33 குற்றங்களையும் அபராத விபரத்தையும் வெளியிட்டது துபாய் முனிசிபாலிட்டி.வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்சின் பல்வேறு நகரங்களில் ஒன்றான டுபாய் நகரத்தை எப்போதுமே தூய்மையாகவும், நேர்த்தியாகவும், மிக அழகாகவும் வைத்திருப்பதற்கு டுபாய் ஆட்சியாளரும் நகரத்தின் நிர்வாகிகளும் தம்மை அர்ப்பணித்து வருகின்றமை உலகறிந்த விடயம். நாளுக்கு நாள் பல கோடி திர்ஹம்களை செலவு செய்து பல்வேறு பட்ட அலங்காரங்களை டுபாய் அரசு செய்து வருகின்றது.

பல்வேறு நாட்டவர்கள் தொழிலாளர்களாகவும், நிரந்தர குடியிருப்பாளர்களாகவும் வாழ்ந்து வரும் டுபாயில் நகரத்தை அசுத்தப்படுத்தும் வேலைகளிலும் பலர் ஈடுபடுவதுண்டு, நகரத்தை எப்போதுமே சுத்தமாக வைத்திருப்பது அரசின் பணி மட்டுமல்ல அது நகரத்தில் வாழ்கின்ற அத்தனை மக்களினதும் கடமை என்பதே டுபாய் அரசின் தாரக மந்திரம்.

நகரத்தை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பதில் பொதுமக்களும் பங்களிப்பு செய்யவேண்டும் என்று டுபாய் முனிசிபல்டி மக்களை அறிவுறுத்தியிருக்கின்றது, நகரத்தின் முக்கியமான பொது இடங்கள் சி சி டி வி கெமராவின் முக்கிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் பொது இடங்களை அசுத்தப்படுத்தும் விதமாக நடந்து கொள்கின்றவர்களுக்கு அதிகூடிய தண்டனைப்பணத்தை நடைமுறைப்படுத்தும் திட்டத்தையும் துபாய் முனிசிபாலிட்டி அமுல்படுத்தியிருக்கின்றது.

இதன் பிரகாரம் கீழ் குறிப்பிடப்படும் குற்றங்களுக்கு டுபாய் முனிசிபல்டி குறிப்பிடப்பட்டுள்ள தொகையை குற்றவாளிகளிடமிருந்து அறவிடும், 500 திர்ஹம் முதல் 100,000 திர்ஹம் வரை தண்டனைப்பணம் அமைகின்றது.

இலங்கையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் டுபாயில் வாழ்ந்து வருவதால் அவர்களையும் விழிப்புணர்வூட்டும் நோக்கில் இப்பதிவு எழுதப்படுகின்றது.

1. பொது வீதிகளில் கழிவுப்பொருட்களை வீசினால் தண்டனைப்பணம் 500 திர்ஹம்.

2. வாகனங்களில் இருந்து எரிபொருட்கள் கசிந்து வீதிகளில் ஒழுகினாலோ, வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் பாதுகாப்பான முறையில் மூடப்படாவிட்டாலோ தண்டப்பணம் 500 திர்ஹம்.

3. வீதியோரங்களில் சிறுநீர் கழித்தால் தண்டப்பணம் 500 திர்ஹம்.

4. பொது இடங்களில் துப்பினால் தண்டப்பணம் 500 திர்ஹம்.

5. சுயிங்கத்தை மென்றுவிட்டு பொது இடங்களில் துப்பிவைத்தால் தண்டப்பணம் 1000 திர்ஹம்.

6. குடியிருப்பாளர் கட்டிடங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் இருந்து அகற்றப்படும் கழிவுபொருட்கள் அவற்றை இடவேண்டிய பொருத்தமான இடங்களில் இடப்படாவிட்டால் தண்டப்பணம் 5000 திர்ஹம்.

