பெங்களூரு அத்தியாயங்களுக்குப் பிறகே ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பு தீவிரமானது!சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்த வரை முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கடந்த 2014-ம் ஆண்டு வரை  அச்சுறுத்தும் அளவுக்கு செய்திகள் வெளியானது இல்லை. வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்த வழக்கில் இரண்டாவது முறையாக தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி  தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அதுபோல், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் முதல்வர் பதவியில் இருக்கும்போதே தண்டனை பெற்று சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு முதல்வர் ஜெயலலிதா தள்ளப்பட்டார். பெங்களூரு சிறைத்தண்டனைதான் ஜெயலலிதாவை மனதளவில் மிகவும் பாதித்து, உடல் நிலையை மிகவும் மோசமாக்கியது.

பொதுவாகவே ஜெயலலிதா தனது தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் தலையிட விடமாட்டார். சசிகலாவாக இருந்தாலுமே அவரிடம் கூட முழுமையாக ஜெயலலிதா தனது உடல்நிலை குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள மாட்டார் என்பதுதான் அரசியல் வட்டாரங்கள் சொல்லும் தகவல். கடந்த 2015-ம் ஆண்டு மே 11-ம் தேதி, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். ஆனால், அதற்குப் பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகியே வந்துள்ளது. முதல்வர் பகிர்ந்து கொண்டால் மட்டுமே சசிகலா கூட, அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும். முதல்வரிடம் இருந்து கட்டாயப்படுத்தி எந்த விஷயத்தையும் தகவலையும் பெற்றுக் கொள்ள முடியாது.

உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்துதான், ‘முதல்வராக 6-வது முறையாக பதவியேற்றுக் கொண்டாலும் முக்கிய முடிவுகளை எடுக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணனை அருகில் வைத்துக் கொண்டார். அத்துடன் உடல்நிலைக் கோளாறு காரணமாக  வேலை பார்க்கும் நேரத்தையும் குறைத்துக் கொண்டார்.

கடைசியாக கடந்த செப்டம்பர் 20-ம் தேதி ஜெயலலிதா, சென்னை மெட்ரோ ரயில் தொடக்க விழாவில்  பங்கேற்றார். இந்த விழாவில் மத்திய மந்திரிகள் வெங்கய்ய நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். “முதல்வர் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமே திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அடுத்த  2-வது நாள் அப்பலோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவின்போதே ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாகதான் இருந்துள்ளது. அந்த நிகழ்வுக்கு வீல்சேரில்தான் ஜெயலலிதா அழைத்து வரப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக அவருக்கு பாதுகாவலராக பணியாற்றிய சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த சமயத்தில் ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். ''கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பின்னர் ஒருநாள் கோட்டைக்கு முதல்வர் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று காரை நிறுத்தச் சொன்ன ஜெயலலிதா, உடனே காரைத்திருப்பி வீட்டுக்கு போகுமாறு கூறியுள்ளார். காருக்குள்ளேயே அவர் மயக்கமடையும் நிலையில் இருந்துள்ளார். பாதுகாவலர்கள் உடனடியாக வேக வேமாக வண்டியை திருப்பி போயஸ் கார்டனுக்கு கொண்டு சென்றுள்ளனர். வீடு திரும்பிய ஜெயலலிதா 4 மணி நேரம் ஓய்வெடுத்த பின்னரே மீண்டும் கோட்டைக்குத் திரும்பியுள்ளார்.

பெங்களூரு சிறைவாசத்துக்குப் பிறகு, முதல்வரிடம் நடையும் தளர்ந்து காணப்பட்டுள்ளது. அதனால், வழக்கமாக அவரை விட்டு 2 அடி தொலைவில் வரும் பாதுகாவலர்கள் முதல்வருக்கு தெரியாமல் அவரை நெருங்கியே நடந்து வர ஆரம்பித்துள்ளனர். அதாவது முதல்வருக்கும் தங்களுக்கும் ஒரு அடி தொலைவு இருக்குமாறு பார்த்துக் கொண்டுள்ளனர். ஒரு வேளை கீழே சரிந்தால் கூட சட்டடென்று பிடித்துக் கொள்ள முடியுமென்பதற்காக முதல்வருக்கும் தங்களுக்கும் இடைவெளியை குறைத்துள்ளனர். கடைசி கட்டங்களில் மேடைகளில் கூட அமர்ந்து கொண்டேதான் ஜெயலலிதா பேசினார். அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாத சூழலும் இருந்துள்ளது.

பெங்களூரு சிறைத் தண்டனைக்குப் பிறகு, ஜெயலலிதா தனது உடல்நிலையில் அக்கறைக் காட்டத் தவறியதாகவும் பெரும்பாலும் டாக்டர்களிடம் சிகிச்சை பெற மறுத்து வந்ததாகவும் தனது உடல்நிலை குறித்து தெளிவாக மருத்துவர்களிடம் தகவலை பகிர்ந்து கொள்ள மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. சொத்துக்குவிப்பு  வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டது கூட அவரை மனதளவில் உற்சாகப்படுத்தவில்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதனால்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட  ஒரு வருடத்திற்குள்ளேயே நம்மிடம் இருந்து மறைந்து விட்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.