இஸ்லாமியர் நிறுவனங்களை குறிவைத்து வருமான வரி துறை ரெய்டு! – பாரபட்ச அரசியல் நடவடிக்கை என எஸ்.டி.பி.ஐ குற்றச்சாட்டுஇதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் மூலம், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, அதன்மூலம்  நம் நாட்டுக்கு பல்லாயிரம் கோடி அந்நிய செலவாணியை ஈட்டித் தருகின்ற நிறுவனமான, புகாரியா மற்றும் ஈ.டி.ஏ.  குழுமங்களை குறிவைத்து, வருமான வரித் துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தி  வருகின்றனர். ஆனால் அந்த சோதனையில்  கைப்பற்றப்பட்டவைகள் குறித்து வெளிப்படையான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது முதல், தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கிய நபர்கள், தொழில் முன்னோடிகளை குறிவைத்து தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், சோதனை நடைபெற்ற இடங்களில் கைப்பற்றப்பட்டவை என்ன? அவர்கள் செய்த முறைகேடு என்ன? என்பது குறித்து மத்திய அரசு எதனையும் வெளிப்படுத்தவில்லை. எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் அது குறித்து வெளிப்படையான தன்மையுடன் மத்திய  அரசு செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்தும் மத்திய அரசு மவுனமாகவே இருந்து வருகிறது. இதன் மூலம் மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும் வருமான வரித்துறைக்கு சோதனை செய்யும் அதிகாரம் இருந்தாலும், தற்போதைய தமிழக அரசியல்  சூழலில், தமிழகத்தை மட்டும் குறிவைத்து நடைபெறும் இத்தகைய சோதனை, அரசியல் காரணத்திற்காக  நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

வருமான வரித்துறையின் நடவடிக்கை என்பது பொதுவாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தை குறிவைத்து வருமானவரி சோதனைகள் நடத்தப்படும் அதே நேரத்தில், கர்நாடகா மாநிலத்தில் 650 கோடி ரூபாய் செலவு செய்து தனது மகள் திருமணத்தை நடத்திய, பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மீதோ அல்லது பல்வேறு மாநிலங்களில் கோடிக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கும் பாஜக ஆதரவு தொழில் அதிபர்கள் மீதோ, அக்கட்சி நிர்வாகிகள் மீதோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் சோதனை செய்ய முன்வராத மத்திய அரசு, தமிழகத்தை மட்டுமே மையப்படுத்தி இது போன்ற சோதனைகளை  நடத்துவது, அதன்  பாரபட்ச போக்கை காட்டுவதோடு  அப்பட்டமான அரசியலையும் வெளிப்படுத்துகிறது. மத்திய அரசின் இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும், புகாரியா, ஈ.டி.ஏ. நிறுவனத்தினரின் வீடுகளில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், வழக்கமான சோதனையை விடுத்து, அங்கிருந்தவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாகவும் தவல்கள் தெரிவிக்கின்றன. இந்நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிப்பதோடு, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.