பேரினவாதம் இல்லாத அரசாங்கம் வருமா? இன்னலின்றி முஸ்லிம்கள் வாழ முடியுமா?இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவருவதற்கு ஆதரவளித்து, வாக்களித்த மக்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்க முடியும். ஆனால் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை நான் மஹிந்தவின் ஆட்சியை வீழ்த்தி, மாற்று அரசாங்கம் ஒன்றினைக் கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானத்திற்கு வருவதற்கு பின்வரும் காரணங்கள் உந்துசக்தியாக அமைந்திருந்தன.

மஹிந்தவின் அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அவரது இரண்டாம் பதவிக்காலம் பாரிய விழளவுகளைத் தரக்கூடிய முஸ்லிம் விரோதப் போக்குகளை கடைப்பிடித்திருந்தது என்ற ஒரு பலமான குற்றச் சாட்டு பெரும்பபாலான முஸ்லிம்களிடம் காணப்பட்டிருந்தது. இந்தக் கருத்து உருவாக்கம் வேரூன்றுவதற்கும் பிரதானமாக அமைந்தவைகள் பின்வருவனவையாகும்.

முஸ்லிம்களின் மதக் கடமையை நிறைவேற்றுவதில் முக்கிய இடம்வகிக்கின்ற பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை, ஹலால் விகாரத்தில் தலையீடு செய்தமை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களுக்குள் புத்தர் சிலைகளை நிறுவியமை, மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்களை கபளீகரம் செய்தமை போன்றவற்றை முன்னுரிமைப்படுத்திக் குறிப்பிடமுடியும்.

பொதுவாக முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற பல்வேறு வகையான நெருக்கடிகளையும் தாங்கிக் கொள்வதற்கு அல்லது பொறுத்துப் போவதற்கு முஸ்லிம்கள் ஒருபோதும் பின்வாங்குவதில்லை. அதே நேரம் தங்களது மதக் கடைமைகளுக்கு இடையூறாக தடைகளைக் கொண்டுவருகின்ற சந்தர்ப்பத்தில் பணிந்து போகின்ற பண்பைக் கொண்டவர்களாகவும் முஸ்லிம்கள் இல்லை.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களது எந்தச் செயற்பாட்டிலும் பார்க்க முன்னுரிமை மதக்கிரியைகளுக்கு வழங்குவதாகும். இது நமது இலங்கையில் வாழும் முஸ்லிம்களானாலும் சரி உலகில் வேறெந்தப் பாகத்திலும் வாழும் முஸ்லிம்காளானாலும் சரி அல்லது இந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்ற தன்மையை நாம் நிதர்சனமாகப் பார்க்க முடியும். ஆக மதத்திற்குப் பிற்பாடே மற்ற அனைத்தையும் நோக்குகின்ற கூறு முஸ்லிம்களின் பிறப்புரிமை போன்றே அவர்களிடம் குடி கொண்டிருக்கின்ற ஓர் அம்சம் என்பதை மிகத் தெளிவுபடுத்துகின்றது.

இந்த நிலையில்தான் மஹிந்தவின் இரண்டாவது பதவிக் காலத்து அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்டிருந்த பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும், உபயோகங்களையும் கருத்தில் கொள்ளாது, பல்வேறு இன்னல்களைக் கொடுக்க முற்பட்டது. ஹலால் விவகாரம், பள்ளிவாசல் தாக்குதல் என்பனவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து மஹிந்தவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்கின்ற எண்ணப்பாட்டை, முஸ்லிம் கட்சிகள் முன்வருவதற்கு முன்பே இம்மக்கள் இத்தீர்மானத்திற்கு வந்திருந்தனர். இந்த இக்கட்டான நிலைதான் நமது பல முஸ்லிம் கட்சிகள் மஹிந்தவின் அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.

மஹிந்தவின் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நன்மை பயக்குமா ரணிலோடு இணைந்த அரசாங்கம் இதனை விட சாதகமான விளைவுகளை நமக்குத் தருமா என்ற ஒப்பிட்டு ஆய்வுகளை நிகழ்த்தாதும், நிறுத்துப் பார்க்காதும் மஹிந்தவின் ஆட்சியை இல்லாமல் செய்வதன் மூலமே முஸ்லிம் சமூகம் நிம்மதியடைய முடியும் என்ற நம்பிக்கையை முன்னிறுத்தினர். இந்த முன்னெடுப்பு ஒரு பிழையான நிலையை நமக்கு ஏற்படுத்திவிட்டதா என்று அங்கலாய்க்கவும் கவலைப்படவும் நல்லாட்சியை விரும்பிய முஸ்லிம்களை இன்று கொண்டுவந்திருக்கின்றது.

