10 ஆண்டு சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு SDPI கட்சி கோரிக்கை.!எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டு ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு SDPI  கட்சி கோரிக்கை.!

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர். எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா எதிர்வரும் ஜனவரி 17 அன்று தமிழக அரசால் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு திட்டங்கள் மாநில அரசால் அறிவிக்கப்பட இருக்கின்றன. அன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு சார்பாக நடைபெறவிருக்கிறது.

இந்த சூழலில் தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைக்கைதிகள், தங்களுடைய தண்டனைக் காலத்தையும் தாண்டி சிறைகளில் வாடி வருகின்றனர். இதனால் அவர்களின் குடும்பங்கள் சின்னாபின்னமாகி சீரழிந்து வருகின்றன. சிறைக்கூடம் என்பது திருந்துவதற்கான இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை வதை செய்யும் இடமாக மாறிவிடக்கூடாது. ஆகவே, எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
தலைவர்களின் நூற்றாண்டு விழா, பிறந்தநாள் விழா காலக்கட்டங்களில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் நடவடிக்கை கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கையாகும். எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 1992, 1993 மற்றும் 2011 ஆண்டுகளில் அதிமுக அரசால் 363 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேப்போன்று தி.மு.க. ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் அதனைத் தொடர்ந்தும் 2007, 2008, 2009 மற்றும் 2010-ல் 1444 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ம் பிரிவை பயன்படுத்தியே தமிழக அரசு இவர்களை விடுதலை செய்தது. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்த போதும் நீண்ட நாள் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆகவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் தமிழக அரசு நீண்ட நாள் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவையில் கூட அவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழக சிறைகளில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் அந்த கோரிக்கைகள் தொடர் கனவாகவே இருந்து வருகிறது. ஆகவே, தமிழக அரசு அவர்களின் விடுதலைக் கோரிக்கையை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மூலம் நிறைவேற்ற முன்வர வேண்டும்.
கடந்த 2008 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு போன்ற எந்த வழக்கோ அல்லது சட்ட சிக்கலோ ஆயுள் சிறைக் கைதிகள் விடுதலையில் தற்போது இல்லாததால், தமிழக அரசு பாரபட்சமின்றி அனைத்து தரப்பு நீண்ட நாள் ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.