சிரியாவில் போராடுபவர்கள் யார் ? தெரிந்து கொள்ள சில தகவல்கள்.சிரியா யுத்தம் என்பது இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்பு ஏற்பட்ட மிகவும் சிக்கலான பிரச்சினை. சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளின் வெவ்வேறான அஜெண்டாக்கள் ஒருபக்கமிருக்க இந்த உள்நாட்டு யுத்தத்தில் ஆயுதம்தாங்கிய எந்ததெந்த தரப்புக்கள் யார் யாருக்கு எதிராக எங்கெங்கே யுத்தம் செய்கிறார்கள் என்பது பலருக்கும் ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

சிரியா உள்நாட்டு யுத்தத்தை பொறுத்தவரை நான்கு ஆயுதம் தாங்கிய தரப்புக்கள் சம்பந்தப்படுகின்றன.

1. சிரியா இராணுவம் மற்றும் அதனோடு இணைந்து செயல்படும் மிளிஷியாக்கள் என்று அழைக்கப்படும் துணைஇராணுவ குழுக்கள்

இந்த தரப்பிற்குள் பஷருல் அசாத் அரசின் சிரியா அரச இராணுவத்துடன், தேசிய பாதுகாப்பு படை (National Defense Force- NDF) எனப்படும் துணை இராணுவப்படை,  லெபனான் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரானிய அரசின் புரட்சி இராணுவம் என்று அழைக்கப்படும் IRGC என்பன முக்கியமானவை.  இதற்கு மேலதிகமாக ஈராக்கின் ஷியா மிளிஷியாவன கதாயிப் ஹிஸ்புல்லாஹ், பஷருல் அசாதின் தம்பியான மாஹிர் அசாத்தின் தலைமையில் செயல்படும் குடியரசு படை மற்றும் வெள்ளைவான் கடத்தல் குழுவான நுஜாபா எனும் சியா மிளிஷியா (ஜனாதிபதிகளின் தம்பிகளுக்கு வெள்ளைவான் குழுக்கள் இருக்கணும் என்பது எழுதப்படாத விதியா என்ன :D  ) , சிரியாவில் இருக்கும் சில பாலஸ்தீனர்களால் உருவாக்கப்பட்ட லிவா உல் குத்ஸ் மற்றும் சில மிளிஷியா குழுக்கள்

இவர்களுக்கு இராணுவ மற்றும் அரசியல் ரீதியில் உதவியளிக்கும் நாடுகள் :- ரஷ்யா, ஈரான், சீனா மற்றும் எகிப்து

கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்கள் (Red Colour) - தலைநகர் டமாஸ்கஸ், சமீபத்தில் கைப்பற்றிய அலெப்போ, சிரியா புரட்சி உருவாகிய தர்ரா, ஹாமா,ஹோம் மற்றும் அசாத்தின் சொந்த மாகாணமாக லட்டாக்கியா மற்றும் தாயிஷ் சோரின் ஒரு பகுதி.

2. அசாத் அரசுக்கு எதிரான எதிரணி என்றழைக்கப்படும் போராளி குழுக்கள்/கிளர்ச்சிக்குழுக்கள்

சிரியாவில் அசாத் அரசு கவிழ்க்கப்படவேண்டும் என்று போராடும் நூற்றுக்கணக்கான ஆயுத மற்றும் அரசியல் அமைப்புக்கள் இந்த தரப்புக்குள் உள்ளடங்கப்படும். அவர்களின் செயல்பாடு மற்றும் நோக்கங்களை வைத்து இந்த குழுக்களை மேலும் இரண்டு வகையாக பிரிக்கலாம்

A. FSA என்று அழைக்கப்படும் சிரியா சுதந்திர இராணுவம்/ Free Syrian Army.
சிரியா இராணுவத்தில் இருந்து விலகிய இராணுவ அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் சிரியா அரசுக்கும் இராணுவத்திற்கும் எதிராக சிரியா புரட்சியின் ஆரம்பம் தொட்டு உருவாக்கப்பட்ட அமைப்பு.