ஏன் இவ்வாறு வருந்துகின்ற நிலையை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்தியிருக்கின்றது என்று நோக்கினால், எந்த நோக்கத்திற்காக மஹிந்தவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்குத் துணையாக அல்லது நமக்குப் பாதகம் என்று கருதினோமோ அந்த விவகாரங்களெல்லாம் இன்று சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அன்று மஹிந்தவின் அரசாங்க காலத்தில் முஸ்லிம் விரோதப் போக்குகள் பல முனைப்புக் கொண்டாலும் அவையெல்லாம் உடனடியாக அமுலுக்கு வருவதில்லை. பல விடயங்ககள் முஸ்லிம்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டு, சில விடயங்கள் அரங்கேற்றப்பட்டாலும் அதற்கும் சில மாற்றீடுகளை முன்வைத்த நிலையை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.

இதற்கு நல்லதொரு உதாரணமாக தம்புள்ளைப் பள்ளிவாசல் பிரச்சினையை நாம் எடுத்து நோக்க முடியும். நகரத்திட்டமிடல் அடிப்படையில் இப்பள்ளிவாசல் நகர்த்தப்பட வேண்டும் என்று மஹிந்தவின் அரசாங்க காலத்தில் சொல்லப்பட்டாலும் அதற்கு மாற்றீடாக வேறு ஒரு இடத்தில் விரிவான காணியில் புதிய பள்ளிவாசல் ஒன்று நிர்மானித்து தருவதாகவும் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. இதனை முஸ்லிம் சமூகம் அதன் பின்விளைவுகளைக் கருத்திற் கொண்டு ஏற்காது தொடர்ந்தும் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்தவண்ணமே இருந்தது.

ஆனால் இன்றைய நல்லாட்சிக்கு முன்னமைந்த நூறு நாள் (என்றாலும் சுமார் இருநூறு நாள் நடைமுறையில் இருந்த) அரசாங்கத்தின்போது நகரத்திட்டமிடல் அமைச்சராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டிருந்தார். அப்படி இருந்தும் அதுவும் அந்த அரசாங்கத்தைத கொண்டுவருவதற்கும் முஸ்லிம் மக்கள் பாரிய பங்குகளை அளித்திருந்தனர் என்பது வெளிப்படையானது.

இந்நிலையில் கூட தம்புள்ளைப் பள்ளிவாசல் விகாரம் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக எந்த முயற்சிகளையும் சரியாக முன்னெடுக்காமையினால் இன்று ”பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டு, தம்புள்ளைப் பள்ளிவாசலுக்கான மாற்றுக் காணிகளைக்கூட பெறுவதிலும் பல்வேறு சங்கடங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான சவால் நிறைந்த ஒரு நிலைப்பாட்டைத்தான் முஸ்லிம் சமூகம் இந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்திலும் எதிர்கொள்கின்றனர் என்றால், நம்மைப் பொறுத்தவரை இந்த அரசாங்கம் மிக பொல்லாததாக அமைகின்றதோ என்கின்ற சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்துவதாக பின்வரும் சம்பவம் எம்மை சிந்திக்கத் தூண்டுகின்றது.

முன்னர் மஹிந்தவின் அரசாங்க காலத்தில் மிகவும் பரபரப்பாகவும் கடும் சர்ச்சைகளையும் தோற்றுவித்த முஸ்லிம்களின் பூர்வீகக் காணியில் அமைந்திருந்த கருமலையூற்று பள்ளிவாசலும் அதனை சுற்றி வாழ்ந்த முஸ்லிம் குடியிருப்பு நிலங்களும் காணி நிலங்களும் யுத்தத்தின் காரணத்தினால் கைவிட்டு வெளியேறிய நிலையில் இராணுவத்தினர் அப்பகுதியை கையகப்படுத்தியிருந்தது.

யுத்த சூழல் மறைந்ததன் பிற்பாடு அப்பகுதி முஸ்லிம்களுக்கு விடுவித்து வழங்கப்படவேண்டும் என்று கோரி நின்றனர். இதற்கு அன்று மஹிந்தவின் அரசாங்கத்தில் 2014ஆம் காலப்பகுதியில் இந்தக் கபளீகரம் செய்யப்பட்ட நிலங்களின் பெரும்பகுதியை விடுவிப்பதாகவும் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசலை புனர்நிர்மானம் செய்து தருவதாகவும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஓர் இணக்கம் காணப்பட்டிருந்தது.

