சென்னையில் 300 வாகனங்கள் எரிப்பு 160 இடங்களில் மறியல் 108 பஸ்கள் மீது கல்வீச்சு 80 பேர் கைதுசென்னை முழுவதும் நேற்று 160 இடங்களில் மறியல் நடந்ததது,300 வாகனங்கள் தீவைத்து எரிக்கபட்டது. 108 பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 80 பேர் கைது செய்யபட்டனர்.

சென்னை முழுவதும் நேற்று காலை தொடங்கி இரவு வரை 160 இடங்களில் மறியல் - வன்முறை நடந்தது. திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ் பகுதிகளில் திட்டமிட்டு  உருவாக்கப்பட்ட தீவைப்பு, கல்வீச்சு, மறியல், கொள்ளைச் சம்பவங்கள் நகரின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சுமார் 108 மாநகர அரசு பஸ்கள் கல்வீசி உடைக் கப்பட்டன.

இதனால் மதியம் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மக்களிடம் பீதி ஏற்பட்டது. இந்த அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி சமூக விரோதிகள் சூறையாட்டத்தில் ஈடு பட்டனர்.

ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தை தொடர்ந்து வாகனங்களை குறி வைத்து சமூக விரோதிகள் தீ வைத்தனர். சுமார் 300 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது இந்த வன்முறை வெறியாட்டங்களால் சென்னை நகரம் போர்க்களம் போல மாறியது.

முக்கிய சாலைகளில் பல மணி நேரத்துக்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கி நின்றன. பெண்கள், மாணவ - மாணவிகள், அலுவலகம் சென்றவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். சென்னை நகரமே ஸ்தம்பித்த தால் பெரும்பாலானவர்கள் நடந்தே வீடுகளுக்கு திரும்பி னார்கள்.

சமூக விரோதிகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வன்முறை  வெடித்ததால், தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்வதாக இளைஞர்கள் அறிவித்தனர். இதையடுத்து மாலை சற்று அமைதி திரும்பியது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

என்றாலும் நேற்றிரவு சில இடங்களில் சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். நேற்றிரவு அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் சுமார் 500 பேர் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்ததும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்தனர்.

போலீசாரை கண்டதும் மறியலில் ஈடுபட்டவர்கள் சரமாரியாக கல்வீசி தாக்கி னார்கள். இரவில் எங்கிருந்து கல் வீசுகிறார்கள் என்பது தெரியாததால் போலீசார் சற்று திணற நேரிட்டது. இதை தங்களுக்கு சாதகமாக நினைத்த அந்த கும்பல் வடபழனி போலீஸ் நிலையம் முன்பு திரண்டது.

ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தை எரித்தது போல வடபழனி போலீஸ் நிலையத்தையும் எரித்து வன்முறையை நீடிக்க செய்ய வேண்டும் என்பது சமூக விரோதிகளின் திட்டமாக இருந்தது. அதை உறுதிபடுத்தும் வகையில் சில சமூக விரோதிகள் கையில் பெட்ரோல் குண்டுகள் வைத்திருப்பதை போலீசார் கண்டனர்.இந்த நிலையில் அந்த சமூக விரோத கும்பலைச் சேர்ந்த சிலர் இன்ஸ்பெக்டரின் காருக்கு தீ வைத்தனர். அந்த கார் கொழுந்து விட்டு எரிந்தது.

இதையடுத்து தீயை அணைக்க தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது சமூக விரோதிகள், அந்த தீயணைப்பு வாகனத்துக்கும் தீ வைத்தனர். சென்னை நகரை கலவரப் பூமியாக மாற்ற வேண்டும் என்ற சதி திட்ட வெறியுடன் அந்த கும்பல் தீவைப்பில் ஈடுபட்டது தெரிந்தது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தும் முடிவுக்கு வந்தனர். முதல் கட்டமாக சமூக விரோதிகளை எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி சுட்டனர்.

மொத்தம் 4 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் துப்பாக்கியை கையில் எடுத்து விட்டனர் என்பதை பார்த்ததும் அந்த சமூக விரோத கும்பல் உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தது.

இதைத் தொடர்ந்து சென்னையில் வன்முறை சம்பவங்கள் நடத்திய சமூக விரோதிகளை வேட்டையாடும் அதிரடியை போலீசார் தொடங்கினார்கள். நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை வரை போலீசாரின் அதிரடி நடவடிக்கை நீடித்தது. சென்னை முழுக்க மொத்தம் 80 சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக மெரினா கடற்கரை பகுதியில் 20 பேர் கைதானார்கள். மயிலாப்பூரில் 14, ஐஸ் அவுசில் 4, ஜாம்பஜாரில் 2 பேர் பிடிபட்டனர். இன்று அதிகாலை மேலும் 40 பேர் போலீ சாரிடம் சிக்கினார்கள்.

பிடிபட்ட 80 பேரில் வடபழனி பகுதியில் கைதான 8 பேரும் அடங்குவார்கள். இந்த 8 பேரும் வடபழனி இன்ஸ்பெக்டரின் காரை தீ வைத்து எரித்தவர்கள் ஆவார்கள். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.கைதான 80 பேரை தூண்டி விட்டது யார்-யார் என்ற விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்டவர்களிடம் இருந்து ஏராளமான பயன்படுத்தாத பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே சென்னையில் நடந்த வெறியாட்டம் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை இயல்பு நிலை திரும்பியது. பஸ், ரெயில்,ஆட்டோ உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து சீராகியுள்ளது.இன்று பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின. போலீசார் முக்கியப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இதனால் சென்னையில் இன்று அமைதி திரும்பியது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.