B. FSA இன் தலைமைத்துவத்திற்குள் வராத ஆனால் அசாத் அரசுக்கு எதிராக போராடும் சலபிய ஆயுத அமைப்புக்கள். இவற்றுள் முக்கியமானவை அல்கைதாவின் சிரியா கிளையாக இயங்கிய ஜப்ஹத் அன் நுஸ்ரா அல்லது ஜப்ஹத் பத்ஹல் ஷாம் (JFS), அஹ்ரார் அஷ் ஷாம், ஜைசுல் இஸ்லாம்,

இந்த எதிரணியை பொறுத்தவரை தனித்தனி இயக்கங்களாக இயங்கினாலும் முக்கியமான யுத்தங்களில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இயங்குவார்கள்.

உதவியளிக்கும் நாடுகள் – அமெரிக்கா (ஒரு சில குழுக்களுக்கு) மற்றும் துருக்கி, சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஜோர்தான்

கைவசம் இருக்கும் பகுதிகள் (Yellow Colour ) - இத்லிப் மாகாணம், வடக்கு அலெப்போவின் கிராமபுறங்கள், டமஸ்கசின் புற நகரங்களான கிழக்கு கௌத்தா, வாதிபராத்தா, யர்மூக் ,  ஹாமா மாகாணத்தின் சில பகுதிகள் மற்றும் தெற்கு சிரியாவின் பகுதிகள்.


3. குர்திய போராளிகள்

YPG என்று பரவலாக அழைக்கப்படும்  குர்திய போராளிகளால் உருவாக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு படை. தற்போது அரபு போராளிகளும் இவர்களுடன் இணைந்து இருப்பதால் தற்போது இவர்களை SDF – Syrian Democratic Forces என்று அழைக்கிறார்கள்.

சிரியாவின் வடக்கில் துருக்கிய எல்லையில் இருக்கும் பெரும்பாலான குர்திய பிராந்தியங்கள் இவர்களின் கட்டுப்பாடுத்தில்தான் இருக்கிறது (Purple Colour). குர்திய மக்களுக்கான ரோஜாவா எனப்படும் தனிநாடு அல்லது சுயாட்சி என்பதே இவர்களின் இலக்கு.

இவர்களுக்கு அமேரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மாற்றும் ஜெர்மனி போன்றவை ஆதவளிக்கின்றன.  

4. தாயிஷ் என்று அழைக்கப்படும் ஐஸ்ஐஸ்

அபு பக்கர் பக்தாதியின் தலைமையில் இயங்கும் அமைப்பு. தங்களது கட்டுப்பாட்டு பகுதிகளை கிலாபத் என்று  2014 இல் சுயமாக பிரகடனப்படுத்தியிருந்தார்கள். அவர்களின் தலைநகரான ரக்கா, தாயிஷ் சோரின் ஒரு பகுதி, அல்பாப், யார்மூக்கின் ஒரு பகுதி, மற்றும் பல்மைராவுடன் கிழக்கு சிரியாவில் இருக்கும் பாலைவனப்பகுதிகள் போன்றவை இவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. (Black Colour)

இந்த நான்கு தரப்புக்களும் ஒவ்வொன்றும் ஏனைய மூன்று தரப்புக்கும் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் எதிரியாகவே இயங்குகின்றன. எந்தளவுக்கு என்றால் ஏதாவது ஒரு தரப்பு இன்னொரு தரப்புடன் சண்டையிடும் போது சண்டையில் ஈடுபடாத ஏனைய இரு தரப்புக்களும் அந்த சண்டையை மூட்டிவிடும் செயல்பாடுகளில் நேரடியற்ற வகையில் ஈடுபடும் (Opportunity Cost ? :p ). இதில் ஒரு தரப்பு வலுவிழந்தவுடன், அந்த  வலுவிழந்த தரப்பின் பலவீனமான பகுதிகளின் மூன்றாவது தரப்பு  சண்டையை ஆரம்பிக்கும். இப்படி தனது தலைக்கு மேல்  கத்தி தொங்கிக்கொண்டு இருந்தாலும் அதனைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் தனது கையில் துப்பாக்கியுடனும் எதிரியை குறிவைத்துக்கொண்டு வட்டமடிக்கும் ஒரு  விசித்திர களமே சிரியா உள்நாட்டு யுத்தமாகும்.

 தில்ஷான் முகம்மத்-
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.