர்களுக்காக ஏதாவது மானியம் வழங்குகிறதா என்ற கேள்வியை முதலில் எழுப்பிவிட்டு இதைப் பார்க்கலாம்.

ஒருவர் முதலீடு செய்து, உழைத்து, ஆட்களை வைத்து நிர்வாகம் செய்து வருமானம் ஈட்டினால் அதை வாரிப் போட்டுக் கொள்ள வரும் அரசு,  அதே தொழிலில் அவருக்கு நஷ்டம் வந்தால் நடந்து கொள்வது என்ன? மாதவி என்றால் மடியில் வா! கண்ணகி என்றால் காணாமல் போ! என்ற  கொள்கைதான். கொள்ளுக்கு வாய் திறக்கும் அரசுக் குதிரை, கடிவாளத்தைக் கண்டால் வாயை மூடிக் கொள்கிறதே.    இவ்வளவு ரூபாய் உங்களுக்கு வருமானம் வந்திருகிறது அதற்கு வரி கட்டுங்கள் என்று சொல்லும் அரசு , இவ்வளவு ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது இந்தா!   பிடியுங்கள் என்று ஏதாவது தருகிறதா?(விவசாயக் கடன் தள்ளுபடியை இதில் இணைக்கக் கூடாது) .

இன்று அறிவிக்கப்பட்டு இருக்கும் 500/= & 1000/= ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்த  பின் , கைகளில் உள்ள அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத் தொகைகளுக்கு ஏற்ப அரசு நிர்ணயித்துள்ள வரி மற்றும் அபராதம்  ஆகிய பட்டியலை   பார்வை இடுவது பலனளிக்கும்.
ஒருவர் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு நல்ல நோக்கத்துக்காக சிறுகச் சிறுக சேமித்த பணம் ஐந்து இலட்சம் என்றால் அந்தப் பணத்தை இழந்துவிடாமல் இருக்கவேண்டுமென்றால் அதில் எழுபத்தைந்து ஆயிரம் ரூபாயை அரசுக்கு அழ வேண்டும் என்கிற நிலை ஏற்படுத்தப்பட்டு இருப்பது பெரிய அநியாயம் அல்லவா? இந்த அநியாயம் மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள்  நல அரசால் அரங்கேறுவது அதைவிட அநியாயம் அல்லவா?

இலஞ்சம் , ஊழல் செய்து பணம் தேடுபவர்களைப் பிடித்து அவர்களிடம் இருக்கும் கறுப்புப் பணங்களை கைப்பற்ற வக்கற்ற அரசு சாமான்ய மக்கள் உழைத்து பொருளீட்டும் பணத்துக்கு உயர்ந்தபட்ச வரிவிகிதம் வைத்து வசூலிப்பதால் வியர்வையின் விலை தெரிந்தவர்கள் அவர்கள் சிந்திய வியர்வையினால் விளைந்த  பணத்தை அரசுக்குத் தெரியாமல் பதுக்கும் நிலையை அரசே ஏற்படுத்திவிடுகிறது.

நாம் உழைத்து தேடிய பணத்தை அரசுக்கு ஏன் கட்டவேண்டும் என்ற உரிமையான எண்ணத்தின் வெளிப்பாடே சாதாரண மக்களின் வரி ஏய்ப்பு செயல்பாடுகள்.

அதே நேரம் , குறைந்த வரிவிகிதங்கள் விதிக்கப்பட்டால் அனைவரும் மனமுவந்து அந்த வரிகளை கட்டிவிடுவார்கள். இல்லாவிட்டால் உழைப்பதிலோ செல்வம் தேடுவதிலோ மக்களுக்கு உற்சாகம் வராது. பாடுபட்டு பணம் சேர்ப்பது அரசுக்கு வரிகட்டவா என்பதே மக்களின் எண்ணத்தில் இருப்பிடம் போட்டு அமரும். அத்துடன் அப்படி பொருளீட்டி அதை ஏன் வரியாகக் கட்டவேண்டும் நாமே மறைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணமும் ஏற்படுவது இயற்கைதானே! அப்படியானால் கறுப்புப் பணத்தை உருவாக்குவது அரசுதானே!

