ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைதுசிரியாவின் அலெப்போ, ஹலப் உள்ளிட்ட மகாணங்களில், அப்பாவி மக்கள் மீது அந்நாட்டு அரசுப் படைகளுடன் இணைந்து ரஷ்ய கூட்டுப்படைகள் இணைந்து நடத்தும் கொடூர தாக்குதல் மற்றும் மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்தும் இனப்படுகொலை தாக்குதல் ஆகியவற்றை ஐ.நா. சபை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி, எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நேற்று (டிச.30) மாலை சென்னை அடையாறு ஐ.நா. (யுனிசெப்) அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில பொருளாளர் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி, வடசென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், தென்சென்னை மாவட்ட தலைவர் சலீம், பொது செயலாளர் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முற்றுகை போராட்டத்திற்கு தலைமை வகித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் பேசும்போது; மெசபடோமியா எனும் உலக நாகரிகத்தின் தொட்டில் என்ற புகழுக்குரிய சிரியா தேசம் இன்றைக்கு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையான அதிகார மற்றும் ஆயுதப் போட்டியில் சிக்குண்டு சின்னாபின்னமாகியுள்ளது. பஸர் அல் அஸாத்தின் சர்வாதிகார அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படைகளும், அரசுக்கு ஆதரவாக ரஷ்ய கூட்டுப் படைகளும் இணைந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சொந்த இடங்களிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

சிரியாவின் இந்த சூழலை பயன்படுத்தி அங்கு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை ஏகாதிபத்திய நாடுகள் தாக்குதல் மூலம் சோதனையிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த நவம்பர் முதல் சிரியாவின் அரசப் படைகளுடன் இணைந்து ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல் உக்கிரமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் அலெப்போ, ஹலப், இண்ட்லிப் மகாண மக்கள் ஆயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். அகதிகளாக அங்கிருந்து வெளியேறும் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. அலெப்போ நகரம், ‘நரகத்தின் வட்டம்’ என்று சொல்லும் அளவுக்கு முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. ஒருபக்கம் அமெரிக்க ஆதரவுடன் கிளர்ச்சிப் படைகள் தாக்குதல், மறுபக்கம் ரஷ்யப் படைகள் ஆதரவுடன் அரசப்படைகள் தாக்குதல் என அம்மக்கள் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே, சிரியாவில் நடைபெறும் இத்தகைய மனித படுகொலைகளை ஐக்கிய நாடுகள் சபை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்ற கனடாவின் தீர்மானத்தின் மீது பல நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்தியா அதனை புறக்கணித்துள்ளது வருந்தத்தக்கதாக உள்ளது.

இதேபோல் அண்டை நாடான மியான்மரில், ரோகிங்யா முஸ்லிம்கள் மீது பெளத்த பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து அந்நாட்டு ராணுவம் மிகக்கொடூரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. ஏற்கனவே, பெளத்த பயங்கரவாத குழுக்களின் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ரோகிங்யா மக்கள் மீதும், குடியிருப்புகள் மீதும், தற்போது ராணுவம் மேற்கொண்டுவரும் தாக்குதல் மிகமோசமானது என செயற்கைகோள் படத்தை சுட்டிக்காட்டி ஐ.நா. சபை கூறியுள்ளதோடு, அங்கு மனித உரிமை மீறல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் படுகொலைகளை அரங்கேற்றும் பர்மிய ராணுவம், பெண்கள் மீது பாலியல் வன்முறைகளையும் ஏவி வருகின்றது. இதனை தடுக்க ஐ.நாவோ, அண்டை நாடுகளோ முன்வரவில்லை.

ஆகவே, சிரியா மற்றும் மியான்மர் நாடுகளில் நடைபெறும் மனித படுகொலைகளை ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். அண்டை நாடான மியான்மரில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். 20 கோடி முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் இந்திய அரசு, சிரியா மற்றும் மியான்மரில் நடைபெறும் மனித படுகொலைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்றார்.

இதனைத் தொடர்ந்து யுனிசெப் அதிகாரிகளிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.