முத்துப்பேட்டையில் முன்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய சேதுமணி மாதவனுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை- தஞ்சை கோர்ட்டு தீர்ப்புபெண் என்ஜினீயரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

தஞ்சை காவேரி நகரை சேர்ந்தவர் ரவிராஜ். இவர் 2007-ம் ஆண்டு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் 3 பேர் தன்னிடமும், தனது நண்பரிடமும் பிரபல நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்து விட்டதாக கூறி இருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை மருத்துவகல்லூரி போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இது குறித்து தஞ்சையை அடுத்த துறையுண்டார்கோட்டையை சேர்ந்த ஜானகிராமன், கோவை வடவெள்ளியை சேர்ந்த பெண் என்ஜினீயர் அகிலா என்ற அகிலாண்டேஸ்வரி (வயது32), இளையராஜா ஆகிய 3 பேர் மீது தஞ்சை மருத்துவகல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சேதுமணிமாதவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் ஜானகிராமன், இளையராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதைத்தொடர்ந்து அகிலாண்டேஸ்வரியை விசாரணைக்கு ஆஜராக கோவையில் இருந்து தஞ்சைக்கு வருமாறு இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் 16-11-2007 அன்று அகிலாண்டேஸ்வரி தஞ்சைக்கு வந்தார்.

அப்போது இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன், விசாரணைக்காக அகிலாண்டேஸ் வரியை தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்க வைத்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் 19-11-2007 அன்று அகிலாண்டேஸ்வரி தான் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை

இது குறித்து தஞ்சை நகர தெற்கு போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் 20-11-2007 அன்று அகிலாண்டேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக, தஞ்சை மருத்துவகல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சேதுமணிமாதவன், போலீஸ் ஏட்டு கணேசன், அரசு ஊழியர் பாலு என்ற பாலசுப்பிரமணியன் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு 15-2-2008 அன்று தஞ்சை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை விசாரித்து 28-10-2009 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற போது பாலசுப்பிர மணியன் இறந்து விட்டார்.

10 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவனுக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 409-ன் கீழ் (அரசு ஊழியராக இருந்து நம்பிக்கை துரோகம் செய்தல்) 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், இந்திய தண்டனை சட்டம் 343 பிரிவின் கீழ் (சட்டத்துக்கு புறம்பாக அடைத்து வைத்தல்) 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், 120 (பி) (கூட்டுசதி செய்தல்) 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார்.

இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் சேதுமணிமாதவன் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் கட்ட வேண்டும். இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன் தற்போது மதுரை தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் ஏட்டாக இருந்த கணேசன் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.