குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் துளிர்க்கும் நம்பிக்கை...இது காஷ்மீரத்து கதை...!காஷ்மீரில் பள்ளிக்கூடங்கள் எப்படியிருக்கும்? இந்தக் கேள்வியைப் படித்ததும் உங்களுக்குப் பல விஷயங்கள் தோன்றி மறையும். பாவம், அங்குள்ள குழந்தைகளால் சரியாகப் படிக்க முடியுமா என்ற கேள்வியும் கட்டாயம் இருக்கும். ஆனால், அந்த யுத்த பூமியில் ஒரு மாணவி 500-க்கு 498 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார் என்றால், எவ்வளவு பெரிய விஷயம்? அந்தச் சுவாரஸ்யமான தகவல் இதோ...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நில உரிமை தொடர்பான பிரச்னை, சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை தொடர்ந்து நடந்துவருகிறது. இந்தப் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் ஜம்மு- காஷ்மீர். தொடர் வன்முறை, கலவரம் போன்றவற்றால் போர்க்களம்போல இருக்கிறது காஷ்மீர். அங்கு அடிக்கடி நடைபெறும் கலவரங்களால் அங்குள்ள நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயல்பாக இயங்குவதே இல்லை. இந்தச் சூழ்நிலையில், காஷ்மீரைச் சேர்ந்த ஷாஹீரா என்ற மாணவி தனது சி.பி.எஸ்.சி என்னும் 12-ம் வகுப்புத் தேர்வில் 500-க்கு 498 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

ஹிஸ்புல் - முஜாஹிதீன் போராளி, பர்கன் வாணி கொல்லப்பட்ட பிறகு... 4 மாதங்கள் காஷ்மீரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. பர்கன் வாணி படித்த அதே பள்ளியில்தான் ஷாஹீராவும் படித்தார்.  கடந்த வருடம் 27 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காஷ்மீரில் நடந்த கலவரத்தில் தாக்கப்பட்டன. அதனால், அனைத்துப் பள்ளிகளையும் 4 மாதங்களாக மூடியே வைத்திருந்தனர். இத்தனைப் பிரச்னைகளுக்கு இடையிலும் அவர் முதல் மதிப்பெண் எடுத்துச் சாதனைப் படைத்துள்ளார்.

காஷ்மீரில் நடக்கும் கலவரம் மற்றும் மாணவர்களின் போராட்டங்களைத் தாண்டியும் அரசாங்கம் 10-வது மற்றும் 12-வது வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்த முடிவுசெய்தது. முதலில் பாடப் பகுதியில் இருக்கும் 50 சதவிகித பாடத்துக்கானத் தேர்வை நடத்திவிட்டு, முழுத் தேர்வையும் மார்ச் மாதம் நடத்த முடிவுசெய்தது. இந்த வகையான செயல்பாட்டுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஒப்புதல் தெரிவித்த நிலையில், தேர்வுகள் நடத்தப்பட்டன.

தேர்வில் கலந்துகொண்ட பல மாணவர்கள் மீது கற்கள் வீசித் தாக்கி ஒரு பிரிவினர், தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல மாணவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த ஷாஹீரா ஒரு பிரபல ஊடகத்தில் பேசியதாவது, ‘‘நான் இந்த மதிப்பெண் எடுத்ததற்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன். இந்த நேரத்தில், என்னுடைய ஆசிரியர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘நீட்’ தேர்வு எழுதி, அதிலும் நல்ல மதிபெண்கள் எடுப்பேன். என் தந்தை, என்னைத் தொடர்ந்து படிக்கச் சொல்லி வற்புறுத்தியதால்தான் இந்த மதிப்பெண் எடுக்க முடிந்தது’’ என்று உற்சாகத்துடன் பதிலளித்திருந்தார்.

வன்முறையும்... கலவரமும் ஒருவரை, தங்கள் சாதனை படைப்பதில் இருந்து தடுக்க முடியாது என்பதை உணர்த்தியுள்ளார் மாணவி ஷாஹீரா. துப்பாக்கிச் சத்தங்களும்... பீரங்கி முழக்கங்களும் இன்னும் முழுவதுமாக அங்குள்ள மாணவர்களின் செவிகளில் கேட்காமல் இருந்தால், இன்னும் பல ஷாஹீராக்கள் உருவாகுவார்கள் என்பது நிச்சயம்.

மேலும், பல துறைகளில் சாதிக்க வாழ்த்துகள் ஷாஹீரா.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.