மெரினா போராட்டக்களமானது; போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சால் பதட்டம்சென்னை மெரினா போராட்டகளமானது. போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சால் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது, இருப்பினும் போராட்டம் தொடர்கிறது. அரசு தரப்பில் பல்வேறு முறை விளக்கம் அளிக்கப்பட்டும் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டக்காரர்களை வெளியேற்றும் பணியை போலீசார் தொடங்கி நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தை நடத்தியும் கலைய மறுத்தவர்களை, வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறார்கள். அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, வெளியேற்ற முயற்சி செய்தார்கள். பல பகுதிகளில் போலீசார் பேச்சுவார்த்தையை ஏற்று இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

போராட்டக்களமானது
சென்னை மெரினாவில் தொடர்ச்சியாக 6 நாட்களாக போராட்டம் இரவு, பகலாக நடைபெற்று வந்தது. இன்று காலையில் மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இன்று சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ள ஜல்லிக்கட்டு சட்ட முன் வடிவு நகலை காட்டி கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் மாணவர்கள், இளைஞர்கள் மறுப்பு தெரிவிக்கவே, போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தத் தொடங்கினர்.

முதலில், பெண்கள், குழந்தைகள் என பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சிலர் தாங்களாகவே வெளியேறினர். ஆனால், போராட்டக்காரர்கள் பலரும் கடலை நோக்கி ஓடினர். கடற்கரை மையப்பகுதிக்குச் சென்று இளைஞர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். ஆனால் இளைஞர்கள் கடல் பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் அங்கேயே மனிதச் சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினாவிற்கு செல்லும் அனைத்து சாலைகளும் முடக்கப்பட்டு உள்ளது.

தடியடி
இதற்கிடையே மெரினாவை நோக்கி இளைஞர்கள் செல்ல முயற்சி செய்தார்கள். ஏற்கனவே போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சித்த நிலையில் அவர்களை மெரினாவிற்கு செல்வதை தடுத்து நிறுத்தினர். மெரினாவிற்கு செல்லும் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தினர். ராயப்பேட்டையில் போலீசார் தடுப்பையும் மீறி மெரினாவில் போராடுபவர்கள் ஆதரவு தெரிவிக்கும் விதமாக செல்ல முயற்சித்தவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இளைஞர்கள் தடுப்புகளை உடைத்து நுழைய முயற்சித்த போது போலீசார் லேசான தடியடியை நடத்தினர்.

இதற்கிடையே சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் போலீசார் மீது கையில் கிடைத்த பொருட்களை வீசினார்கள். போலீசார் மீது மணல், செருப்பு வீசப்பட்டது.  திருவல்லிக்கேணி சாலைப் பகுதியில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது.

கண்ணீர் புகை குண்டு வீச்சு
இதற்கிடையே சென்னை அவ்வை சண்முகம் சாலையில் கண்ணீர் புகை குண்டு வீசி கலைக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவங்களை அடுத்து சென்னை மெரினா பகுதியில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.