குறைந்த வரி விகிதங்கள் விதிக்கப்பட்டால், உயர்ந்த வரி விகிதங்களின் மூலம் வரும் வருமானத்தைவிட அரசுக்கு நிச்சயம் வருமானம் வரும் என்பது ஒரு பக்கம் இருக்க கெடுபிடி, நெருக்கடி அரசு அதிகாரிகளின் சோதனை போன்ற  அத்துமீறல்களுக்கும் அவர்களுக்கு அழும் இலஞ்சம் போன்றவைகளுக்கும் இடம் இருக்காது. இத்தகைய ஊழல்களும் கறுப்புப் பணத்தை உண்டாக்குவதால் அதற்கும் காரணம் அரசே.

விமான நிலையங்களில் சுங்கக் கட்டணம் நியாயமாக இருந்தால் மகிழ்வோடு கட்டிவிட்டு மக்கள் வருவார்கள். மறைத்துக் கொண்டுவரும் கள்ளக்கடத்தலுக்கு அவசியம் இருக்காது.

தவறு செய்யும்படி, மக்களைத் தூண்டுவது அரசின் கெடுபிடிகளே!
தற்சமயம் அமுலில் இருக்கும் வருமான வரி விகிதங்கள் சுருக்கமாக,
அறுபது வயதிற்குட்பட்டவர்களுக்கான வருமான வரி விகிதங்கள்

ஆண்டு வருவாய் ரூ. 2,50,000 வரை : வருமானவரி இல்லை
ஆண்டு வருவாய் ரூபாய் 2,50,001 முதல் 5,00,000 வரை : 10 விழுக்காடு
ஆண்டு வருவாய் ரூபாய் 5,00,001 முதல் 10,00,000 வரை : 20 விழுக்காடு
ஆண்டு வருவாய் ரூபாய் 10,00,000 மேல்  : 30 விழுக்காடு

இதற்குமேல் சர்சார்ஜுகளும் இருக்கின்றன.

அறுபது வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விகிதங்கள்
ஆண்டு வருவாய் ரூபாய் 3,00,000 இலட்சம் வரை  : வருமான வரி இல்லை
ஆண்டு வருவாய் ரூபாய் 3,00,001 முதல் 5,00,000 இலட்சம் வரை : 10 விழுக்காடு
ஆண்டு வருவாய் ரூபாய் 5,00,001 முதல் 10,00,000 இலட்சம் வரை: 20 விழுக்காடு
ஆண்டு வருவாய் ரூபாய் 10,00,000 இலட்சத்திற்கு மேல்  : 30 விழுக்காடு

எண்பது வயதிற்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விகிதங்கள்
ஆண்டு வருவாய் ரூபாய் 5,00,000 இலட்சம் வரை  : வருமான வரி இல்லை
ஆண்டு வருவாய் ரூபாய் 5,00,001 to 10,00,000 இலட்சம் வரை : 20 விழுக்காடு
ஆண்டு வருவாய் ரூபாய் 10,00,000 இலட்சத்திற்கு மேல்  : 30 விழுக்காடு

அரசுத்துறைகள், வங்கிகள், கல்வித்துறை  போன்றவைகளில் வேலை செய்து மாதச்சம்பளம் வாங்குபவர்களின் வருமானத்துக்கு யேற்றபடி TDS ( TAX DEDUCTION AT SOURCE) என்ற முறையில் சம்பளம் தரும்போதே பிடித்தம் செய்யப்பட்டு செலுத்தப் பட்டுவிடுகிறது.

ஆனால் வணிக நிறுவனங்கள் , பெரிய கார்பரேட் கம்பெனிகளில்தான் வரி ஏய்ப்பு என்பது பெருமளவில் நடைபெறும் சாத்தியம் இருக்கிறது.

இதற்குக் காரணம் மேற்கண்ட நிறுவனங்களும் வணிகர்களும் முதலீடு திரட்டி, நிர்வாகம் செய்து,  நேரம் காலம் பார்க்காமல் உழைத்து சம்பாதிக்கிறார்கள். அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போல கால அளவு இவர்களது உழைப்புக்குக் கிடையாது. திட்டமிடுதல் முதல் இரவு பகல் உழைக்கிரவரை பணத்தைத் தேடுகிறார்கள்.