இத்தகைய சாதக நிலைகைளைக்கூட முஸ்லிம் சமூகம் கருத்திற் கொள்ளாது, மஹிந்த அரசாங்கத்தை இல்லாமல் செய்வதிலும் நல்லாட்சியைக் கொண்டுவருவதிலும் கரிசனை கொண்டு செயலாற்றியிருக்கின்றனர் என்றால் இந்த நல்லராசாங்கத்தின் மீது எவ்வளவு தூரம் நம்பிக்கையையும் பற்றுதலையும் வைத்திருந்திருப்பர் என்பது புரியக்கூடியதே. இம்மக்களின் இந்த நல்லெண்ணத்தைக்கூட காப்பாற்றும் வகையில் இன்றைய நல்லாட்சி் அரசாங்கம் நடந்துகொள்ளவில்லை என்பதைத்தான் இன்றைய கருமலையூற்றுப் பிரச்சினைகூட எடுத்துக் காட்டுகின்றது.

இந்தக் கருமலையூற்றுப் பள்ளிவாசல் என்பது மிகவும் தொன்மையான பாரம்பரிய பள்ளிவாசலாகும். இது 2ஆம் உலக யுத்த காலப்பகுதிகளில் கூட புகழ்பெற்று விழங்கிய ஒன்றுமாகும். அத்தகைய ஒரு அடையாளச் சின்னத்தையும் ஒரு நிலப்பரப்பையும் காணி எடுத்தல் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் கருமலையூற்று பள்ளிவாசல் அமைந்துள்ள காணி உட்பட அதனைச் சூழவுள்ள 4.65ஹெக்டேயர் பரப்பளவான காணியை இராணுவத்தினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் ஒன்றை திருகோணமலைப் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் விடுத்துள்ளார்.

”முஸ்லிம்கள் பூர்வீகமாகவும் பாரம்பரியமாக வாழ்ந்ததும் விவசாயம் செய்து வந்த பகுதிகளையும் பள்ளிவாசலையும் கொண்டிருக்கும் இக்காணிகளை சுவீகரிப்பதற்கு சூட்சுமமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு நான் இந்த சபையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளை இரகசியமாக முன்னெடுப்பதை கைவிட வேண்டும்” என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த வியாழக்கிழமை 23.03.2017 பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறான நிலைகள் தொடர்ந்தும் இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டுக்கொண்டே வருகின்றது. அண்மையில் வில்பத்துவ பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகளையும் காடு என்று அடையாளப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலுக்கு ஒப்புதலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 24.03.2017இல் கையொப்பமிட்டு உறுதி செய்துள்ளார். இதன் இன்னொரு கோணமாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு இதுவரை விசாரிக்கப்படாத 66 முறைப்பாடுகள்கூட கிடப்பில் காணப்படுகின்றது.

இப்படி எந்த விடயத்தை எடுததக்கொண்டாலும் அன்றைய மஹிந்தவின் அரசாங்கக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுத்தப்பட்ட செயற்பாடுகளை ஒத்த அநீதிகள் தொடர்ந்தேச்சியாக நடந்தவண்ணம் இருப்பதை நாம் அவதானிக்க முடியும். அப்படியானால் இந்த நல்லாட்சி அரசாங்கம் கூட முஸ்லிம்கள் விடயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதில் இருந்து மாறப்போவதில்லை என்பதைத்தான் எடுத்துக்காட்டுகின்றது.

இவ்வாறான முஸ்லிம் விரோதப் போக்குகள் குறிப்பாக சிங்கள – பௌத்த ஆதிக்க சக்திகளின் கடும்போக்குகளுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கமும் கைகொடுத்து உதவுகின்றது என்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறக்காமம் பிரதேசத்தை அண்டிய குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள மலையில் புத்தரின் சிலையை நிறுவி இது ஒரு சிங்கள பிரதேசம் என்ற ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி, அதனை அடையாளப்படுத்துவதற்கு முன்னெடுத்த அதி உச்ச இனச் செயற்பாடாகும். இதன் பின்னால் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் பங்குதாரரான ஓர் அமைச்சர் பகிரங்கப் பின்னணியில் இருந்து செய்ற்பட்டதையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.

