இலவச மாணவர் சேர்க்கை: பள்ளி அறிவிப்புப் பலகையில் தகவல்: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவுகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிகளின் அறிவிப்புப் பலகையில் தகவல் எழுதி பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிக், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி) நுழைவு நிலை, எல்.கே.ஜி., முதல் வகுப்பு ஆகியவற்றில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், ஆட்சியர் பொன்னையா பேசியது: பள்ளியில் நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கை செய்யப்படவுள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை, 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கை செய்யப்படவுள்ள எண்ணிக்கை ஆகியவற்றை பள்ளி தகவல் பலகையில் தெரிவிக்கப்பட வேண்டும்.

நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கைகள் மேற்கொள்ளப்படுவது சார்ந்த விண்ணப்பங்கள் இப்பள்ளியில் இணையத்தில் பதிவு செய்யப்படும் என்ற வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகை பள்ளியின் முகப்பில் அனைவருக்கும் தெரியும் வண்ணம் வைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் இச்சேர்க்கை விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது. 25 சதவீத ஒதுக்கீட்டிற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் அரசு அலுவலர் முன்னிலையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றோர், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை, மாற்றுத் திறனாளி, பழங்குடியினர், ஆதிதிராவிடர், அருந்ததியர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்ஸிம்) போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்க வேண்டும்.

பின்னர் 1 கி.மீ. தொலைவுக்குள் உள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து விதிப்படி சேர்க்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விதிப்படி சேர்க்கை மேற்கொள்ள இயலாத மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரம் உரிய காரணத்துடன் தகவல் பலகையில் தெரிவிக்கப்பட வேண்டும். சேர்க்கைக் கோரும் மாணவர்களிடம் முன்கூட்டியே கல்விக்கட்டணம் ஏதும் பெறக்கூடாது.
மேலும் சேர்க்கை மேற்கொண்ட பின்னரும் எல்கேஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை கல்விக்கட்டணம் ஏதும் பெறப்படக்கூடாது.
இக்கல்வியாண்டு முதல் பள்ளிக் கல்வித்துறை இணையதளமான www. dge.in.gov.in விண்ணப்பம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2017 ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இந்த வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக பெறும் அனைத்து வகுப்பினர்) சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் வாய்ப்பை பொது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் ராஜரத்தினம், செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் தமிழரசி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன், மெட்ரிக். பள்ளிகள் ஆய்வாளர் லோகநாதன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரவி உள்ளிட்ட கல்வித் துறை அதிகாரிகள், மாவட்டத்திலுள்ள அனைத்து மெட்ரிக். பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.