ஜின்களும் ஷைத்தான்களும். தொடர் - பாகம் - 1முன்னுரை
இன்றைய உலகில் இஸ்லாமும் இன்னபிற மதங்களும் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இஸ்லாத்தைத் தவிர்த்து எந்த ஒரு மதத்தின் கொள்கையும் கோட்பாடுகளும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கக்கூடியதாக இல்லை.

மனிதர்களால் சுயமாக கண்டுபிடிக்க இயலாத விஷயங்களில் சுய சிந்தனைகளையும் கற்பனைகளையும் ஒருவர் புகுத்தினால் இம்மதங்களை கடைபிடிப்பவர்கள் யாரும் இதை எதிர்ப்பதில்லை. குறிப்பாக இக்கற்பனைகள் தங்களது மதத்தின் மீது பக்தியையும் பற்றையும் ஏற்படுத்துவதற்கு உதவினால் கண்மூடிக்கொண்டு ஆதரவளிக்க இவர்கள் முன்வருகிறார்கள்.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை அதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் குறிப்பிட்ட எல்லைக்குள் வறையறுக்கப்பட்டுவிட்டது. மனிதர்களின் கற்பனைகளும் சுய சிந்தனைகளும் இதில் நுழைந்து விடாமல் இருக்க வலுமையான தடுப்பை திருக்குர்ஆன் ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய சட்டதிட்டங்களாக இருந்தாலும் கொள்கை கோட்பாடுகளாக இருந்தாலும் இவற்றை வகுத்துக் கூறும் அதிகாரத்தை இறைவன் தன்வசம் மட்டுமே வைத்துள்ளான். இந்த அதிகாரத்தை கையில் எடுக்க யாருக்கும் எள்ளளவு கூட அனுமதியில்லை.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.

அல்குர்ஆன் (39 : 3)

 இந்த அடிப்பைடையை முஸ்லிம்களில் பலர் புரிந்துகொள்ளாத காரணத்தால் இஸ்லாத்தில் சொல்லப்படாத இஸ்லாத்திற்கு மாற்றமான பல விஷயங்கள் மாற்றார்களிடமிருந்து இவர்களுக்கு தொற்றிக்கொண்டுவிட்டது. உதாரணமாக ஜின்கள் மற்றும் ஷைத்தான்கள் விஷயத்தில் பல விதமான தவறான நம்பிக்கைகள் நம் மக்கள் மத்தியில் பரவியுள்ளது.

ஜின்களும் ஷைத்தான்களும் மனிதக் கண்களுக்குப் புலப்படாத மறைமுகமான படைப்பாகும். இவர்களைப் பற்றி நம்முடைய சுய அறிவைக் கொண்டு ஆராய்ந்து கூற இயலாது. அப்படிக்கூறினால் நிச்சயமாக அது வழிகேட்டில் தான் கொண்டு போய்விடும்.

மனித அறிவிற்குப் புலப்படாத விஷயங்களை அறிந்துகொள்வதாக இருந்தால் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மூலமே அறிந்துகொள்ள முடியும். இவ்விரண்டையும் தவிர்த்து வேறு எதன் மூலமும் யார் மூலமும் இது தொடர்பான விஷயங்களை அறிந்துகொள்ள இயலாது.

ஜின்களையும் ஷைத்தான்களையும் பற்றி குர்ஆனும் ஹதீஸ்களும் தெளிவாக விளக்குகிறது. இந்த விளக்கங்களை அறிந்து கொண்டால் தவறான நம்பிக்கைகளில் நம் சமூகம் நிச்சயம் விழாது. உலக மக்களின் எதிரியான ஷைத்தானைப் பற்றி விபரமாக அறிந்து அவனது சதி வலையில் விழாமல் நம்மை நாம் காத்துக்கொண்டால் இறைவனுடைய கோபம் நம்மீது ஏற்படாது.

மக்கள் இவைகளை அறிந்து நல்வழியில் செல்வதற்காக குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் அடிப்படையாகக் கொண்டு ஜின்களையும் ஷைத்தான்களையும் பற்றி விவரிக்கும் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் தவறுகள் ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறோம்.

இப்படிக்கு
அப்பாஸ் அலீ

ஜின் என்ற வார்ததையின் பொருள்
அல்ஜின்னு என்ற அரபு வார்த்தை குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஜின்கள் என்பது மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டு இறைக்கோட்பாடுகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்ட உயிரினமாகும்.

மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல் சில வேற்றுமைகளும் உள்ளது. மனிதர்களை நம் கண்களால் காண முடியும். ஆனால் ஜின்களை மனிதக் கண்களால் காண முடியாது. மாறாக ஜின்களால் மனிதர்களை காணமுடியும்.

ஜன்ன என்ற வினைச் சொல்லிலிருந்து ஜின் என்ற வார்த்தை பிரிந்து வந்துள்ளது. மறைத்தல் மறைதல் என்பது இதன் நேரடிப் பொருளாகும். திருமறைக் குர்ஆனில் ஜன்ன என்ற வார்த்தை மூடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இரவு அவரை மூடிக் கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இதுவே என் இறைவன்” எனக் கூறினார். அது மறைந்த போது “மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்” என்றார்.

அல்குர்ஆன் (6 : 76)

எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்கு கேடயம் உதவுவதால் கேடயத்திற்கு ஜுன்னத் என்று சொல்லப்படுகிறது. தாயின் வயிற்றில் உள்ளக் குழந்தை மறைவாக இருப்பதால் அதற்கு ஜனீன் என்று கூறப்படுகிறது.

பாம்புகள் மனிதக் கண்களை விட்டு விரைவில் மறைந்துவிடுவதால் பாம்புகளுக்கு ஜான் என்று கூறப்படுகிறது. ஜின்கள் மனிதக்கண்களுக்கு புலப்படாமல் மறைந்து இருப்பதால் இதற்கு ஜின் என்று கூறப்படுகிறது.

நூல் : லிஸானுல் அரப் பாகம் : 13 பக்கம் : 92


ஜின்கள் இருப்பது உண்மை
ஜின் என்ற ஒரு படைப்பு உலகத்தில் இருப்பதாக திருக்குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவாக கூறுகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் நம்பிக்கைக்கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களிலும் இதுவும் ஒன்றாகும்.

வானவர்கள் சொர்க்கம் நரகம் இவற்றை நாம் யாரும் கண்களால் பார்த்துவிட்டு நம்பவில்லை. மாறாக குர்ஆனும் ஹதீஸ்களும் இவற்றை நம்புமாறு கூறுவதால் நம்புகிறோம். இது போன்று ஜின்களை நம் கண்களால் காணாவிட்டாலும் மறைவான நம்பிக்கை என்ற அடிப்படையில் ஜின்கள் இருப்பதாக நம்புபவரே உண்மையான இறைநம்பிக்கையாளராக இருக்க முடியும்.

இதுவரை மனிதனுடைய அறிவுக்குப் புலப்படாமல் உள்ள பல விஷயங்களில் இதுவும் ஒன்று என்று கருதுவதே ஈமானிற்கு உகந்தது. சில வழிகெட்ட கூட்டங்கள் ஜின்கள் என்று ஒரு படைப்பே இல்லை என்று கூறி மக்களை வழிகெடுத்துக்கொண்டிருக்கிறது. ஜின்கள் தொடர்பாக இந்நூலில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு ஆதாரமும் இவர்களின் தவறான நம்பிக்கையை தகர்க்கக்கூடியதாக இருக்கிறது.

இன்சா அல்லாஹ் ....இதன் தொடர் நாளை பார்ப்போம் ......
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.