முஸ்லிம் சமூகத்தை இம்சைப்படுத்துவதில் இன்றைய நல்லாட்சி அரசாங்கம் நேரடியாகப் பங்காற்றுவது போல் காண்பிக்காது விட்டாலும் அதனை செய்வதற்கு துணைபுரிகின்ற ஒரு கோணத்தை நாம் காணலாம். இவ்வாறான நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இன்றைய நல்லாட்சி வேண்டாம் இதுவும் ஒரு மஹிந்த அரசாங்கத்திற்கு ஒப்பானதுதுதான் என்ற முடிவிற்கு முஸ்லிம் சமூகம் வருவது வெகு தூரத்தில் இல்லை என்றுதான் குறிப்பிட வேண்டும்.


முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை மஹிந்தவின் அரசாங்கமாக இருந்தாலும் சரி மைத்திரியின் அரசாங்கமாக இருந்தாலும் சரி ரணிலின் அரசாங்கம் என்றாலும் சரி அந்த அரசாங்கங்களில் முஸ்லிம்களின் பிரசன்னம் அமைச்சர்களாக மற்றும் பிரதியமைச்சர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்புக் கொள்வது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருப்பதைப் பார்க்கின்றோம்.

அவ்வாறு இருந்தும் எந்த அரசாங்கங்களானாலும் முஸ்லிம்களுக்கு விரோதமாகச் திட்டமிட்டுச் செய்யப்படுகின்ற இனவிரோதப் போக்குகளைத் தவிர்ப்பதற்கான முன் முயற்சிகளை அரசாங்கங்கள் செய்யாமல் இருப்பது ஏன்? இதுபற்றி நாம் நமது கவனத்தைத் திருப்பவேண்டிய கட்டாயத்தை நமக்கு ஏற்படுத்துகின்றது.

உண்மையில் முஸ்லிம் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிந்து அனுப்புவதன் மூலம் நமது கடமைகைளச் செய்து முடித்துவிட்டடோம் இனி நமக்கு எந்த பிரச்சினையும் அணுகாது. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புகின்றோம். நமது நம்பிக்கை்ககுப் பாத்திரமாக நமது பிரதிநிதிகள் அவர்கள் செயற்படுகின்றார்களோ இல்லையோ தங்களின் அமைச்சுப்பதவிகளையும் வேறு சுகபோகங்களையும் உறுதி செய்து கொள்வதில் காட்டுகின்ற ஆர்வத்தை, பிடிப்பை அதற்காக காட்டுகின்ற உரத்தை சரியாகப் பிரயோகித்து அடைந்துகொள்வதில் இருந்து விடுபடுவதில்லை.

ஆனால் முஸ்லிம் மக்கள்தான் இவர்களை நம்பி ஏமாந்துபோகின்றனர். இதற்கு நாம் செய்கின்ற ஒரேயொரு பரிகாரம் என்னவென்றால் அவரில்லாவிட்டால் இவர் இவரில்லாவிட்டால் அவர் என்று மாற்றி மாற்றி அரசாங்க ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் வாக்களித்துக்கொண்டே இருக்கின்றோம். இந்த அணுகுமுறமையினால் நாம் கண்ட பலன் என்ன என்றால் ஒன்றுமே இல்லை. அப்படியிருந்தும் இந்த தோல்வி கண்ட வழிமுறையில்தான் நாம் இன்னும் இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். பின் எப்படி நமக்கு முன்னகர்வுகள் பயன்கள் வருமென்று நம்ப முடியும்?

பௌத்த – சிங்கள ஆதிக்க சக்திகளின் இனவாத முனைப்புக்குள் பெரும்பாலான சிங்கள மக்கள் இல்லாதபோதும் குறித்த சிலருக்காக எமது நாட்டில் வருகின்ற அரசாங்கங்கள் அவர்கள் மீது கடிந்துகொள்ளாத ஒரு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றனர் என்றால் அதன் சூத்திரம் வேறெங்கோ இருக்க வேண்டும். இந்தவகையில் பார்க்கின்றபோது பௌத்த பிக்குகளின் சிலர் முஸ்லிம் விரோதப் போக்குகளின் பின்னால் இருப்பதன் அடிப்படையில் அவர்களை எதிர்த்து முழுமையாகச் செயற்பட முடியாத ஒரு இக்கட்டான நிலை நமது நாட்டில் வரக்கூடிய அனைத்து அரசாங்கங்களுக்கும் ஏற்படுகின்றது.