7. கட்டிடங்களில் இருந்து கழிவு நீர் கசிந்தாலோ அல்லது கழிவு நீரை கொண்டு செல்லும் வாகனங்களில் இருந்து அவை கசிந்து வீதியில் ஒழுகினாலோ தண்டப்பணம் 10,000 திர்ஹம்.

8. நிறுவனங்களில் இருந்து அகற்றப்படும் கழிவு எண்ணெய்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் இருந்து அவை கசிந்து வீதியில் ஒழுகினால் தண்டப்பணம் 3000 திர்ஹம்.

9. கடலில் வீசப்படும் கழிவுப்பொருட்களுக்கு தண்டப்பணம் 500 திர்ஹம்.

10. மரங்களின் கழிவுகள், அல்லது தோட்டத்தின் கழிவுகளை பொருத்தமான இடங்களில் கொட்டாவிட்டால் தண்டப்பணம் 500 திர்ஹம்.

11. பொது இடங்களில் வைத்து கழுவப்படும் வாகனங்களுக்கு தண்டப்பணம் 100 திர்ஹம்.

12. குளிரூட்டிகளில் இருந்து கசியும் நீருக்கு தண்டப்பணம் 100 திர்ஹம்.

13. கழிவுப்பொருட்களை பொது இடங்களில் போட்டு எரித்தால் தண்டப்பணம் 1000 திர்ஹம்.

14. வீடுகளின், அல்லது நிறுவனங்களின் மொட்டை மாடிகளில், அல்லது பெல்கனிகளில், அல்லது பொது இடங்களில் பொருட்களை அடுக்கி வைப்பது, துணிகளை கழுவி காய போடுவது போன்ற குற்றங்களுக்கு தண்டப்பணம் 200 திர்ஹம்.

15. பொது இடங்களில், அல்லது நடை பாதைகளில் பொருட்களை குறுக்கே போட்டு போக்குவரத்து செய்யும் மக்களுக்கு தொந்தரவுகளை ஏற்படுத்தினால் தண்டப்பணம் 200 திர்ஹம்.

16. வாடகைக்கு வீடுகளை பெறுகின்ற குடியிருப்பாளர்கள் தங்களது வீட்டு கழிவுப்பொருட்களை இடுவதற்கு பொருத்தமான இடங்களை வழங்காவிட்டால் வீடு கொடுத்த நபருக்கு தண்டப்பணம் 1000 திர்ஹம்.

17. பொது இடங்களில் வைக்கப்பட்டு தனியார் நிருவனங்களால் அகற்றப்படும் கழிவு தொட்டிகள் கழிவகற்றலின் பின் பொருத்தமான இடத்தில் வைக்கப்படாவிட்டாலோ அல்லது அந்த கழிவுப்பொருட்கள் உரிய முறையில் அகற்றப்படாவிட்டாலோ தண்டப்பணம் 500 திர்ஹம்.

18. கட்டிடங்களின் உள்ளே துப்புரவு பணி செய்யும் ஊழியர்களை சரியான முறையில் முகாமைத்துவம் செய்யாவிட்டால் தண்டப்பணம் 500 திர்ஹம்.

19. தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், குடியிருப்பாளர் தொகுதி போன்றவைகள் தங்களின் கட்டிடங்களில் இருந்து அகற்றப்படும் கழிவுப்பொருட்களை இடுவதற்கு பொருத்தமான கழிவுத்தொட்டிகள் வழங்காவிட்டால் தண்டப்பணம் 1000 திர்ஹம்.

20. நிறுவனங்களில் இருந்து அகற்றப்படும் கழிவுப்பொருட்களுக்கு அதிகாரம் பெற்றவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்படாமல் பொருத்தமற்ற இடங்களில் அவை கொட்டப்பட்டால் தண்டப்பணம் 1000 திர்ஹம்.

