மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்பு: ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவர்களுக்கு மீண்டும் பதவிமூன்றாவது முறையாக தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை பதவியேற்றார். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 31 பேருக்கு  மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு 2016ம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் அதிமுக தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா 6வது  முறையாக முதல்வராக பதவியேற்றார். அவரது தலைமையில் அமைச்சரவை கடந்த மே 24ம் தேதி பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து அமைச்சரவை ஆகஸ்ட் 28ம்  தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதில், பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி.சண்முக நாதன் விடுவிக்கப்பட்டார். அவர் வகித்து வந்த பால்வளத்துறை  கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த பெஞ்சமின் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  அவரிடம் இருந்த பள்ளிக்கல்வித்துறைக்கு மாபா.பாண்டியராஜன் புதிதாக நியமிக்கப்பட்டார்.

மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும் மா.பா.  பாண்டியராஜனுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 32 அமைச்சர்கள் பதவியில் இருந்தனர்.முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வகித்த வந்த பதவிகள் உள்துறை மற்றும் பொது நிர்வாகம் ஆகிய துறைகள் நிதி  அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கடந்த அக்டோபர் 11ம் தேதி ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்வர் உடல்நிலைக்கவலடைக்கிடமானது. அதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நேற்றிரவு சென்னையில் உள்ள  அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத்  தொடர்ந்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கவர்னர் வித்யா சாகர்ராவிடம் நேற்று நள்ளிரவு அளித்தார். அப்போது புதிய அமைச்சரவை பட்டியலையும் அவர்  கவர்னரிடம்  வழங்கினார். இதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்தார். அதன் பேரில் புதிய அமைச்சரவை  பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று அதிகாலை 1.05 மணிக்கு நடந்தது. முன்னதாக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு 2 நிமிடம் மவுன  அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பதவி ஏற்பு விழா மிக எளிமையாக நடந்தது.முதலில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருக்கு பதவி ஏற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் கவர்னர் செய்து வைத்தார். அதை  தொடர்ந்து அமைச்சர்கள் 15 பேர் மொத்தமாக பதவியேற்றனர். அடுத்து 16 பேர் மொத்தமாக அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சரவையில் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி கே.பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம்,  கே.பி.அன்பழகன், வி.சரோஜா, எம்.சி.சம்பத், கே.சி.கருப்பண்ணன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர்,  இரா.துரைக்கண்ணு, ஆர்.பி.உதயக்குமார், கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், ேக.சி.வீரமணி, கே.பாண்டியராஜன், கே.டி. ராஜேந்திரபாலாஜி, பா.பென்ஜமின்,  நிலோபர் கபீல், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.மணிகண்டன், வி.எம்.ராஜலட்சுமி, ஜி.பாஸ்கரன், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எஸ்.வளர்மதி, பா.பாலகிருஷ்ணா ரெட்டி  ஆகிய 31 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பதவியேற்ற அனைவரும் ஏற்கனவே ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவர்கள் ஆவர். புதிதாக யாருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை.  அந்தந்த இலாகாக்களே அமைச்சர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டது. பதவியேற்பு விழாவில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். சுமார் 25 நிமிடங்களில்  பதவியேற்பு விழா முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து கவர்னருடன் புதிய அமைச்சர்கள் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.  ஓ.பன்னீர்செல்வம் 3வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.  ஏற்கனவே, டான்சி வழக்கில் ஜெயலலிதா பதவி பறிக்கப்பட்ட போது முதன்முறையாக முதல்வராக பதவியேற்றார். அதைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில்  ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்ட போது ஓ.பன்னீர்செல்வம் 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.