போபால் சிறைக் கைதிகள் போலி என்கவுண்டர் கொலைகளை கண்டித்து சென்னையில் SDPI கண்டன ஆர்ப்பாட்டம்
போபால் சிறைக் கைதிகள் போலி என்கவுண்டர் கொலைகளை கண்டித்து சென்னையில் SDPI கண்டன ஆர்ப்பாட்டம்

மத்தியபிரதேச மாநிலம் போபால் மத்திய சிறையிலிருந்த 8 சிமி அமைப்பை சேர்ந்த விசாரணைக் கைதிகள், போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்தும், நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று (நவ.02) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ஷஃபீக், சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர்கள் பாண்டித்துரை, ராயல் கரீம், அஹமது அலி மற்றும் மாவட்ட பொருளாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் முகமது ஹூசைன் கண்டன உரை நிகழ்த்தினார்.

அவர் தனது கண்டன உரையில்; “மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறையிலிருந்து 8 சிமி அமைப்பை சேர்ந்த விசாரணைக் கைதிகள் தப்பியதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் சில மணி நேரங்களில் காவல்துறையுடன் நடந்த மோதலில் அவர்கள் அனைவரும் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக மத்திய பிரதேச காவல்துறை அறிவித்துள்ளது.

சிறையிலிருந்து தப்பியது, பின்னர் அவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டது தொடர்பில் காவல்துறை வெளியிட்ட அறிக்கைகள், வெளியிடப்பட்ட வீடியோக்கள் அனைத்தையும் பார்க்கும் போது இது திட்டமிட்ட போலி என்கவுண்டர் தான் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை ஐ.ஜி மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உள்ளதும் போலி என்கவுண்டருக்கான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட அனைவரும் இன்றளவும் விசாரணைக் கைதிகளாகத் தான் இருக்கிறார்கள். அவர்கள் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டு வழக்கு இறுதிகட்டத்தை அடைந்து, அவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என விரைவில் விடுதலையாகவே வாய்ப்பு அதிகமிருந்த நிலையில் தான், அவர்கள் திட்டமிட்ட போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குப் பின் பெரும் சதி உள்ளது என்று என்கவுண்டரில் பலியானவர்களின் வழக்கறிஞர் கூறுவதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அதி உயர் ஏழடுக்கு பாதுகாப்பு, சிசிடி கண்காணிப்பு ஆகியவற்றுக்காகவே ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற போபால் மத்திய சிறையிலிருந்து, சிறைக்காவலர் ஒருவரை கொலை செய்துவிட்டு 8 சிமி அமைப்பினரும் போர்வையை கயிறுபோல் ஆக்கி அதில் ஏணி தயார் செய்து 32 அடி உயர மதில் சுவர் மற்றும் முள்வேலியை தாண்டி தப்பித்தார்கள் என்ற காவல்துறையின் அறிக்கை, நாடகத்திற்கான வசனம் போல் உள்ளது. அப்பாவிகளை கொலை செய்வதற்கான இந்த நாடகத்தில் அப்பாவி சிறைக்காவலர் ஒருவரும் பலியாக்கப்பட்டுள்ளார்.

சிறையிலிருந்து தப்பித்த சிமி அமைப்பினர் பயங்கரமான ஆயுதங்களை கொண்டு தாக்கியதால் அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டியதாயிற்று என்ற காவல்துறையின் அறிக்கை, அது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்ட அவர்கள் நிராயுதபாணிகளாக, வெட்ட வெளியில் நின்று கொண்டிருக்கும் காட்சியில் எங்கும் அவர்கள் ஆயுதம் வைத்திருந்ததாக காண முடியவில்லை. கொல்லப்பட்ட அனைவரும் புத்தம் புதிய ஆடை அணிகலன்களை அணிந்துள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் கூறுவது போல, அவர்களை விடுதலை செய்யப் போவதாக கூறி, புதிய ஆடைகளை அளித்து அவர்களை அழைத்துச் சென்று காவல்துறை இந்த நாடகத்தை திட்டமிட்டு அறங்கேற்றியிருக்கிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

இதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் இந்த என்கவுண்டர் படுகொலை தொடர்பாக எழுந்துள்ளது. ஆகவே, இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், சிமி உறுப்பினர்கள் சிறையிலிருந்து தப்பியது குறித்து மட்டும் விசாரித்தால் போதும், என்கவுண்டர் குறித்து விசாரிக்க தேவையில்லை என்ற மத்திய பிரதேச பாஜக அரசு தெரிவித்துள்ளது. அதேப்போல், இவ்விவகாரத்தில் ம.பி. போலீசார் மீது குற்றம் காணாதீர்கள். இது தேச பாதுகாப்பு தொடர்பானது என்ற மத்திய பாஜக அரசும் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் மாநில பாஜக அரசின் இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. அப்பாவிகளை கொலை செய்து தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க முயலும் இதுபோன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றமே, தனது கண்காணிப்பின் கீழ் உயர்மட்ட நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.