மோடியின் தோல்வியும்… திசைதிருப்பலும்….சந்நியாசிகளிடம் மாற்றிக்கொண்டு நாடு படும் பாடு.சமீப காலங்களில் தேர்தலுக்கு முன்பு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் மோடி. அவர் ஆட்சிக்கு வந்தால்தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும். லஞ்சம், ஊழலை, கருப்பு பணத்தை, எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்று சாதாரண எளிய மக்களையும் நம்பவைத்து அதில் வெற்றியும் பெற்றார். ஏறக்குறைய 42% மக்கள் வறுமை கோட்டிருக்குகீழ் வாழும் இந்திய திருநாட்டில் வறுமையை ஒழிப்பேன் என்ற அவரது கோசம் மக்களிடத்தில் நன்கு எடுபட்டது. 31% வாக்குகளைத்தான் வாங்கினாலும் 300 க்குமேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றிபெற மோடிதான் முதற்காரணம்.

தேர்தலுக்கு முன் அவர் சொன்னதற்கும் ஆட்சியில் இருக்கும்போது அவர் செய்வதற்கும் கொஞ்சம்கூட சம்மந்தம் இல்லை. அவருடைய ஆட்சியின் சாதனை என்று எதையும் குறிப்பிட்டு சொல்லிவிடமுடியவில்லை. ஆனால் வேதனைகளை பெரிய பட்டியலே போடவேண்டி இருக்கின்றது. தனது ஆட்சியில் மக்கள்படும் வேதனைகளை குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேதனைகளை மறக்கடிக்க புதிது புதிதாக பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி மக்களின் கவனத்தை திருப்பிவிடுவதில் பிரதமர் மோடியும், பாஜகவினரும் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

சாதாரண மக்கள் மட்டுமல்ல பெரிய அரசியல் கட்சிகளே இதில் திணறித்தான் போகிறது. ஒரு பிரச்சனைக்காக போராடி கொண்டிருக்கும்போதே மற்றொரு பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். உடனே அப்பிரச்னையையை கைவிட்டு புதிய பிரச்சனைகளுக்கு எதிராக களமாடுகிறார்கள். இதில் முந்தைய பிரச்சனையை வெற்றிகரமாக மோடி அரசு மறக்கடித்துவிடுகிறது. இந்த இரண்டரை வருடத்தில் எத்தனை சோதனைகளை மக்களுக்கு இவர்கள் கொடுத்தார்கள் என்பதற்கு சிறு உதாரணம்தான் இது.

முதல் ஒரு வருடத்திற்குள் 600 கலவரங்கள் நடந்து இருக்கின்றன. கிருத்துவர்கள் மீது 149 தாக்குதல்கள் அரங்கேறி இருக்கின்றன.

இந்து சட்டத்தை அனைவரும் மீதும் திணிக்கும் பொதுசிவில் சட்டம் கொண்டுவர தீவிரமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாயம் வீழ்ந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை செயல் இழக்க செய்ய தொடர்ந்து முயல்வது.

இந்தி மற்றும் சம்ஸ்கிருத திணிப்பு.

மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வு.

புதிய கல்வி கொள்கையின் மூலம் மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டு வர முயல்வது.

சமூகங்களுக்கிடையே கலவரங்களையும், பிரிவுகளையும், வெறுப்புகளையும் அதிகப்படுத்துவது.

மாட்டிறைச்சி உண்பதை தேசிய பிரச்சனையாகி அப்பாவி மக்களை கொல்லும் அதிகாரத்தை இந்துத்துவர்களிடம் அளிப்பது.

கல்வி, வரலாறு, விஞ்ஞானம், புவியியல் என அனைத்திலும் இந்துத்துவ கருத்தாக்கத்தை உள்நுழைப்பது.

பன்சாரே, தபோல்கர் போன்ற சிந்தனையாளர்கள் சிதறடிக்கப்பட்டது.

சென்னை ஐஐடி அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்டத்திற்கு தடை விதித்து முடக்க முயற்சித்தது.

ரோஹித் வெமுலாக்களின் உயிரை காவு வாங்கியது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவ அமைப்புகளை ஒடுக்க முனைந்தது.

