மத்திய அரசும்... ஜெயலலிதா மரணமும் : ஜெ.வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது முதல் ராஜாஜி ஹால் வரை.. டைம்லைன்ஜெவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது முதல் ராஜாஜி ஹால் வரை நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு.


முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் அது பலனளிக்காமல் அவர் காலமானார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது முதல் தற்போதுவரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு: ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவமனையில் கூடுகின்றனர்.

முன்னெப்போதும் இல்லாத அசாதாரண நிலை அப்பல்லோ மருத்துவமனையில் நிலவுகிறது. அத்துடன் தமிழகம் முழுவதும் உடனடியாக போலீசார் உஷார்படுத்தப்படுகின்றனர்.

இரவு 9 மணியளவில் அனைத்து ஊடகங்களும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த முக்கிய அறிக்கை வெளியாகப் போகிறது என செய்திகள் வெளியிடுகின்றன. பின்னர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவிக்கிறது.

துணை ராணுவ பீதி
அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு வந்த அதேநேரத்தில் ஆளுநர் வித்யாசகர் ராவ் அவசரமாக சென்னை வருகிறார் என்கிற செய்தியும் வெளியாகிறது. தேவைப்பட்டால் பிரதமர் மோடியும் சென்னை வருவார் எனவும் கூறப்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத நேரத்திலும் கூட மத்திய அரசு தரப்பில், தேவைப்பட்டால் துணை ராணுவப் படை அனுப்பப்படும் என்ற பீதியான செய்தி தொடர்ந்து வருகிறது.

அறிக்கை தராத
ஆளுநர் சென்னைக்கு வந்து சேர்ந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேராக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் போனவேகத்தில் அவர் 10 நிமிடத்திலேயே திரும்பிவிட்டார். அவரிடம் இருந்து அறிக்கை வரும் வரும் என தமிழக மக்கள் எதிர்பார்த்து விடிந்ததுதான் மிச்சம்.

சட்டம் ஒழுங்கு
ஆனால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வித்யாசாகர் ராவிடம் தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து பேசியதாக கூறப்பட்டது.. உண்மையில் அப்போது தமிழகம் ஜெயலலிதாவுக்கு என்னாச்சோ என்ற தவிப்புடன் ஆளுநர் அறிக்கைக்காக காத்திருந்தது. மத்திய அரசு தரப்பில் சட்டம் ஒழுங்கு பற்றியே பேசிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இன்னொருபக்கம்
சசிகலா தரப்பு ஜெயலலிதா உடல்நிலை குறித்து தமிழகமே எதிர்பார்த்து காத்துகிடக்க அப்பல்லோவில் விடிய விடிய அமைச்சர்களும் சசிகலாவும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை ஒருபக்கம் நடக்க தலைமைச் செயலரோ ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ஒருபக்கம் தவிப்பு இருக்கும் நேரத்தில் அதிகார மையங்கள் இடைவிடாத ஆலோசனைகளில் மூழ்கியிருந்தது.

மீண்டும் மீண்டும் சட்டம் ஒழுங்கு
 இப்படி ஒரு இரவு முழுவதும் உருவாக்கப்பட்டிருந்த பீதியான திங்கள்கிழமை காலை சற்றே தணிந்தது. ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன... அதே நேரத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தே மீண்டும் மீண்டும் மத்திய அரசு பேசியது. துணை ராணுவப் படையினரை அனுப்புவோம் என்றெல்லாம் மத்திய அரசு தரப்பில் இருந்து சொல்லப்பட்டது.

எம்எல்ஏக்களை கட்டுப்பாட்டில்...
இந்த அறிவிப்புகளுக்கு நடுவே அதிமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையிலேயே நடத்தப்பட்டது. அதன் பின்னர் ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் எம்எல்ஏக்கள், உதவியாளர்களின் செல்போன்களையும் தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அவர்களை அதிமுக தலைமை கழகத்திலேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டது. இப்படி அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சசிகலா தரப்பு மும்முரமாக இறங்கியது.

வெங்கையா நாயுடு வருகை
பின்னர் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமானது என அறிவிக்கப்பட்டதுதான் தாமதம்.. மத்திய அரசு தம் பங்குக்கு களமிறங்கியது. டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்தது.. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் மீண்டும் தமிழக சட்ட ஒழுங்கு குறித்து ஆளுநரிடம் பேசினார்... ஆளுநரும் அப்பல்லோவுக்கு வருகிறார் என செய்திகள் வெளியாகின. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உடனே சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.

அப்பல்லோவில் வெங்கையா
தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து மீண்டும் மீண்டும் மத்திய அரசு தரப்பில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டு வந்தது. இதன் உச்சகட்டமான காட்சிகள்தான் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது. அப்பல்லோவுக்கு வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சுமார் 40 நிமிடம் அங்கேயே இருந்தார்.

எம்எல்ஏக்கள் கூட்டம் ஒத்திவைப்பு
அப்போது ராயப்பேட்டை அதிமுக தலைமை நிலையத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்க முடியாமல் அப்பல்லோவில் இருப்பதாக கூறப்பட்டது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயடுவும் அப்பல்லோவில்தான் இருந்தார்.

மோடியிடம் விவரிப்பு
நீண்டநேரத்துக்குப் பின்னர் அப்பல்லோவில் இருந்து வெங்கையா நாயுடு புறப்பட்டுச் சென்றார். அவர் சென்னையிலேயே தங்கி இருந்து தமிழக நிலவரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் விவரித்தார்.

திடீரென சீனுக்கு வந்த தம்பி
இதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இரவு 10 மணிக்கு மேல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நள்ளிரவு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. அந்த கூட்டத்துக்கு லோக்சபா துணை சபாநாயகரான தம்பிதுரையும் பங்கேற்கிறார் என தகவல் வர அவருக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கும் என்னதான் தொடர்பு? அவரைத்தான் புதிய முதல்வராக்குவார்களோ என்ற விவாதம் எழுந்தது.

ராஜாஜி ஹாலில்...
இதற்குப் பின்னர் ஜெயலலிதா காலமாகிவிட்டார் என நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகிய சிறிதுநேரத்திலேயே புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் கண்ணை மூடித்திறப்பதற்குள் நடந்து முடிந்தது. அடுத்ததாக உடனே ஜெயலலிதாவின் உடல் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் தற்போது அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி வைக்கப்பட்டுள்ளது.

இங்கிட்டு மன்னார்குடி... அங்கிட்டு மத்திய அரசு
அப்பல்லோ மருத்துவமனை தொடங்கி ராஜாஜி ஹால்வரையில் சசிகலா தரப்பு- மத்திய அரசு மல்லுக்கட்டு அப்பட்டமாக வெளிப்படுகிறது. ஜெயலலிதாவின் உடலுக்கு ஒருபுறம் சசிகலாவின் மன்னார்குடி குடும்பமும் மற்றொரு புறம் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மத்திய அரசு முதல்வராக்க விரும்பிய ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தம்பிதுரை ஆகியோர் அமர்ந்துள்ளனர். மன்னார்குடி தரப்பு ஜெ. உடலுக்கு அருகே நிற்க தம்பிதுரை உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் அனைவருமே படிக்கட்டில் தரையில் அமர்ந்துள்ளனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.