2.7 லட்சம் பேர் பின் தொடர்ந்த ஃபேக் ஐ.டி அம்புஜா சிமி… உண்மை என்ன?ஃபேஸ்புக்கில் 2.7 லட்சம் பின்தொடர்பாளர்கள் கொண்ட அம்புஜா சிமி என்ற பெண் ஐ.டி மிகப் பிரபலம். இதை படிக்கும் உங்களில் பலர், ஃபேஸ்புக்கில் அம்புஜாவை பார்த்திருக்கலாம். இரண்டு நாட்களுக்கு முன்புவரை இந்த ஐ.டி-யில் இருந்து ஏதாவது ஒரு பதிவு போட்டால் போதும், ‘சாட்டையடி பதிவு தோழி…’, ‘அருமையாகச் சொன்னீங்க’, ‘செம, நன்றி தோழி’ என சில நிமிடங்களில் கமென்ட்களும், வாழ்த்துகளும் பறக்கும். போட்டோ, போட்ட அடுத்த நொடியிலேயே லைக்குகள் பிச்சிக்கும். ஆண்கள் மத்தியில் பிரபலமாக இருந்த அம்புஜா ஐ.டி நேற்று முதல் முடக்கப்பட்டு உள்ளது. இன்றுகூட 80 ஆயிரம் பேர், ஃபேஸ்புக்கில் இந்த ஐ.டி-யைத் தேடியுள்ளனர். இதை முடக்கியதற்கான காரணம் என்ன தெரியுமா?

ஃபேஸ்புக்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அழகான பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய அம்புஜா சிமி என்ற ஐ.டி உருவாக்கப்பட்டு உள்ளது. தென்காசியைச் சேர்ந்த அம்புஜா சிமி, கேரளாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் வேலை பார்ப்பதாக அந்த ஐ.டி சொல்கிறது. சமூக அக்கறை பதிவுகள்… இயற்கையை ரசிக்கும் பதிவுகள்… இரண்டு நாட்களுக்கு ஒருமுறை போட்டோ மாற்றுவது… என சமூக வலைதளத்தில் அம்புஜா செம ஆக்டிவ். இதனால் இந்த ஐ.டி., சில காலங்களிலேயே மிகப் பிரபலமானது. இதன் விளைவாக 5,000 நண்பர்களைத் தாண்டி, இந்த ஐ.டி-க்கு 2.7 லட்சம் பின்தொடர்பாளர்கள் இருந்தனர். பின்தொடர்பாளர்களில் 90 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் ஆண்களே. அந்த ஐ.டி-யில் இருந்த பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்து… பல ஆண்கள், பல வருடங்களாக சாட் செய்து வந்துள்ளனர். தென்காசியைச் சொந்த ஊராகக் கொண்ட ஊடகவியலாளர் சிலருக்கு, அம்புஜா சிமி ஐ.டி மீது அவ்வப்போது சந்தேகம் வந்துள்ளது.

இந்த நிலையில், இது உண்மையான ஐ.டி-தான் எனக் காட்டுவதற்காக, அம்புஜா சிமியின் கணவர் என ரகுவரன் என்ற பெயரில் அக்கவுன்ட் ஒன்றை உருவாக்கியிருந்தனர். ‘எனது செல்ல மகள்…’ என ஒரு குழந்தையின் போட்டோவையும் போட்டு… அந்த ஐ.டி-யில், போஸ்ட் செய்துள்ளனர். அத்துடன், ‘எனது அலுவலக டீம், எனது நண்பர்கள், எனது குடும்பத்தினர்’ என மற்றவர்கள் நம்பும்விதமாக பல குரூப் போட்டோக்களையும் அதில் பதிவேற்றம் செய்திருந்தனர். சந்தேகம் கொண்டவர்கள், அந்த போட்டோக்களைப் பார்த்தபிறகு… அம்புஜா சிமி என்ற பெண் இருக்கிறார்போல என ஆணித்தரமாக நம்பியிருக்கின்றனர். இப்படி கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஐ.டி ஃபேஸ்புக், ஆண்கள் மத்தியில் தனி ராஜ்ஜியம் நடத்திவந்திருக்கிறது.

இதனிடையே ஊடகவியலாளரான அருள்மொழி என்பவர், அம்புஜா சிமி வேலை பார்த்ததாகச் சொல்லப்படும் அந்தப் பிரபல தொலைக்காட்சி நிர்வாகத்திடமும், தென்காசியில் உள்ள நிருபர்களிடமும் விசாரித்துள்ளார். அப்போது, அம்புஜா சிமி என்ற பெண்ணே தங்கள் நிறுவனத்தில் பணியாற்றவில்லை என அந்த நிறுவனம் கூறியுள்ளது. அதன்பிறகு, அந்த ஊடகவியலாளர்கள் தீவிரமாக விசாரித்தபோது… அம்புஜா சிமி என்பவர், பெண்ணே இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. அம்புஜா சிமி என்பது ஒரு ஃபேக் ஐ.டி. இது போலிக் கணக்கு என அவர்கள் புகார் தெரிவித்ததால்… அந்த ஐ.டி-யை முடக்கிவிட்டது ஃபேஸ்புக் நிர்வாகம்.

இதுகுறித்து அருள்மொழி, ‘‘தென்காசியைச் சேர்ந்த ஓர் ஆண் ஊடகவியலாளர்தான் அம்புஜா சிமி என்ற பெண் பெயரில் போலி அக்கவுன்டை நடத்திவந்துள்ளார். இதை, நாங்கள் கண்டுபிடித்து ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் ரிப்போர்ட் செய்து… அதை, ப்ளாக் செய்துவிட்டோம். இந்த ஐ.டி-யை நடத்திவந்த ஊடகவியலாளரிடம் நாங்கள் பேசினோம். ‘பெண் பெயர் கொண்ட ஐ.டி-யில் பதிவு போட்டால் நல்ல ரீச் இருக்கும் என்பதால், போலிக் கணக்கை உருவாக்கினேன்’ என அவர் சொன்னார். இதற்காக ஏதோ ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது பெரும் தவறு. புகைப்படத்தில் இருக்கும் பெண் யார், எங்கு இருக்கிறார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்றார் வருத்தத்துடன்.

அம்புஜா சிமியின் ஃபேஸ்புக் ஐ.டி-யில் இருந்த புகைப்படத்தை வைத்து இணையதளத்தில் நாம் தேடியபோது, பங்களாதேஷில் வசிக்கும் ஒரு பெண்ணின் ஃபேஸ்புக் ஐ.டி கிடைத்தது. பங்களாதேஷ பெண்ணின் புகைப்படத்தையே அம்புஜா சிமி ஃபேக் ஐ.டி பக்கத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

என்னத்த சொல்ல..!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.