அரசு சாரா அமைப்புகளையும், மனித உரிமை அமைப்புகளையும் குறிவைத்து முடக்குவது.

அணுவுலை, நியூட்ரினோ, ஷேல் கேஸ், மீத்தேன் போன்ற அழிவுத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவது.

காவிரி விஷயத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகாவிற்கு ஆதரவாக நின்று தமிழகத்திற்கு துரோகம் இழைத்தது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் வகையில் செயல்பட்டு வருவது. திட்டமிட்டே பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டத்தில் தள்ளுவது.

சிறுவணிகத்தை ஒழிக்க மறைமுகமாக செயல்படுவது. பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவது.

விலைவாசியை கட்டுக்குள் வைக்க முடியாமல் திணறுவது.

கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் 500, 1000 ரூபாய் பணத்தை மதிப்பிழக்க செய்து மக்களை கடும் சிரத்திற்கு தள்ளி இருப்பது. இதனால் 100 க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை காவு வாங்கி இருப்பது.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் இதில் குறிப்பிடப்படாத பல பிரச்சனைகளை இந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால் இவைகளை எல்லாம் எளிதில் மக்கள் மனங்களில் இருந்து அகற்றுவதற்கு பிரதமர் மோடி நாடு முன்னேற போகிறது என்ற கவர்ச்சிகர போலி கோசத்தை எழுப்பி வருகிறார். உணர்ச்சிகரமாக பேசி மக்களின் ஆக்ரோஷத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறார். பாஜகவும் திட்டமிட்டு அதன் முன்னணி தலைவர்கள் மூலம் மத துவேஷ கருத்துக்களை சொல்லி கவனத்தை அதன் பக்கம் திருப்பி விடுகிறது.

“மதரஸாக்கள் தீவிரவாதத்தை போதிக்கும் கூடங்கள்” – சாத்வி மகாராஜ்.

“இந்தியாவில் சிறுபான்மையினர் என்று எவரும் கிடையாது. கலாச்சார ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் டி.என்.ஏ. ரீதியாகவும் அனைவரும் இந்துக்கள்” – ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் தாத்ரேயா ஹொஸ்பாயே.

“கோயில்கள் மட்டும்தான் கடவுள் இருக்கும் இடம். மஸ்ஜித்களும், தேவாலயங்களும் சாதாரண கட்டடங்கள்தான். அதனால் அவற்றை எப்போதும் பிடிக்கலாம்” – சுப்ரமணிய சாமி.

இதுபோன்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதன்மூலம் ஆட்சியின்மீதான மக்களின் கோபத்தை அவர்களின் கவனத்தை திசைதிருப்பி விடுகிறார்கள். மக்களுக்கு எதிரான சட்டங்களையும், ஆட்சியாளர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் பெரும்பாலும் அரசிற்கு வாலாட்டிக் கொண்டிருக்கின்றன. “மிகைப்படுத்துதல் மற்றும் அச்சத்தை தூண்டிவிடுவதன் வழியேதான் ஊடகங்கள் செழித்து வளருகின்றன” என்கிறார் அமெரிக்க நீதிபதி ரிச்சர்ட் போஸ்னர். அதைத்தான் தற்போதைய இந்திய ஊடகங்களும் செய்து வருகின்றன. மோடி அரசின் கையாலாகாதனத்தை விமர்சிக்கவும், ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டவும் தவறி வருகின்றன. சில ஊடகங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்கின்றன.

மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களை, அதன் தோல்விகளை, அதை மறைக்க நடக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கப்பட வேண்டும். அதற்கான அமைப்புகளை ஜனநாயக சக்திகள் கட்டியெழுப்ப வேண்டும் தொடர்ச்சியானதொரு போராட்டத்தை நோக்கி நகர வேண்டும். “நம்பிக்கையுடன் இருங்கள். ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயாராக இருங்கள். இது பொறுமையின் காலம். நாம் உறுதியுடனும், பலத்துடனும் நின்றால் நமது இலக்கை அடையலாம்” என்கிறார் மனித உரிமை செயல்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட். அந்த உறுதியும், பலமும் கூடிய நீண்டதொரு போராட்டத்திற்கு ஜனநாயக சக்திகள் அணிதிரள வேண்டும்.

- வி.களத்தூர் எம்.பாரூக்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.