இவ்வாறு சம்பாதிக்கும் பணம் , அதை சம்பாதிக்கும் தங்களுக்கே கிடைக்கவேண்டும் என்று அவர்கள் நினைப்பது இயற்கை. இந்த நிலைமையில் உயர்ந்த வரிவிகிதங்களை அரசு அமுல் படுத்தும் சூழலில்தான் வரி ஏய்ப்பு என்கிற  செயல் நடக்கிறது; கறுப்புப் பணம் உருவாகிறது.

வருமானத்தை  எந்தெந்த வகைகளில் எல்லாம் மறைத்து கணக்கு         ஜோடிக்கலாம் என்று   பார்த்துப் பார்த்து  கணக்கெழுதி சமர்ப்பிக்கும் ஆடிட்டர்களே திறமையாளர்கள் என்று பெயர் பெறுகிறார்கள்.

இரவு பகல் உழைத்து தேடிய பணத்தை அரசுக்கு வரியாக கொட்டிக் கொடுக்க மனித இயல்பு இடம் கொடுப்பதில்லை; அரசும் இறங்கி வந்து யதார்த்தத்தை உணருவது இல்லை. விளைவு? கணக்கில் வராத  கறுப்புப் பணம் .

எத்தனை முறை சொன்னாலும்  இந்த  அவலங்களுக்கெல்லாம் காரணம், அரசுதான். ஒரு நியாயமான விகிதத்தில் வரிவிதித்தால் மகிழ்வுடன் கணக்கை சமர்ப்பித்துவிட்டு  வரியையும் கட்டிவிட்டுப் போய்விடுவார்கள். அநியாயமான விகிதங்கள்- பாடுபட்டதை பறிக்கும் விதமாக அமைப்பதால்தான் வருமானத்தை மறைக்கும் நிலையும் அதனால் கறுப்புப் பணமும் உருவாகிறது. அரசுதான் கறுப்புப் பணத்தை உருவாக்க மக்களைத் தூண்டுகிறது.

இஸ்லாமிய நெறிமுறைகளின்படி ஜகாத் என்கிற ஏழைவரி ஆன்மீக முறையில் இறையச்சத்தோடு வசதி பெற்றவர்களிடம் இருந்து வசூலிக்கபடுகிறது. இதுவும் வருமானவரிதான் . இதன் விகிதம் 2.5 விழுக்காடுதான். பணம் படைத்தவர்கள் இந்த ஏழைவரியை இன்முகத்துடன் கொடுக்கிறார்கள் . இந்த முறையில் கறுப்புப் பணம் உருவாகாது  ஆன்மீக ரீதியில் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற எண்ணம் இங்கு விதைக்கப்பட்டு அமுலாகிறது.

ஆடிட்டர் கணக்குப் பார்த்தாலும் முப்பது விழுக்காடு அதற்கு மேலும் என்று வருகிறபோது சாதாரண மனிதன் பதுங்குகிறான்; பதுக்குகிறான். நான் உழைத்து சம்பாதிப்பது அரசுக்கு வரியாக  கட்டுவதற்குத் தானா? என்று தனிமனிதன் சிந்தித்தால் அதில் நியாயம் இல்லை என்று சொல்ல  முடியாது. அதிக  உழைப்பு,  அதிக வருமானம், அதிக வரி என்பதை மனித மனங்கள் ஏற்பதில்லை. இதன் விளைவே வருமானத்தை மறைக்கத் தொடங்கி கணக்கில்வராத பணம் குவிகிறது; கருப்புப் பணம் உருவாகிறது. இதற்கு அரசே காரணமாக அமைகிறது.  

LESS LUGGAAGE !  MORE COMFORT !  MAKE THE TRAVEL PLEASANT !

                                     
இப்ராஹீம் அன்சாரி
கல்லூரி முதல்வர்
எழுத்தாளர்
சமூக ஆர்வலர்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.