21. நிறுவனங்களின் வாகன தரிப்பிடங்களில் நிகழ்த்தப்படும் செமினார், குறுகிய நேர பயிற்சி நெறிகள், குறுகிய நேர நிகழ்வுகள், போன்றவற்றுக்கு தண்டப்பணம் 500 திர்ஹம்.

22. ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கழிவகற்றல் ஒப்பந்தம் அதிகாரம் பெற்றவர்களினால் அனுமதிக்கப்படாமல் மூன்றாந்தரப்பினருக்கு கைமாற்றப்பட்டால் தண்டப்பணம் 5000 திர்ஹம்.

23. பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய வகையில் வாகனங்களில் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டால் தண்டப்பணம் 1000 திர்ஹம்.

24. உரியவர்களின் அனுமதியின்றி கழிவுத்தொட்டிகளை எடுத்து செல்லல் அல்லது இடமாற்றி வைத்தலுக்கான தண்டப்பணம் 200 திர்ஹம்.

25. கழிவுத்தொட்டிகளை கிண்டி அதிலிருந்து மீள் சுழற்சி செய்யும் பொருட்களை சேகரித்தால் தண்டப்பணம் 500 திர்ஹம்.

26. கழிவுத்தொட்டிகளை சேதப்படுத்தினால் தண்டப்பணம் 1000 திர்ஹம்.

27. கழிவகற்றும் முனிசிபல்டி வாகனங்களை நிறுத்தி அவற்றில் கழிவுப்பொருட்களை கொட்டினால் தண்டப்பணம் 1000 திர்ஹம்.

28. தனியார் வாகனங்களில் கொண்டு வரப்படும் முனிசிபல்டியின் கழிவு தொட்டிகளில் கழிவுப்பொருட்கள் இடப்பட்டால் தண்டப்பணம் 1000 திர்ஹம்.

29. சேகரித்து வைத்து அகற்றப்படும் கழிவுப்பொருட்களுக்கு தண்டப்பணம் 1000 திர்ஹம்.

30. வெற்றிலையில் தயார்படுத்தப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வது, கையாள்வது, களஞ்சியப்படுத்தி வைத்திருப்பது குற்றம் அதற்குரிய தண்டப்பணம் 50,000 திர்ஹம்.

31. முனிசிபல்டிக்கு உரிய பொருட்களை சேதப்படுத்தினால் தண்டப்பணம் 500 திர்ஹம்.

32. ரெடிமேட் கொங்கிரீட் கலவைகளை எடுத்து செல்லும் வாகனங்களில் இருந்து கொங்ரீட் கசிந்து வீதிகளில் ஒழுகினால் தண்டப்பணம் 50000 திர்ஹம்.

33. கழிவு நீர் பொது இடங்களில் வீசப்பட்டால் தண்டப்பணம் 100,000 திர்ஹம்.

மேற்கூறப்பட்ட குற்றங்கள் அதிகமானவைகளில் பெரிய பெரிய நிறுவனங்களே அதிகம் ஈடுபட வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்ற காரணத்தினால் சாதாரண தொழிலாளிகளாகிய நாங்கள் எங்களுக்கு என்ன என்று விலகிச்செல்ல முடியாது, மேற்கூறப்பட்ட குற்றங்கள் சிலவற்றில் சாதாரண தொழிளாலர்களாகிய நாங்களும் ஈடுபட சந்தர்ப்பமும் வாய்ப்புகளும் இருக்கின்றன ஆகவே நமக்கென்ன என்ற மனநிலையில் நாம் கடந்து செல்வோமாக இருந்தால் நிச்சயமாக இலங்கை நாணயத்தில் நாமும் பெருந்தொகை பணத்தை தண்டமாக செலுத்த வேண்டி வரலாம்.

சில வேளைகளில் நாம் செலுத்தும் தண்டப்பணம் நமது ஒரு மாத சம்பளமோ அல்லது அதற்கு கூடிய மாத சம்பளமாகவோ இருக்க கூடும் ஆகவே அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.