கஷ்மீரில் தீவிரவாதிகள் போன்று வேடமிட்டு கொள்ளையடித்த இராணுவ வீரர்கள்தெற்கு கஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் போன்று வேடமிட்டு கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இராணுவ வீரர்கள் என்று தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களும் கஷ்மீரை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி பர்வேஷ் அஹமத் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முசஃப்பர் அஹமத் மற்றும் நிசார் அஹமத் ஆகிய மற்ற இரண்டு நபர்களையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கேரீவன் மல்போரா கிராமத்தை சேர்ந்த மருத்துவர் பிலால் பேய்க் என்பவரது புகாரின் அடிப்படையில் காசிகுந்த் பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மருத்துவர் பிலால் தனது புகாரில், ஞாயிறு அன்று தான் ஒரு மாநாடு தொடர்பாக வெளியே சென்றிருந்த போது தங்களை ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு இருவர் தங்கள் வீட்டில் புகுந்ததாகவும், அவர்கள் வீட்டில் இருந்தவர்களிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்கள் ஏந்தி வீட்டிற்கு வந்தவர்கள் தன்னை தேடியதாகவும், தனது சகோதரி மற்றும் அவரது கணவர் தான் மாநாடு ஒன்று தொடர்பாக டில்லி சென்றுள்ளதாக கூறவே வீட்டில் இருந்த ₹32,000  ஐ எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளார். இந்த இரண்டு பேரில் ஒருவர் தனது முகத்தை மறைத்துக் கொண்டும் மற்றவனின் முகம் தெளிவாக தெரியும்படியும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவனை பிலாலின் சகோதரி அடையாளம் காணவே காவல்துறை அவரை கைது செய்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொருவனையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்நிலையில் பிலாலின் அண்டை வீட்டுக்காரரான இராணுவ வீரர் முஹம்மத் டெலி தன்னுடைய குடும்பத்துடன் பிலாலை சந்தித்து இந்த கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தன்னுடையது என்பதால் தனது வேலை பறிபோய்விடும் என்றும் அதனால் இந்த வழக்கை திரும்பப் பெறுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை பிலால் காவல்துறையினரிடம் தெரிவிக்கவே டெலியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் மேலும் ஒரு இராணுவ வீரரின் பெயரை டெலி தெரிவித்துள்ளார். இவர்கள் இது போன்று பல கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.