பௌத்த மகாநாயக்கபீடங்கள் இந்த பிழையான இனவாதத்தை முன்னிறுத்துகின்ற பிக்குகளை எதிர்த்து கூட்டு மொத்தமான அறிக்கைகளை வெளியிடுவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில நேர்மையாகச் சிந்திக்கின்ற பௌத்த குருமார்கள் கண்டித்து அறி்க்கைகள் விடுவதுடன் நின்றுபோய்விடும். ஆனால் இனவாதச் செயற்பாட்டோடு செயற்படுகின்ற பௌத்த பிக்குகள் மீது அரசாங்கரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமானால் அதனை மகாநாயக்க பீடங்கள் ரீதியாக கண்டித்துக் குரல் கொடுக்கின்ற ஒரு நிலைப்பாடும் காணப்படுகின்றது.

நமது நாட்டில் ஆட்சிக்கு வருகின்ற எந்த அரசாங்கமானாலும் அதற்குள்  சிங்கள – பௌத்த பேரினவாத ஆதிக்க கோட்பாடுகளை முன்நிறுத்தி இயங்குகின்ற அரசியல்வாதிகளின் பிரசன்னமும் பங்குபற்றுதலும் ஊடுருவி இருப்பதையும் நாம் அவதானிக்கலாம். மேற்சுட்டிக்காட்டிய இந்த இரண்டு நிலைப்பாடுகளும் நமது நாட்டில் அமைகின்ற எந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலும் தாக்கத்தைச் செலுத்தாது அல்லது விலகி இருக்க முடியாது என்பது கண்கூடு.

இப்படிப் பார்த்தால் எந்த அரசாங்கங்கள் வந்தாலும் முஸ்லிம்விரோதப் போக்குகள் முற்றுமுழுதான முடிவுக்கு வந்துவிடும் என்று நாம் நம்புவதோ அல்லது இவர்களை விட அவர்கள் அவல்லது அவர்களை விட இவர்கள் நன்மைபயப்பர் என்று நம்புவதோ ஒரு போதும் நமக்கான தீர்வாகி விட முடியாது. அப்படியென்றால் இதற்கு வழிதான் என்ன?

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவைர யாருடைய அரசாங்கம் நமக்கு முழுமையாக நன்மைபயக்கும் என்ற நம்பிக்யோடு ஆதரித்துக்கொள்கின்ற மனநிலையில் இருந்து விடுபட வேண்டும். மாறாக நம்மீது தொடரப்படுகின்ற போரினவாத நெருக்கடிகளை குறைப்பதற்கு அதிக சாதகத்தைக் கொண்டிருக்கின்ற போக்குக்கு உடந்தை உடையோர்களை ஓரளவு நாம் அடையாளப்படுத்தி அவர்களுடைய அரசாங்கத்தை உருவாக்குவதில் நாம் பங்களிப்புக்களை நல்க முன்வரவேண்டும். இந்த சாதகம் என்பது நமது கட்சிப்பலங்களுக்கு அப்பால் வரக்கூடிய அரசாங்கத்தலைவரோடு இருக்கின்ற நெருக்கமானதும் சினேகபூர்வமானதுமான நேச உறவுகளைக் கொண்ட முஸ்லிம் தலைமையையும் அதற்குரிய கட்சியையும் நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

இதற்கு வெறும் வாயளவு கர்ச்சித்தலையும் உணர்ச்சிவசப்படுத்தலையும் கொண்டவர்களாக அல்லாமல் நிதானமாகவும் காலசூழல்களைக் கவனத்திற்கொண்டு உள்ளால் நெருங்கிச் சத்தமின்றி காரியத்தைச் சாதித்துக்கொள்கின்ற திறமையுள்ள தலைமைகளை நாம் இனங்காண வேண்டும். உணர்ச்சிவசப்டுத்தியும் வீரவசனங்களுக்குள் வசீகரித்தும் சாத்தியப்டுத்தமுடியாத கோசங்களுக்குப்பின்னால் மயங்கியோ நமது வாக்கு ஆயுதத்தை பிரயோகிக்காது புத்திக்கூர்மையோடு நாம் நடந்துகொள்கின்ற சூழலையும், இணைத்து வெற்றியைப் பெறுவதற்குப் பங்காற்றுகின்ற ஆற்றல்களுக்குரியவர்களை சரியாகத் தெரிந்து கொள்ளாத வரை நம்மீது தொடர்கின்ற பேரினவாத அட்டூழியங்கள் ஒருபோதும் குறைந்துவிடப்போவதில்லை.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.