சவுதியில் 90 நாட்கள் பொது மன்னிப்பு அறிவிப்பு !சவுதி அரேபியாவில் எதிர்வரும் 2017 மார்ச் 29 ஆம் தேதி (ரஜப் 1, ஹிஜ்ரி 1438) புதன்கிழமை முதல் '90 நாட்கள் பொது மன்னிப்பு' காலம் துவங்குவதாக மன்னர் சல்மான் அவர்களின் ஒப்புதலுடன் சவுதியின் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகிய பொறுப்புக்களை வகிக்கும் பட்டத்து இளவரசர் முஹமது பின் நாயிப் அவர்கள் அறிவித்தார்.

இந்த பொது மன்னிப்பு காலத்திற்குள் ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது சட்டத்திற்குட்பட்டு தங்கள் நிலையை முறைப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையேல் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் மீது கடும் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் பொது மன்னிப்புக் காலத்தை தொடர்ந்து அதிரடி சோதனைகளும் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1435 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை தொடர்ந்து சுமார் 2.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ஹஜ், உம்ரா, ஜியாரா, டிரான்ஸிட் விசாக்களில் வந்து சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் நேரடியாக விமான நிலையம், கப்பல் துறைமுகம், தரைவழி எல்லைப்பகுதி நுழைவாயில்கள் வழியாக தகுந்த ஆவணங்களுடன் வெளியேறலாம் என்றும் இதற்காக சவுதியின் எந்த அரசு அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டியதில்லை.

அதேவேளை வேலைவாய்ப்பு விசாக்களில் வந்தவர்கள், இகாமா சட்டங்களை மீறியவர்கள், தொழிலாளர் மற்றும் புகலிட சட்டங்களை மீறியவர்கள் தொழிலாளர் அமைச்சகம் அல்லது பாஸ்போர்ட் துறையின் இணையதளங்களில் கூறப்பட்டுள்ளவாறு பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்று நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகளை உடனே துவங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரை அனுமதி நடைமுறைகளை மீறி ஹஜ் செய்தவர்கள் மற்றும் பணியிடத்திலிருந்து ஓடிப்போனவர்கள் யாவரும் தங்களுக்கு அருகிலுள்ள 'இதாரத் அல் வாபிதீன்;' எனும் வெளிநாட்டவர்களுக்கான அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். அதேபோல் எத்தகைய பயண ஆவணங்களும் இல்லாதவர்கள் உடன் தங்கள் நாட்டுத் தூதரகங்களை தொடர்பு கொண்டு அதற்குரிய ஏற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொது மன்னிப்பு காலத்திற்குள் முறைப்படி வெளியேறியவர்கள் மீண்டும் சவுதிக்குள் வரவும் பணிபுரியவும் தடை செய்யப்பட மாட்டார்கள் எனவும், விமான நிலையங்களில் இவர்களின் கைரேகைப் பதிவுகளும் பதிவு செய்யப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
 

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.